உங்களுடைய பிறந்தநாள் எதுவென்று தெரியுமா?

இப்போதெல்லாம் பெருவாரியாக பிறந்தநாள் கொண்டாடுவது என்பது பொது ஆண்டான ஆங்கிலத்தேதியை மையப்படுத்தியே அமைந்துவிட்டது. இல்லையென்றால் தமிழ்தேதியை கணக்கிட்டு அந்த தேதியில் பிறந்தநாளை வைத்து கொள்வதும் வழக்கமாகி விட்டது. இந்த இரண்டு தேதிகளும் எந்த ஆண்டாவது ஒரே நாளில் அமைந்து விட்டால் அதை எந்தவித குழப்பமுமில்லாமல் கொண்டாடுவதும் நமக்கெல்லாம் பழகியும் போய்விட்டது.

ஆனால் பண்டைய தமிழர்களின் வழக்கப்படி, ஆண்டுதோறும் வரும் தமிழ் மாதத்துடன் கூடிய நட்சத்திரம் என்றைக்கு வருகிறதோ, அன்றுதான் பிறந்தநாளை கொண்டாடினார்கள். இங்கே நாம் கவனிக்க வேண்டியது ஒன்றுதான்; அது தேதி. எப்படியெனில் இங்கே தேதி, கிழமை, நாள் முக்கியமல்ல. ஆனால் அந்த தமிழ் மாதத்தின் நட்சத்திரம் முக்கியமானது. திருமண பத்திரிகைகளில் கூட, ‘ “இன்ன” நட்சத்திரத்துடன் கூடிய சுபயோக தினத்தில்’ என்றுதான் பிரசுரம் செய்யப்படுகின்றது என்பதையும் நாம் கவனித்திருப்போம். பிறப்பு முதல் இறப்பு வரை நட்சத்திரம் முதன்மை கருப்பொருளாக விளங்குவதை நாம் திதி, திவசம் போன்ற பல நிகழ்வுகள் மூலம் உணரமுடியும். அதற்கு இங்கே பல உதாரணங்கள் உண்டு.அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கும் வருடாவருடம் அவர்களது பிறந்த தமிழ்மாதத்தில் வரும் நட்சத்திரத்தினத்தன்று தான் கோவில்களில் சிறப்பு வழிபாட்டு பூஜை செய்வார்கள். மேலும் பிரபலமான இரண்டு பிறந்தநாள் விழா தமிழ்நாட்டில் தற்போது வழக்கத்தில் உண்டு. முதலாவதாக இராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதயவிழா, இரண்டாவதாக இராஜேந்திர சோழன் பிறந்த ஆடி ஆதிரை திருவிழா. இதுபோன்ற தமிழர்களின் பிறந்தநாள்விழா அனைத்துமே தமிழ்மாத நட்சத்திரத்தை சார்ந்தே அமைகிறதென்பதை இதன் மூலமாக தெளிவுறலாம்.ஆண்டு தோறும் உங்களது ஜென்ம நட்சத்திரம் நீங்கள் பிறந்த தமிழ் மாதத்தில் எந்த தேதியில் வருகிறதோ அன்றைக்கு உங்களது பிறந்தநாள் விழாவையும் வைத்து கொள்வதுதான் நம் பாரம்பரியதை காக்கும் அடையாளமாக அமையும். பொதுவாக தமிழ் மரபுப்படி ஒரு நாளின் தொடக்கமானது சூரிய உதயத்தை பொறுத்தே அமைகின்றது. ஆனால் ஆங்கில மரபுப்படி ஒருநாளின் தொடக்கம் என்பது நள்ளிரவு 12 மணிக்கே ஆரம்பமாகின்றது. இப்படியான குழப்பங்கள் நிறைந்த மேற்கத்திய மோகம் தவிர்த்து நாமும் நம் பண்டைய தமிழர்களது நுண்ணறிவியல் முறையை பின்பற்றுவதே நாம் அவர்களுக்கு நாம் தரும் அங்கீகாரமாக அமையும்.

- இரா.ச.இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment