15 அக்டோபர் 2014

என்கவுன்டர் - யார் தந்த தைரியம்?

இன்று இரவு 8 மணிக்கு தந்தி டிவியின் 'ஆய்த எழுத்து' நிகழ்ச்சியில் 'என்கவுன்டர் கொலைகள்' பற்றிய நேரலை விவாதம் ஒளிபரப்பாகவுள்ளது. 2012ம் ஆண்டு மாமன்னர் மருதுபாண்டியர் நினைவேந்தல் தினத்தில் நடந்த கசப்பான சம்பவத்திற்கு பலி தீர்க்கும் விதமாக, வெள்ளைத்துரையால் என்கவுண்டரில் கொல்லப்பட்ட 'பிரபு - பாரதி - குமார்' உள்ளிட்ட அப்பாவிகளின் வரிசையில், இப்போது காளிதாசின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியான சையது முகமது பற்றியும் பேசுவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

கிட்டத்தட்ட எட்டு கோடி பேருள்ள தமிழ்நாட்டு மக்கள் தொகைக்கு சில ஆயிரம் காவலர்கள் மட்டுமே இருக்கின்றார்கள் என்பதே எதார்த்தமான உண்மை. அந்த சில ஆயிரம் காவலர்களுக்கு, சம்பளம் மட்டுமில்லாமல் போட்டிருக்கும் காக்கி யூனிஃபார்ம் - ஷூ வரைக்கும் மக்கள் பணம் தான். போதாகுறைக்கு லாரி வந்தால் பிச்சைக்காரன் மாதிரி கையை நீட்டி லஞ்சம் வாங்கி வயிறு வளர்க்கும் தொப்பையும் மக்கள் பணம் தான். இப்படி மக்கள் பணத்திலேயே வாழ்க்கையை நடத்தி, மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்பினால், விசாரணைக்கு அழைச்சிட்டு போய் கொலை செய்யும் தைரியத்தை கொடுத்தது யார்?

முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா வசம் இருந்த காவல்துறையில் பணியில் இருந்த வெள்ளைத்துரை தான், 2012ம் ஆண்டு மாமன்னர் மருதுபாண்டியர் நினைவேந்தலின் போது பிரபு-பாரதி-குமார் உள்ளிட்ட மூவரை என்கவுன்டர் கொலை செய்தார். இப்போது அதே காவல்துறை தான் இந்நாள் முதல்வர் திரு ஓ.பன்னீர்செல்வத்திடமும் இருக்கின்றது. இப்போதும் வெள்ளத்துரையை போலவே காளிதாசு என்ற எஸ்.ஐயும் சையதுமுகமது என்ற இளைஞனை குருவி சுடுவது போல சுட்டு கொன்றிருக்கின்றார். குருவியை சுட்டாலே வழக்கு போடுறாய்ங்க. ஆனால் மனுச உயிரோட மதிப்பு இவ்ளோதானா?

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக