25 அக்டோபர் 2014

பாலுக்கும் பால் ஊத்தியாச்சு!

பால் விலையை லிட்டருக்கு பத்து ரூபாய் ஏற்றியுள்ள தற்போதைய தமிழக முதல்வரும், முன்னாள் டீக்கடை காரருமாகிய திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக இருமுறை டீ குடிக்கும் குடிமகனான அடியேனின் நன்றி!

டீக்கடைக்காரனாகவே வாழ்க்கையை ஓட்டியிருந்தால் இந்நேரம் பால் விலை உயர்வுக்கு ஆளும் வர்க்கத்தை சகட்டு மேனிக்கு திட்டி தீர்த்திருப்பார் திரு. ஓ.பி.எஸ். அவர் நேரம், பரணி தரணியை ஆண்டு கொண்டிருக்கின்றது. பிறந்த குழந்தைக்கு கூட தாய்ப்பால் கிடைக்காமல் பாக்கெட் பாலை நம்பி வாழும் தமிழ் சமூகத்திற்கு, இந்த பால் விலை உயர்வு பெரும்சுமையாக இருக்கும். கண்டிப்பாக இது வரும் தேர்தலிலும் எதிரொலிக்கும்.

நடுத்தர எளிய மக்களின் ஒரு வேளை உணவாகவே இருந்து வரும் இந்த டீ/காபியின் மூலப்பொருளான பால் விலையை 24 ரூபாயிலிருந்து 34 ரூபாய்க்கு ஏறத்தாழ 50% விலையேற்றத்தால் பாதிக்கப்படுவதும் பெரும்பாலும் ஏழை மக்கள் தான். போற போக்கை பார்த்தால் சாவுக்கு கூட மூன்றாம்நாள் பால் தெளிக்க மாட்டாங்க போலிருக்கு. அந்த நிலை ஏற்படும் முன்னரே மக்கள் விரோத அரசுக்கும் தேர்தலில் பால் ஊத்திடுவாய்ங்கன்னு நினைக்கிறேன். ஏன்னா, நம்மாளுகளும் ரோசக்காரய்ங்க* தான்...

*200 ரூபாய் வாங்காத வரைக்கும்!

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக