உங்களுடைய பிறந்தநாள் எதுவென்று தெரியுமா?

இப்போதெல்லாம் பெருவாரியாக பிறந்தநாள் கொண்டாடுவது என்பது பொது ஆண்டான ஆங்கிலத்தேதியை மையப்படுத்தியே அமைந்துவிட்டது. இல்லையென்றால் தமிழ்தேதியை கணக்கிட்டு அந்த தேதியில் பிறந்தநாளை வைத்து கொள்வதும் வழக்கமாகி விட்டது. இந்த இரண்டு தேதிகளும் எந்த ஆண்டாவது ஒரே நாளில் அமைந்து விட்டால் அதை எந்தவித குழப்பமுமில்லாமல் கொண்டாடுவதும் நமக்கெல்லாம் பழகியும் போய்விட்டது.

ஆனால் பண்டைய தமிழர்களின் வழக்கப்படி, ஆண்டுதோறும் வரும் தமிழ் மாதத்துடன் கூடிய நட்சத்திரம் என்றைக்கு வருகிறதோ, அன்றுதான் பிறந்தநாளை கொண்டாடினார்கள். இங்கே நாம் கவனிக்க வேண்டியது ஒன்றுதான்; அது தேதி. எப்படியெனில் இங்கே தேதி, கிழமை, நாள் முக்கியமல்ல. ஆனால் அந்த தமிழ் மாதத்தின் நட்சத்திரம் முக்கியமானது. திருமண பத்திரிகைகளில் கூட, ‘ “இன்ன” நட்சத்திரத்துடன் கூடிய சுபயோக தினத்தில்’ என்றுதான் பிரசுரம் செய்யப்படுகின்றது என்பதையும் நாம் கவனித்திருப்போம். பிறப்பு முதல் இறப்பு வரை நட்சத்திரம் முதன்மை கருப்பொருளாக விளங்குவதை நாம் திதி, திவசம் போன்ற பல நிகழ்வுகள் மூலம் உணரமுடியும். அதற்கு இங்கே பல உதாரணங்கள் உண்டு.அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கும் வருடாவருடம் அவர்களது பிறந்த தமிழ்மாதத்தில் வரும் நட்சத்திரத்தினத்தன்று தான் கோவில்களில் சிறப்பு வழிபாட்டு பூஜை செய்வார்கள். மேலும் பிரபலமான இரண்டு பிறந்தநாள் விழா தமிழ்நாட்டில் தற்போது வழக்கத்தில் உண்டு. முதலாவதாக இராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதயவிழா, இரண்டாவதாக இராஜேந்திர சோழன் பிறந்த ஆடி ஆதிரை திருவிழா. இதுபோன்ற தமிழர்களின் பிறந்தநாள்விழா அனைத்துமே தமிழ்மாத நட்சத்திரத்தை சார்ந்தே அமைகிறதென்பதை இதன் மூலமாக தெளிவுறலாம்.ஆண்டு தோறும் உங்களது ஜென்ம நட்சத்திரம் நீங்கள் பிறந்த தமிழ் மாதத்தில் எந்த தேதியில் வருகிறதோ அன்றைக்கு உங்களது பிறந்தநாள் விழாவையும் வைத்து கொள்வதுதான் நம் பாரம்பரியதை காக்கும் அடையாளமாக அமையும். பொதுவாக தமிழ் மரபுப்படி ஒரு நாளின் தொடக்கமானது சூரிய உதயத்தை பொறுத்தே அமைகின்றது. ஆனால் ஆங்கில மரபுப்படி ஒருநாளின் தொடக்கம் என்பது நள்ளிரவு 12 மணிக்கே ஆரம்பமாகின்றது. இப்படியான குழப்பங்கள் நிறைந்த மேற்கத்திய மோகம் தவிர்த்து நாமும் நம் பண்டைய தமிழர்களது நுண்ணறிவியல் முறையை பின்பற்றுவதே நாம் அவர்களுக்கு நாம் தரும் அங்கீகாரமாக அமையும்.

- இரா.ச.இமலாதித்தன்

கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம்


                      தீவிர முருக பக்தரான சாண்டோ சின்னப்பா தேவர் பற்றியும், மொழி தெரியாதபோதும் ஒட்டுமொத்த இந்தியத் திரைத்துறையில் அவரது ஆளுமை பற்றியும், அவருடைய தயாரிப்பு நிறுவனமான 'தேவர் பிலிம்ஸ்' பற்றியும் படத்தின் ஆரம்பத்திலேயே காட்சிகளை அமைத்திருப்பது ரசிக்கும்படியாக இருந்தது. இன்னொரு காட்சியில் காவல் நிலையத்திற்குள் வழக்கமான கோட்-சூட் இல்லாத ஆளுயுர அம்பேத்கர் படம் ஆறடி உயரத்தில் வைத்திருந்ததும் வித்தியாசமாக இருந்தது. படம் நெடுகிலும் கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் தம்பி ராமையா & ஜூனியர்ஸ் கூடவே இருப்பது படத்திற்கு ப்ளஸ்.
திரைத்துறையில் எப்படியெல்லாம் / எங்கெல்லாம் சிரமப்பட்டு கதை விவாதம் பண்ணி படம் எடுக்குறாங்கன்னு காட்டினாலும் கூட, உலக சினிமாவை எப்படியெல்லாம் காப்பியடிச்சு படமெடுத்து அதையே உலக சினிமா திருவிழாக்கும் அனுப்பி வைக்கிறாய்ங்க என்பதையும் சொல்ல தவறவில்லை. சினிமாவை பற்றி ஒன்னுமே தெரியாமல் நடிகைகளுக்காகவும், புகழுக்காகவும் படம் தயாரிக்க வரும் போலி செக் / லோன் ஆசாமிகளின் முகத்திரையும் கிழித்தெறிந்திருக்கிறது இந்தப்படம்.

படம் நல்லாருக்கா? நல்லாயில்லையா? என்பதை படம் ரிலீஸ் ஆகி ஃபர்ஸ்ட் ஷோ இண்டர்வர்ல் விடுறதுக்குள்ளயே பேஸ்புக்/ட்விட்டர்ல விமர்சனம் எழுதி படத்தின் வெற்றி தோல்வியை சமூக வலைதளங்கள் தான் தீர்மானிக்குதுன்னு அழுத்தம் திருத்தமா சொல்லிருக்கிற பார்த்திபன், எப்போதுமே வித்தியாசமாய் முயற்சித்தும் பல தோல்விகளை பார்த்திருந்தாலும், நியூமரலாஜி படி இராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஆன இம்முறை உண்மையாகவே வெற்றி பெற்றிருக்கின்றார். கூட்டம் கம்மியாத்தான் இருக்குறதுனால, இளசுங்க தியேட்டர்ல போய் கூட படம் பார்க்கலாம். "a film without a story"ன்னு டைட்டில்ல டேக்லைன் போட்டிருந்தாலும் கதை இருக்கா? இல்லையா?ன்னு யோசிக்கவே வேணாம். ஏன்னா, இந்த படத்துல பல பேரோட கதை இருக்கு. கண்டிப்பா படம் பார்க்கலாம்.

அன்று புதியபாதையில் ஆரம்பித்த இந்த பயணம் மீண்டுமொரு புதியதொரு பாதையில் இன்றும் நீள்கிறது. வாழ்த்துகள் பார்த்திபன்!

- இரா.ச.இமலாதித்தன்

தேசபக்தி என்பது யாதெனில்...


தேசபக்தி என்பது வருடந்தோறும் ஆகஸ்ட் மாதம் ரெண்டாவது வாரமும், ஜனவரி மாதம் மூனாவது வாரமும் ஃபேஸ்புக்ல ப்ரோபைல் போட்டோவை மாத்துறதுனால மட்டும் வரப்போறதில்லை. அது உணர்வு சம்பந்தமானது. அந்த உணர்வை வெறும் லைக்குகளால் மட்டும் அளவிட முடியாது.

இன்னைக்கு பல பேருக்கு காந்தி நேருவை மட்டும்தான் அதிகமாக தெரியலாம். ஏன்னா, காந்திங்கிற பேரு தான் கடந்த  60 வருசங்களாக ஆட்சிக்கட்டிலில் உட்கார்ந்திருக்கு. அந்த காந்திக்கும் இப்போதுள்ள காந்திக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை காங்கிரசுக்கும் காந்திக்கும் கூட எந்தவித தொடர்பும் இல்லை என்பதும் தான்.

இன்னும் சொல்லப்போனால் இந்த காங்கிரஸ் என்ற பெயர் கூட இந்தியன்’ன்னு சொல்லிக்கிற யாருக்கும் சொந்தம் கிடையாது. அந்த பேரையும் வெள்ளைக்காரன் தான் உருவாக்கி கொடுத்துட்டு போனான். நாம தான், நேரா கட்டுன வீடு வசதியா இருக்குமேன்னு அதுலயே ஈசியா இவ்ளோ வருசங்களா உட்கார்ந்து காலத்தை ஓட்டிட்டோம்.

இப்போது விசயத்துக்கு வருவோம்.

இங்குள்ள புரட்சியாளர்களுக்கு, காந்தி நேருவை தவிர இந்தியரான பகத்சிங்கையும், இந்தியரல்லாத சே குவேராவையும் கொஞ்சம் பேருக்கு நல்லாவே தெரியும். காரணம் என்னவென்றால், இவங்க ரெண்டு பேரையும்
(DYFI, SFI போன்ற பொதுவுடைமை அமைப்புகள்) கம்யூனிஸ்ட் கைப்பத்தி வச்சுக்கிட்டு புரட்சிங்கிற பெயரில் புடலங்கை வியாபாரம் செய்வதால், இவர்களை அறியக்கூடிய அந்த பாக்கியம் சிலருக்கு கிடைத்துள்ளது.
ஆனால், இந்தியாவுக்கு வெளியே சென்று இந்தியாவை காப்பற்ற இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றி பலர் தெரிந்து கொள்ளவே விரும்புவதில்லை. புரட்சி செய்ய வாயளவில் சொன்ன அம்பேத்காரை உள்வாங்கி கொண்ட அளவுக்கு, அந்த புரட்சியை செயலலிலும் காட்டிய நேதாஜியை இவர்கள் துளிகூட நெருங்குவதே இல்லை. இங்கிலாந்து நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை உள்வாங்கி அதை இந்தியாவுக்கு தகுந்தாற்போல ரிமேக் செய்த சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கார் போற்றப்படும் அளவுக்கு கூட இங்கே நேதாஜி போற்றப்படுவதில்லை என்பதே எதார்த்தம். போற்றுதல் கூட வேண்டாம் குறைந்தபட்சம் அவருக்குரிய அங்கீகாரத்தை கூட கொடுப்பதில்லை என்பது வேதனைக்குரிய விசயம்.
 

“இந்தியா விடுதலைப் பெற்றால்தான் ஆசியாவில் மற்ற நாடுகள் உடனே விடுதலை அடைய முடியும்”  என்ற உயரிய நோக்கோடு களம்கண்ட நேதாஜியின் மந்திரச்சொல்லாக, ”இரத்தத்தை தாருங்கள்; உங்களுக்கு விடுதலையைப் பெற்று தருகிறேன்!” என்ற ஒரு வரியே இருந்தது.  இந்த ஒற்றைச் சொல்லுக்கு கட்டுப்பட்டு நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய இராணுவத்தில் பெரும்பான்மையான இடத்தை தமிழர்களே ஆக்கிரமித்து இருந்தனர். இத்தனை தமிழர்கள் ஐ என் ஏவில் சேர, பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் என்ற மாமனிதர் மட்டுமே காரணமாக இருந்தார். இப்படியான பசும்பொன் தேவரின் அன்பையும், ஆற்றலையும், ஆன்மீக உணர்வையும், வீரத்தையும், விவேகத்தையும் கண்டு தன்னுடைய நெருங்கிய தோழனாக்கி கொண்டார் நேதாஜி. ஆனால் இன்றைய நிலைமையோ வேறு; தேசியத்தலைவரான பசும்பொன் தேவரையும் சாதியத்தலைவராக்கி அழகு பார்க்கிறது திராவிட கட்சிகள்.
 
தமிழர்களின் தேசபக்தி மிக்க தாய்நாட்டிற்கான அர்பணிப்பு குணத்தை கண்டு வியந்த நேதாஜி, ”அடுத்த பிறவியில் நான் தமிழனாக பிறக்க வேண்டும்!” என சூளுரைத்தார் என்பது ஒட்டுமொத்த தமிழினத்துக்கே பெருமை சேர்க்கும் விசயமாகும்.

பசும்பொன் உ.முத்துராமலிக்கத்தேவர் - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இடையிலான அந்த பாசப்பிணைப்பினால் தான், தென் தமிழகத்தின் கடைக்கோடி கிராமங்கள் வரை இன்று புத்தம் புதிதாய் பிறக்கும் குழந்தைகளுக்கும்,  போஸ், நேதாஜி, சுபாஷ் என்ற பெயர்கள் சூட்டப்பட்டு கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், மேற்கு வங்காளத்தை விட தமிழ்நாட்டில் தான் அதிக ’நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்கள்’ பெயரளவில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் என்பதுதான் தமிழர்களுடைய தேசப்பக்தியின் கைமாறு.

1941 ல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை தொடங்கி ஆசாத்ஹிந்த் என்ற ரேடியோவையும் உருவாக்கி சுதந்திர தாகத்தை அங்கிருந்த இந்திய மக்களிடம் விதைத்தார். நாட்டுக்கு எனத் தனிக் கொடியை உருவாக்கி, ஜனகனமன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார். 1943 அக்டோபர் 21ல் சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் போஸ், சுதந்திர அரசு பிரகடனத்தை வெளியிட்டார். டிசம்பர் 29 ந் தேதி அரசின் தலைவராகத் தேசியக் கொடியை ஏற்றினார். அவற்றை ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, சீனா உட்பட 9 நாடுகள் ஆதரித்தன.

மேலும்,

"நமது சரித்திரத்தில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு வார்த்தை கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. விரைவில் இந்தியா விடுதலை அடையும். ஜெய் ஹிந்த்!" -
இது 15 ஆகஸ்ட் 1945ல் இந்திய தேசிய இராணவத்திற்காக அவர் வெளியிட்ட இறுதி அறிக்கையின் வரிகள். அந்த வரிகள் சரியாக இரண்டே வருடத்திற்குள் மெய்யாக்கப்பட்டது என்பது வரலாறு.

"ஒரு லட்சியத்துக்காக ஒருவன் மடியலாம்; ஆனால் அவன் மாண்டபிறகு ஆயிரம் பேரை அந்தலட்சியம் பற்றிக்கொள்ளும்; ஒரு மனிதன் வாழ்ந்தான் - லட்சியதிற்க்காக உயிரை விட்டான் என்பதை விட வேறென்ன பெருமை வேண்டும்?” - இது நேதாஜி சிறைச்சாலையில் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளும் முன் எழுதிய கடிதத்தின் சில வரிகள்.
 

இப்படிப்பட்ட தேசபக்திமிக்க மாபெரும் தலைவனுக்கு பல வருடங்கள் கழித்து 1992ல் ’பாரதரத்னா’ விருதை மத்திய சர்க்கார் கொடுத்தது. ஆனால், நேதாஜியின் குடும்ப உறுப்பினர்களின் எதிர்ப்பாலும், நேதாஜியின் இறப்பு பற்றிய சர்ச்சையினால் உச்சநீதிமன்ற தீர்ப்பாலும் அந்த விருது திரும்ப பெறப்பட்டது. மீண்டும் வேதாளம் முருங்கைமரம் ஏறிவிட்டது போல ஒரு நிகழ்வு ஒருவார காலமாய் நடந்து கொண்டிருக்கின்றது. பாரத பிரதமர் திரு. நரேந்திரமோடி இம்முறை நேதாஜிக்கு பாரத ரத்னா விருதை தந்துவிட ஆர்வமாய் இருக்கின்றார் போல.

ஆனால், தேர்தலுக்கு முன் மோடி தந்த வாக்குறுதிகளான, 'நேதாஜி பிறந்தநாள் தேசப்பக்தி தினமாக அனுசரிக்கப்படும். மேலும் நேதாஜி இறப்பு சம்பந்தமான ரகசிய ஆவணங்கள் வெளிக்கொண்டு வரப்படும்' என்றெல்லாம் சொன்ன வாக்குறுதிகள் கேள்விக்குறிகளாக மட்டும் எஞ்சி நிற்கின்றன. திரு நரேந்திர மோடி அவர்கள், நேதாஜி சம்பந்தப்பட்ட இந்த விசயத்திலும் அரசியல் விளம்பரம் செய்யாமல் சீக்கிரமே உலகே எதிர்பார்க்கும் மர்ம முடிச்சை அவிழ்க்கலாம் என்பது என்னைப்போன்ற சாமானியர்களின் எதிர்பார்ப்பு. எது எப்படியோ, நேதாஜியின் தொண்டர்களுக்கு ஆகஸ்ட் 15 என்பது சுதந்திர தினமல்ல; உண்மையான சுதந்திர தினம் என்பது அக்டோபர் 21 தான்!

- இரா.ச.இமலாதித்தன்