காந்தி என்ன கடவுளா?


 
காந்தி என்ன கடவுளா? தேசத்தந்தைன்னு சொல்றதுக்கு என்ன ஆதாரம் இருக்கு? தகவல் அறியும் உரிமை சட்டத்துல கேட்டத்துக்கே ஒரு மண்ணும் இல்லைன்னு சொல்லிட்டாய்ங்க. அப்பறம் என்ன மண்ணுக்கு வர்ணாசிரம எண்ணங்களை மனம் முழுக்க வைத்திருந்த காந்தியை கொண்டாட வேண்டும்? 1938ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்குப் போட்டியிட்ட நேதாஜி சுபாஸ் சந்திரபோஸை எதிர்த்து, தன்னுடைய ஆதரவு வேட்பாளராக பட்டாபி சீதாராமையாவை காந்தி போட்டியிட வைத்தார். பெரும்பான்மை பலத்தோடு நேதாஜி வெற்றி பெற்றதை தாங்கிக்கொள்ள முடியாமலும், தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமலும் உண்ணாவிரதம் இருந்த காந்தி, எப்படி மகாத்மாவாக இருக்க முடியும்? காந்தியின் மனபிறழ்வுக்காகவே தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறினார் நேதாஜி என்பது வரலாறு. மேலும் தன்னுடைய கடைசி காலம் வரையிலும் பெண்களின் அரவணைப்பிலேயே சுற்றி திரிந்த குஜராத்தியான காந்தி, சாதாராண ஆத்மா தான்! அவரது இறப்புக்கெல்லாம் இப்போது போலியாக நீலிக்கண்ணீர் வடிப்பதெல்லாம் வேதனையான விசயம். பிறப்பால் வைசியராக இருந்தாலும் காந்தியும் ஒரு பார்பான சித்தாந்தவாதி, காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவும் ஒரு பார்பானவாதி. அந்த இருவருக்காக, கருப்பு சட்டை போராளி(?)களெல்லாம், பார்பன சித்தாந்தவாதி காந்திக்கு ஆதரவாக, பார்பன கோட்சேவின் படத்தை எரிப்பது தான் உச்சக்கட்ட காமெடி.

தமிழன் ஹிந்துவா?

தைப்பூசம் அன்னைக்கு இந்தியாவெங்கும் சேயோன் திருமுருகனின் ஊர்வலம் நடைபெற இந்துத்துவா அமைப்புகள் நடவடிக்கை எடுக்குமா? குறைந்த பட்சம் ஊர்வலம் எடுக்கச்சொல்லி குரலாவது கொடுக்குமா? நம்ம தாய்மொழி தமிழை பேசின முப்பாட்டான் முருகனுக்கு ஊர்வலம் எடுக்க வக்கில்ல. ஆனால், உடலிலுள்ள நாபிக்கமலத்தை உருவகப்படுத்திய கதாப்பாத்திரமான விநாயகருக்கு இந்தியா முழுக்க ஊர்வலம் எடுக்குறாய்ங்க. அந்த ஊர்வலத்துல ஏற்படும் கலவரத்துல அடிச்சிக்கிட்டு போலிஸ்கிட்ட மாட்டி கேஸ் ஃபைல் ஆவுறதெல்லாம் பார்பனர் அல்லாதவன் தான் என்பதையும், இங்கே எந்த தமிழனும் புரிஞ்சிக்கிட்ட மாதிரி தெரியல.

தமிழுக்கு சமமான மொழியென்று சமகிரத மொழியை பெரும்பாலான தமிழர்கள் ஏற்றுக்கொண்ட பிறகும், உலகின் மூத்த செம்மொழியான தமிழை விட சமகிருத மொழிதான் உலகின் மூத்த மொழியென்று எப்படியாவது நிறுவினால் தான் ஹிந்துத்துவா ஆட்களின் வெறி அடங்குமென நினைக்கிறேன். மேலும், சமகிருதத்தை ஹிந்தியாவின் ஆட்சி மொழியாக்கினால் தான் ஆரிய தாகம் அடங்கும் போலிருக்கிறது.

மாவீர மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு சிலை - கோரிக்கை!

 தன்னை சிறையில் அடைத்த வெள்ளைக்காரனிடம் கருணை மனு கொடுத்த விநாயக் தாமோதர சாவர்க்காரை, ஹிந்து மத ஆதரவாளர்கள் வீர சாவர்க்கர் என்று கூட சொல்லிக்கொள்ளட்டும். ஆனால், தீவிர சிவ/முருக பக்தர்களான அவர்களின் ஆட்சிக்குட்பட்ட தங்களது மண்ணில் அவர்களின் முழு முயற்சியால கட்டப்பட்ட காளையார்கோவிலின் கோபுரங்களை தகர்த்தெறிவோம் என்ற வெள்ளைக்காரனின் எச்சரிக்கைக்காக தங்களது உயிரையே தந்த மாவீர மாமன்னர் மருதுபாண்டியர்களை, ஹிந்து மத ஆதரவாளர்கள் புறக்கணிப்பது ஏன்? வீர மருதுபாண்டியர்களை தங்களது அடையாளமாக காட்டிக்கொள்ளும் ஆளும் பா.ஜ.க.வில் இருக்கும் அகமுடையார்கள் யாராவது இதைப்பற்றி என்றைக்காவது யோசித்தது உண்டா? பா.ஜ.க. எப்போதுமே பார்பன சித்தாந்தங்களை உள்ளடக்கிய கட்சி. அகமுடையானுக்கு அதிகாராத்தை கொடுப்பது போல் பாசாங்கு காட்டிக்கொண்டு பார்பானியத்துக்கு அடியாளாக தான் பயன்படுத்தும் என்பதையும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஏறு தழுவதலுக்கு எதிராக வெளிப்படையாவே பா.ஜ.க. அமைச்சர் மோனிகா காந்தி அறிக்கை விட்டவர் என்பதையெல்லாம் உடனுக்குடன் நாம் மறக்கும் வரையிலும் தமிழ்நாட்டு பண்பாடும், தமிழனின் பாரம்பரியமும் படிப்படியாக சிதைவுறும். ஆனால், தமிழர்களை ஹிந்து என்று கூறி, பார்பனர்களின் விநாயகரை கும்பிட வைப்பார்கள். கடைசியில் நம்முடைய ஆதிக்கடவுளான மாயோனான (பெருமாளையும்) , சேயோனான (முருகனையும்) நம்மிடமிருந்து அந்நியப்படுத்தி விடுவார்கள்.
 


கோட்சேவுக்கு சிலை வைக்கணும்ன்னு ஆட்சி அதிகாரம் கையில் வந்தவுடன் பார்பன அமைப்புகளின் துணையோடு அறிக்கைவிடும் எவனாவது, தமிழ் மண் காத்த மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு அவர்களின் ஆட்சி நடத்தப்பட்ட தலைமையிடமான சிவகங்கை சீமையில் ஒரு சிலை வைக்க மூச்சு விடுவானுங்களா? கேட்டால் நாங்க பா.ஜ,க.ன்னு சொல்லிக்கிட்டே, அந்த பக்கமா அகமுடையார்களின் அடையாளமாகவும் மருதுபாண்டியர்களை காட்டிப்பாய்ங்க. இந்த பக்கம் பார்பானுக்கு ஆதரவாக கொடி புடிச்சு யார்யாருக்கோ சிலையும் வைக்க சொல்லுவாய்ங்க. தமிழ் நாட்டை விட்டு தள்ளி இருக்கிற நரேந்திரமோடியின் மாநிலத்தவரான (டிசம்பர் 15, 1950ல் இறந்த) வல்லபாய் படேலுக்கும், மகாராஷ்டிரா மாநிலத்தவரான (நவம்பர் 15, 1949ல் இறந்த) பார்பன கோட்சேவுக்கும் மல்லுக்கட்டுற இந்த சாதிக்காரன் எவனும், அக்டோபர் 24, 1801ல் வீர மரணமடைந்த மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு சிலை வேணும்ன்னு வாயை கூட திறக்க மாட்டாய்ங்க. இந்த மாதிரி உள்ளுக்குள்ளாகவே ஆதரவு இல்லாத நிலையிலும் சிவகங்கை சீமையில் தன்னெழுச்சியாக மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு சிலை எழுப்ப வலியுறுத்தி இன்று போராடிய அனைத்து அகமுடையார் உறவுகளுக்கும், சக உறவுக்காரனாய் என் நன்றியும் வாழ்த்துகளும்!

- இரா.ச.இமலாதித்தன்

கொசுறு!

# 01

எனக்கென்னமோ ”என்னை அறிந்தால்” படம் சரியா போகாதுன்னு மனசுல படுது. அஜீத்+கெளதம்+ஹரிஸ் கூட்டணி எடுபடாதுன்னு தோணுது. அதுக்காக தான் படத்தின் ரிலீஸ் தேதிதை தள்ளித்தள்ளி ஒருவழியா பிப்ரவரின்னு தேதியும் சொல்லிட்டாங்க. அதுக்குள்ள தியேட்டர்ல குண்டு வெடிக்கும்ன்னு ப்ரீ பப்ளிசிட்டியும் பன்ணி விடுறாங்க. பார்க்கலாம், படத்தின் மிச்ச கதையை...

# 02

தேனீக்களின் பல நாட்கள் உழைப்பை சில மணி நேரங்களில் சுரண்டும் நாம் அனைவருமே முதலாளித்துவ வாதிகள் தான்! அதுனால இத்துப்போன இட்லி கம்யூனிசமெல்லாம் இங்க கதைக்கு ஆகாது.

நேதாஜி விசயத்தில் பா.ஜ.க.!

தேர்தலுக்கு முன்னாடி ஒன்றை சொல்வது, வெற்றி பெற்றபின் ஒன்றை சொல்வது என வழக்கமான அரசியல்வாதியாக மாற முயற்சிக்கும் பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு துணிவிருந்தால், அவர் தலைமை வகிக்கும் மத்திய சர்க்காரின் வசமுள்ள தேசத்தந்தை நேதாஜியின் மரணம் பற்றிய ரகசிய ஆவணங்களை வெளியிடட்டுமே. தேர்தலுக்கு முன்பாக நேதாஜியின் ஆவணங்களை வெளிக்கொண்டு வருவேனென நேதாஜியின் குடும்பத்தினரிடம் மார்தட்டி உறுதிமொழி கூறிய, மோடி அவர்கள் இப்போது மட்டும் ஏன் பின்வாங்குகிறார். மற்ற நாடுகளுக்காக பயந்து, ஒரு தேசத்தந்தையின் மரணம் பற்றிய ரகசிய ஆவணங்களையே வெளியிட அஞ்சும் பாரதம், எப்படி மற்ற நாடுகளுக்கு தலைமையேற்கும் பண்பை வளர்த்து கொள்ள போகிறது? கடைசி வரை அடிமையாகவே வாழ பழகிக்கொள்ள வேண்டியது தான் நமக்கெல்லாம் எளிதாகிவிட்டது.

Narendra Modi ‪#‎DeclassifyNetajiFiles‬

ரத்தமும் சுதந்திரமும் தேசபக்தியானதே!

 
ஜனவரி 23ம் தேதியான இதே நாளில் தான் அமெரிக்காவின் பூர்வகுடி மக்களான செவ்விந்தியர்கள் என்றழைக்கப்படும் மண்ணின் மைந்தர்களை பெரும் எண்ணிக்கையில் இனவழிப்பு செய்தது வெள்ளை ஏகாகிபத்தியம். அதே வெள்ளை ஏகாதிபத்தியத்திடம் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் அடிமைப்பட்டு கிடந்த பாரத சமூகம், அக்டோபர் 2ம் தேதியை மட்டும் ஞாபகமாக வைத்து கொண்டு ஜனவரி 23ம் தேதியை வசதியாக மறந்து விடுகிறது. ”இரத்தத்தை கொடுக்க துணியுங்கள், வெள்ளை ஏகாகிபத்தியத்திடம் அடிமைப்பட்ட தேசத்தை மீட்டெடுத்து சுதந்திரமடைய வைப்போம்!” என்று முழங்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுடைய பிறந்த நாள் இன்று. வெள்ளை ஏகாதிபத்தியத்தால் செவ்வியந்தர்களின் இரத்தக்கறை படிந்த அதே நாளில் பிறப்பெடுத்த நமது தேசத்தந்தையின் அவதார தினத்தை, தேசிய தேசபக்தி தினமாக அனுசரிப்போம்!

ஜெய்ஹிந்த்

ஊடகங்களால் பா.ஜ.க!


பா.ஜ.க.வை பொறுத்த வரை ஊடகங்களை பரபரப்பாக பேச வைக்க வேண்டும் என்பது இலக்கு. அந்த வியூகத்தின் அடிப்படையிலான ஒரு நிகழ்வாகத்தான், அருண் ஜெட்லி - ஜெயலலிதா இருவரின் சந்திப்பும் அரேங்கேற்ற பட்டிருக்கின்றது. மாறாக, இதில் வேறெந்த இலாபமும் இருவருக்கும் கிடைக்க போவதில்லை என்பதே எதார்த்தம்.

ஐ - விமர்சனம்!


ஐ மாதிரியான மொக்கை படங்களுக்கு விகடன், குமதம், ஹிந்து என பிரபல ஊடகங்களெல்லாம் போட்டிப்போட்டு பாராட்டுவதை வாசகனாக பார்க்கும் போது, நேர்மையான விமர்சனத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விடுகின்றது. 90களில் எடுத்திருக்க வேண்டிய ஒரு படத்தை இருபது வருடம் கழித்து எடுத்து பார்வையாளனை முகம் சுழிக்க வைத்திருக்கிறார் ஷங்கர். இது ஷங்கரின் படம் போல தெரியவில்லை, பேரரசு போன்ற ஒரு கமர்சியல் இயக்குனரின் படைப்பாகதான் பார்க்க தோனுகிறது. பல லாஜிக் ஓட்டைகளையெல்லாம் இந்த ஊடகம் ஒரு வரியில் கூட சுட்டிக்காட்ட மறுப்பது ஏன் என்றுதான் புரியவில்லை. மூன்றாவது பாலினமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட திருநங்கைகளை இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் தமிழ் சினிமா காமத்திற்கும், காமெடிக்கும் பயன்படுத்தி மூன்றாம் தரத்தினர் போல இழிவுபடுத்தியே வைத்திருக்க போகின்றது என்பது இன்னமும் புரியவில்லை. திருநங்கைக்கு பதிலாக அந்த பாத்திரத்தில் இன்னொரு ஹிரோயினையே காட்சிப்படுத்திருந்தால், அந்த ஹிரோவுக்கும் - திருநங்கைக்குமான காதல்முறிவை நியாயபடுத்திருக்கலாமே?

ஹிரோவால் பாதிக்கப்பட்ட வெவ்வேறு தளங்களிலுள்ள அனைத்து வில்லன்களும் ஒரே இடத்தில் சிகரெட் பத்த வைத்து சதி திட்டம் தீட்டுவதும், பிறகு ஹிரோவுக்கு தெரியும்படியாகவே ஒரே அறையில் மது அருந்திக்கொண்டு தங்களது திட்டத்தையும், ஹிரோ மீதுள்ள கோபத்தையும் தனித்தனியாக பஞ்ச் வைத்து பேசுவதும், வில்லத்தனமாக சிரிப்பதும் இதெல்லாம் 80களில் வேண்டுமென்றால் எடுபட்டிருக்கும். ஆனால், இப்போதைய தமிழ் சினிமாவுக்கு எடுபடுமா என ஷங்கர் ஒரு முறையாவது யோசித்திருக்க வேண்டாமா?

சென்னை தமிழ் என்பதை இழிவாக திட்ட மட்டும்தான் இன்னமும் தமிழ் சினிமா பயன்படுத்தி கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த படமும் விதிவிலக்கல்ல. சென்னைத்தமிழ் பேசுவதாக சொதப்பி இருக்கும் விக்ரம் இனியாவது பம்மல் கே சம்பந்தம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் போன்ற கமலின் படங்களை பார்த்து ஒருமுறை கற்றுக்கொள்ளலாம்.
பாடி பில்டிங் ஆணழகன் போட்டியின் போது ஹிரோவை தவிர மற்ற அனைவரும் நல்ல உடற்கட்டு இருந்த போதும், தமிழ் சினிமாவின் இலக்கணம் மீறாமல் ஹீரோவே வெற்றி வாகை சூடுகிறார். கண்டிப்பாக, அந்த சீன் வரும் போது விக்ரமின் தொடை பகுதியை மற்ற பாடி பில்டர்ஸ்களோடு ஒப்பிட்டு பாருங்கள், கண்டிப்பாக நீங்களே சிரிப்பீர்கள். பாடி பில்டிங் என்பது முழு உடலையும் பில்ட் செய்வது தானே? ஷங்கரின் ஐ பட ஹிரோவுக்கு மட்டும் தொடை விதிவிலக்கா என்ன?

இங்கிருந்து பெரிய குழுவோடு சீனாவிற்கு சென்று விளம்பரத்திற்கான சூட்டிங் செய்யும் ஆட் ஃப்லிம் டைரக்டர், தமிழ்நாட்டிலேயே அந்த ஹிரோவிடம் ஒருமுறை ரிகர்சலோ, ஆடிசனோ பார்க்காமலே போவது ஏனென்று ஷங்கருக்கு மட்டுமே வெளிச்சம். ஹிரோவுக்கு தன் கனவுக்கன்னியான ஹிரோயினோடு கெமிஸ்ட்ரி வொர்க்கவுட் ஆகவில்லை என்பதற்காக ஹிரோயின் பொய்யாக லவ் சொல்வதெல்லாம் கொஞ்சம் கூட மனதோட ஒட்டவே இல்லை.  இன்னும் முக்கியமாக வசனம் என்ற பெயரில் எழுத்துகளால் வாந்தி எடுத்திருக்கும் ஷங்கர் இனியாவது அந்த பக்கம் போகாமல் இருந்தால் கொஞ்சம் நல்லாருக்கும். சுஜாதா இல்லாத குறையை சுபாக்களால் கூட நிரப்ப முடியவில்லை என்பது படத்தின் வசன வறட்சியால் புரிந்து கொள்ள முடிகிறது. பிரமாண்டம் என்ற ஒன்றை வைத்து கொண்டு பாடல் காட்சிகளில் ஃபாரின் லொக்கேஷனின் பிரமிப்பை ஏற்படுத்தினால் மட்டும் போதுமா? படம் முழுக்க அந்த பிரமாண்டத்தின் நீட்சி தேவையில்லையா? ஒரு மிகச்சிறந்த லொக்கேசனின் சாதாரணமான செல்போன் கேமராவை வைத்து படம் பிடித்தால் கூட அது பிரமாண்டமாகத்தானே தெரிய போகின்றது. இனியும் இந்த பிரமாண்டம் என்ற ஒரு வித்தையை வைத்து காலம் கடத்த முடியாது என்பதை இனியாவது ஷங்கர் உணர வேண்டும்.

மேலும், ஒரு பாடலுக்காக மட்டும் உருவாக்கப்பட்ட ஹிரோவின் விலங்கும் மனிதனும் கலந்த அந்த உருவத்தை, படம் முழுக்க கூட கொண்டு வந்திருக்கலாம். ஆனால், அந்த உருவம் படத்தின் ஆடியோ லாஞ்ச் மற்றும் ப்ரோமோவுக்கு மட்டும் தான் பயன்பட்டிருக்கின்றது. பின்னணி இசையில் கூட ரஹ்மான் ஒன்றுமே பிரமித்து சொல்லுமளவுக்கு ஒன்றும் செய்யவில்லை. படத்தில் டைட்டிலுக்கு பின்புலமாக உள்ள இந்த ”ஐ” வைரஸ், படத்தின் ஹிரோவை பாதித்ததோ இல்லையோ முதல் நாள் தியேட்டர் க்யூவில் மணிக்கணக்கில் காத்திருந்து படம் பார்த்த என்னைப்போன்ற பாமர ரசிகனை நிறையவே பாதித்க வைத்திருக்கின்றது. கண்டிப்பாக இனி இயக்குனர் Shankar இதுபோல ஒரு படத்தை மீண்டும் எடுத்து விட கூடாது. i = MOKKAi :(

- இரா.ச.இமலாதித்தன்

கோபிநாத் என்ற ஜூனியர் மேஜர் சுந்தர் ராஜன்!

ஜனவரி 12ம் தேதி நாகப்பட்டினத்திலுள்ள தனியார் கல்லூரியில் சிறப்பு விருந்தினராக பங்குபெற்று பேசிய கோபிநாத்தின் பேருரையை லோக்கல் கேபிள் சேனல்ல தொடர்ச்சியா போட்டுக்கிட்டே இருக்காய்ங்க. அப்படி என்னதான் நம்மாளு பேசினாரு பார்த்தா, மேஜர் சுந்தர்ராஜனே தோத்து போற அளவுக்கு மொதல்ல ஆங்கிலத்திலும் அடுத்து தமிழிலும் என வரிக்கு வரி மொழிமாற்றம் செய்து இப்படியே பேசிக்கிட்டு இருந்தாப்ள. ”நாக்கு தமிழ் மணக்கும் நன்னாகை”ன்னு எங்க ஊரை பத்தி பெருமையா சொல்லுவாங்க. ஆனால் Gopinath அவர்களின் மேஜர் சுந்தர்ராஜன் சாயலில் அமைந்த அந்த பேச்சை சகிக்க முடியல, இனியாது மாத்திக்கிங்கண்ணே! கோபிநாத் என்ற ஜூனியர் மேஜர் சுந்தர் ராஜனாக மாறிவிட வேண்டாம்ண்ணே!

மஞ்சி விரட்டும் சாதி தமிழனும்!

மஞ்சி விரட்டு, ஏறு தழுவதல், ஜல்லிக்கட்டு என்ற தமிழர்களின் வீரத்திற்கு அடையாளமான விளையாட்டை தங்களின் சாதியுடைய விளையாட்டுன்னு சொல்லிக்கிற எந்த சாதி அமைப்பும், அரசாங்கத்தை எதிர்த்து மூச்சுக்கூட விட மாட்டுது. ஆனால், ஊருக்கு ஒரு சாதி அமைப்பும், தெருவுக்கொரு சாதி தலைவருக்கும் பஞ்சமில்லை. இவர்களின் பதவி புகழ் போதைக்காக அப்பாவி இளைஞனுக்குள்ளுள்ள உணர்வை சாதிவெறியாக்கி அற்ப சுகம் காணும் கலச்சார காவலர்கள் போல வேடமிட்டு பேசும்-எழுதும் இந்த போலி சாதி தலைவர்களுக்கும் அரசு தடை போட்டால் நாடு வளமாகாவிட்டாலும், வறுமைக்கு ஆட்படாது.

இலங்கையும் ஈழமும்!

"அரசன் அன்றே கொல்வான்;தெய்வம் நின்று கொல்லும்!"ன்னு பழந்தமிழர் சொல்வாங்க. அரசனாக இருந்த மகிந்த ராஜபக்சே ஒரே நாளில் பல்லாயிரம் பேரை போர் என்ற பெயரில் கொன்றான். இனி தெய்வம், தேர்தலில் நின்று தோற்றதினால் கொல்லப்போகிறது. மகிந்த ராஜபக்சேவிற்கு அதிபர் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துகள் சொன்ன நரேந்திர மோடிக்கு இன்னும் அதிக பயிற்சி தேவைப்படும், இனி மைத்ரிபால சிறிசேனாவுக்கும் அடிக்கடி வாழ்த்துகள் சொல்ல வேண்டி வரும். ஏனெனில் சீன கம்யூனிஸ்ட் கட்சி 6.48 கோடி உறுப்பினர்களை சேர்த்து நிகழ்த்தியுள்ள உலக சாதனையை பா.ஜ.க. முறியடிக்கணும்ல...

மகிந்த ராஜபக்சேவோடு சுப்ரமணியசுவாமி நெருக்கமாக இருந்த போதே தெரிஞ்சிடுச்சு, மைத்ரிபால ஸ்ரீசேனாவின் வெற்றி. மேலும், பெளத்த-சிங்களவனை திருப்பதி பெருமாள் கோவிலுக்கு வரவழைத்து ஹிந்துவென கூச்சலிட்ட பா.ஜ.க.வினரின் ராஜதந்திரம் தான் இப்போது பல்லிளிக்கிறது. இனி இலங்கை உறவை மேம்படுத்தும் நோக்கில் பாரத ரத்னாவை மைத்ரிபால ஸ்ரீசேனாவுக்கும் கொடுக்க வாய்ப்பிருக்கு. ஆனால், பாவம் எம் மீனவன் 

ஆண்ட பரம்பரை!

இனியும் இந்த ’ஆண்ட பரம்பரை’ போன்ற வெற்று பெருமை பேச்சுகள் எடுபடாது. ஒழுக்கமா இரு, ஓரளவுக்கு படி, நிறையா சம்பாரி, முடிஞ்சா உன் ஆண்ட பரம்பரையிலேயே வறுமையில் வாடும் பத்து பசங்களுக்கான படிப்பு செலவை நீ பண்ணு. அது போதும், உன் பெருமையை உன் சந்ததி பேச. என்னைக்கோ, எவனோ ஆண்டதுக்கு நீ ஏன் இன்னைக்கு பெருமை பேசுற? இன்னைக்கு தமிழ்நாட்டோட முதலமைச்சரே நீ சொல்ற அதே ஆண்ட பரம்பரை தான். அதுனால நீ போய் ஓ.பி.எஸ் கிட்ட உரிமையா எதாச்சும் கேட்டு வாங்க முடியுமா? ஆண்ட பரம்பரைக்கு அடையாளமா மாத்தி வச்சு அரசியல் பண்ற பசும்பொன் தேவர் நினைவிடத்துக்கு கூட அக்டோபர் 30 அன்னைக்கு தடையில்லாம போக முடியல. இதுல இந்த ஆண்ட பரம்பரை என்ற வீண்பெருமை எதுக்கு? ஆண்டபரம்பரை மட்டும் எல்லாவற்றையும் செய்ய முடியாது. மத்த சாதி சனத்தோட அனுசரணை இல்லாமல் ஒரு அணுவும் அசையாது. எதார்த்தம் இது தான். எல்லாரையுமே சக மனுசனா பாரு. காலம் போக போக எல்லாம் மாறும். இப்போவே அரசு அலுவலங்களில் பெரிய பதவியில் இருப்பது அனைவரும் ஆண்டபரம்பரை இல்லையே. ஆனால், ஆண்டபரம்பரைன்னு சொல்லிக்கிற எல்லாரும் அந்த அரசு அலுவலர்களை ஏதோவொரு சந்தர்பத்தில் சாரு சாருன்னு கெஞ்சிக்கிட்டு தானே கிடக்க வேண்டிருக்கு. மொதல்ல நீ ஆள்றதுக்கான தகுதியை வளர்த்துக்க. அதுக்கப்பறமா இந்த ஆண்டபரம்பரை கோஷம் போடலாம்.

- இரா.ச.இமலாதித்தன்