என் பார்வையில் பரதேசிபாடல் வெளியீட்டிலிருந்தே அவத்த பையா பாட்டுதான் எனக்கு ரொம்பவே பிடிக்குமென்பதால், முதல் பாதியிலேயே அந்தபாடல் நெஞ்சை வருடிச் சென்றது. அதே போல மதமாற்றம் செய்யும் தமிழ் கிருஸ்துவ மருத்துவ கிழவனின் ஏசப்பா பாடலும் காட்சிகளின் ஊடாக பார்க்கும் போது பிடித்து போனது.

கதைக்களம் பின்பாதி முழுக்க முழுக்க அடிமைகளின் வாழ்க்கையை சார்ந்தே அமைக்கப்பட்டிருந்தது. முதல்பாதி கிராமியச்சாயலுடன் கூடிய பழமைவாதிகளின் வாழ்க்கை முறையை பதிவு செய்திருந்தது. அதர்வாவின் ஆத்தாவாக படைக்கப்பட்டிருந்த அந்த கிழவியின் நடிப்பும், எதார்த்தமும், வீரியமும், பேச்சுவழக்கும் ரொம்பவே என்னை கவர்ந்தது.

நாயகனும், நாயகியும் ஒரு பஞ்சாயத்து காட்சியில் சைகை மூலமாகவே பேசிகொள்வார்கள். பார்க்கவே ரொம்ப நல்லா இருந்துச்சு.. வெகுளித்தனமான நாயகனுக்கும், விவரமறிந்த நாயகிக்கும் காதல் மலர்ந்து மணம் முடிக்கும் முன்னரே, கருவும் உருவாக,.. வீட்டிலிருந்து தனிமைப்படுத்த பட, நாயகனின் ஆத்தா அடைக்கலம் கொடுக்கிறாள். இதற்கிடையில் ஊரின் வறுமையால் பஞ்சம் பிழைக்க ஒரு கங்காணியின் ஆசை வார்த்தைகளால் அதர்வா உள்பட கிராமத்தின் பெரும்பாலான ஆண்களும், சிறுவர்களும், மணம் முடித்தவர்கள் ஜோடியாகவும் தேயிலை தோட்டத்திற்கு ஒன்றரை மாதம் நடையாய் நடந்தே கடக்கின்றனர். போகும் வழியில் ஒருவனின் உடலை விட்டு உயிர் பிரிகிறது. அவனை விட்டு, மற்ற அனைவரும் கடந்து செல்கிறார்கள். அவனது மனைவியையும் இழுத்து செல்கிறார்கள். அவனது கைமட்டும் இறுதி தருவாயில் மேலே எழும்புகிறது. தூரத்தில் மற்றவர்கள் களைப்போடு கடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். இப்போதுதான் இடைவேளை.. இனி அடிமைகளின் வாழ்வியல்முறைதான் என்பதை யூகிக்கமுடிகிறது.

தேயிலை தோட்டத்திற்குள் வந்துவிட்டனர். தனித்தனியாக கூரை வேய்ந்த வீடுகள் ஆளுக்கொன்றாய் கட்டாயமாக பகிர்ந்தளிக்கபடுகிறது. அதற்கப்பறமான காட்சிகளை நான் எழுத்துகளின் வாயிலாக விளக்க விரும்பவில்லை. அங்குதான் பாலா நிற்கிறார்.
பாடலும், பிண்ணனி இசையென ஜி.வி.பிரகாஷ்குமார் அசத்தி இருக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து, ஒவ்வொரு பாடலிலும் வைரவரிகளினால் இந்தவயதிலும் நம்மை கட்டிப்போடுகின்றார் என்று நினைக்கும்போது ஆச்சர்யமாகவே இருக்கிறது. செழியனின் ஒளிப்பதிவு இருளிலும் – வெளிச்சத்திலும் உண்மையை மட்டுமே பிரதிபலித்திருக்கிறது. படம் நெடுகிலும், உதவி இயக்குனர்களின் அயாரத உழைப்பும், துணை நடிகர்களின் பங்களிப்பும் அப்பட்டமாக நம் கண்முன் தெரிகிறது. ஒவ்வொரு சின்னஞ்சிறிய வசனத்தில் கூட பாலா இன்னும் நம்மை கதைக்குள் உள்ளிழுத்து நம் நாடியை பிடித்து பார்க்கிறார்.

படத்தின் முதல் காட்சியில் தொடர்ச்சியாக அந்த குக்கிராமத்தின் அநேக வீடுகளையும் மக்களையும் காட்டும்விதம் அருமை. அதேபோலவே தேயிலை தோட்ட அடிமைகளுக்கான வீடுகளை காட்டுகின்ற காட்சியமைப்புகளும் உருவாக்கப்பட்டிருந்தன. போலி வைத்தியர் – போலி சாமியார் – தேயிலை தோட்டத்தை வடிவமைக்கும் வெள்ளைக்கார கிழவன் – அவனுக்கு மாமா வேலை செய்யும் எடுபுடி எஜமானான கங்காணி. இப்படியான கிராமத்து ஆட்களை ஊருராக சென்று அடிமையாக்கும் கங்காணியும், அவனுக்கு எடுப்புகளும், அடியாட்களும் என பலரும் வாழ்ந்திருக்கிறார்கள் கதையின் மாந்தர்களாகவே.

அப்போது நடந்த (இப்போது வரை நடந்து கொண்டிருக்கும்) கிருஸ்துவ மத மாற்றத்தை கடுமையாகவே சாடி இருக்கிறார் பாலா. எப்படியெல்லாம் மதமாற்றம் அந்தகாலத்தில் செய்திருக்க முடியும் என்பதை பாமரனும் உணரும் வகையில் பல காட்சியமைப்புகளும், வசனங்களும் மிக அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறார்.

படம் முடிந்ததும் சட்டென்று நினைக்கு வந்தது, ஈழமண்ணில் நடந்தேறிய பயங்கரங்களும், ஒடுக்குமுறைகளும் தான். முள்வேலி முகாம்களின் சித்ரவதையை பரதேசியின் மூலம் சிறிய அளவிலானும் உணர முடிந்தது.

பரதேசியின் கதைக் களத்தையும், தனி ஈழம் என்ற தேசத்தின் விடுதலை கனவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவே இருந்தது. தேயிலை தோட்டத்தை நான் இலங்கை போலவும், சொந்த மண்ணிலேயே அகதிகளான எம்தமிழின உறவுகளை, கொத்தடிமைகளாகவும் ஒப்பீடு செய்ய முடிந்தது. வெள்ளைக்காரனை சர்வதேச வல்லாதிக்க நாடுகளோடு சேர்த்துணர முடிந்தது. என்னைபொறுத்தவரையில், பரதேசியிலும் ஈழத்தின் சுவடுகள் தெரிந்தது.
பரதேசி - எல்லோருக்குமான விடுதலையை அடிமைகளின் வாயிலாக சுட்டிக்காட்டுகிற படம். என் மனசை ரொம்பவே பாதிச்சது. படம் நல்லாருக்கு. எல்லோரும் பாருங்க. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போங்க, உங்க மனசு படம் முடிந்தபின்னும் சிலமணிநேரம் உள்ளுக்குள் ஏதோவொன்றை கண்டிப்பாக பண்ணும். அண்ணன் இயக்குனர் பாலாவை இந்தபடத்தின் மூலமாக இன்னும் அதிகமாகவே நேசிக்கிறேன். கிரேட்
வெறும் டீ தானேன்னு நினைக்காமல், அந்த டீக்கு பின்னால் உள்ள தேயிலை தோட்டத்தின் வரலாற்றையும் கூட, கதைக்களமாக மாற்ற முடியும்ன்னு நிரூபிக்கிறவன் தான் உண்மையான கலைஞன்...  நீர் கலைஞன்யா!