ஐ - விமர்சனம்!


ஐ மாதிரியான மொக்கை படங்களுக்கு விகடன், குமதம், ஹிந்து என பிரபல ஊடகங்களெல்லாம் போட்டிப்போட்டு பாராட்டுவதை வாசகனாக பார்க்கும் போது, நேர்மையான விமர்சனத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விடுகின்றது. 90களில் எடுத்திருக்க வேண்டிய ஒரு படத்தை இருபது வருடம் கழித்து எடுத்து பார்வையாளனை முகம் சுழிக்க வைத்திருக்கிறார் ஷங்கர். இது ஷங்கரின் படம் போல தெரியவில்லை, பேரரசு போன்ற ஒரு கமர்சியல் இயக்குனரின் படைப்பாகதான் பார்க்க தோனுகிறது. பல லாஜிக் ஓட்டைகளையெல்லாம் இந்த ஊடகம் ஒரு வரியில் கூட சுட்டிக்காட்ட மறுப்பது ஏன் என்றுதான் புரியவில்லை. மூன்றாவது பாலினமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட திருநங்கைகளை இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் தமிழ் சினிமா காமத்திற்கும், காமெடிக்கும் பயன்படுத்தி மூன்றாம் தரத்தினர் போல இழிவுபடுத்தியே வைத்திருக்க போகின்றது என்பது இன்னமும் புரியவில்லை. திருநங்கைக்கு பதிலாக அந்த பாத்திரத்தில் இன்னொரு ஹிரோயினையே காட்சிப்படுத்திருந்தால், அந்த ஹிரோவுக்கும் - திருநங்கைக்குமான காதல்முறிவை நியாயபடுத்திருக்கலாமே?

ஹிரோவால் பாதிக்கப்பட்ட வெவ்வேறு தளங்களிலுள்ள அனைத்து வில்லன்களும் ஒரே இடத்தில் சிகரெட் பத்த வைத்து சதி திட்டம் தீட்டுவதும், பிறகு ஹிரோவுக்கு தெரியும்படியாகவே ஒரே அறையில் மது அருந்திக்கொண்டு தங்களது திட்டத்தையும், ஹிரோ மீதுள்ள கோபத்தையும் தனித்தனியாக பஞ்ச் வைத்து பேசுவதும், வில்லத்தனமாக சிரிப்பதும் இதெல்லாம் 80களில் வேண்டுமென்றால் எடுபட்டிருக்கும். ஆனால், இப்போதைய தமிழ் சினிமாவுக்கு எடுபடுமா என ஷங்கர் ஒரு முறையாவது யோசித்திருக்க வேண்டாமா?

சென்னை தமிழ் என்பதை இழிவாக திட்ட மட்டும்தான் இன்னமும் தமிழ் சினிமா பயன்படுத்தி கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த படமும் விதிவிலக்கல்ல. சென்னைத்தமிழ் பேசுவதாக சொதப்பி இருக்கும் விக்ரம் இனியாவது பம்மல் கே சம்பந்தம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் போன்ற கமலின் படங்களை பார்த்து ஒருமுறை கற்றுக்கொள்ளலாம்.
பாடி பில்டிங் ஆணழகன் போட்டியின் போது ஹிரோவை தவிர மற்ற அனைவரும் நல்ல உடற்கட்டு இருந்த போதும், தமிழ் சினிமாவின் இலக்கணம் மீறாமல் ஹீரோவே வெற்றி வாகை சூடுகிறார். கண்டிப்பாக, அந்த சீன் வரும் போது விக்ரமின் தொடை பகுதியை மற்ற பாடி பில்டர்ஸ்களோடு ஒப்பிட்டு பாருங்கள், கண்டிப்பாக நீங்களே சிரிப்பீர்கள். பாடி பில்டிங் என்பது முழு உடலையும் பில்ட் செய்வது தானே? ஷங்கரின் ஐ பட ஹிரோவுக்கு மட்டும் தொடை விதிவிலக்கா என்ன?

இங்கிருந்து பெரிய குழுவோடு சீனாவிற்கு சென்று விளம்பரத்திற்கான சூட்டிங் செய்யும் ஆட் ஃப்லிம் டைரக்டர், தமிழ்நாட்டிலேயே அந்த ஹிரோவிடம் ஒருமுறை ரிகர்சலோ, ஆடிசனோ பார்க்காமலே போவது ஏனென்று ஷங்கருக்கு மட்டுமே வெளிச்சம். ஹிரோவுக்கு தன் கனவுக்கன்னியான ஹிரோயினோடு கெமிஸ்ட்ரி வொர்க்கவுட் ஆகவில்லை என்பதற்காக ஹிரோயின் பொய்யாக லவ் சொல்வதெல்லாம் கொஞ்சம் கூட மனதோட ஒட்டவே இல்லை.  இன்னும் முக்கியமாக வசனம் என்ற பெயரில் எழுத்துகளால் வாந்தி எடுத்திருக்கும் ஷங்கர் இனியாவது அந்த பக்கம் போகாமல் இருந்தால் கொஞ்சம் நல்லாருக்கும். சுஜாதா இல்லாத குறையை சுபாக்களால் கூட நிரப்ப முடியவில்லை என்பது படத்தின் வசன வறட்சியால் புரிந்து கொள்ள முடிகிறது. பிரமாண்டம் என்ற ஒன்றை வைத்து கொண்டு பாடல் காட்சிகளில் ஃபாரின் லொக்கேஷனின் பிரமிப்பை ஏற்படுத்தினால் மட்டும் போதுமா? படம் முழுக்க அந்த பிரமாண்டத்தின் நீட்சி தேவையில்லையா? ஒரு மிகச்சிறந்த லொக்கேசனின் சாதாரணமான செல்போன் கேமராவை வைத்து படம் பிடித்தால் கூட அது பிரமாண்டமாகத்தானே தெரிய போகின்றது. இனியும் இந்த பிரமாண்டம் என்ற ஒரு வித்தையை வைத்து காலம் கடத்த முடியாது என்பதை இனியாவது ஷங்கர் உணர வேண்டும்.

மேலும், ஒரு பாடலுக்காக மட்டும் உருவாக்கப்பட்ட ஹிரோவின் விலங்கும் மனிதனும் கலந்த அந்த உருவத்தை, படம் முழுக்க கூட கொண்டு வந்திருக்கலாம். ஆனால், அந்த உருவம் படத்தின் ஆடியோ லாஞ்ச் மற்றும் ப்ரோமோவுக்கு மட்டும் தான் பயன்பட்டிருக்கின்றது. பின்னணி இசையில் கூட ரஹ்மான் ஒன்றுமே பிரமித்து சொல்லுமளவுக்கு ஒன்றும் செய்யவில்லை. படத்தில் டைட்டிலுக்கு பின்புலமாக உள்ள இந்த ”ஐ” வைரஸ், படத்தின் ஹிரோவை பாதித்ததோ இல்லையோ முதல் நாள் தியேட்டர் க்யூவில் மணிக்கணக்கில் காத்திருந்து படம் பார்த்த என்னைப்போன்ற பாமர ரசிகனை நிறையவே பாதித்க வைத்திருக்கின்றது. கண்டிப்பாக இனி இயக்குனர் Shankar இதுபோல ஒரு படத்தை மீண்டும் எடுத்து விட கூடாது. i = MOKKAi :(

- இரா.ச.இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment