ஹிந்து எனும் போலி அடையாளம்!

அஷ்டமி - நவமி ஆகாதென்று சொல்வார்கள். ஆனால், ஆரிய நிறமான சிவந்த நிறத்தை கொண்டில்லாத கருமை நிற கண்ணன்/கிருஷ்ணன் - கோகுலாஷ்டமி என்ற அஷ்டமியிலும், கருமை நிற ராமன் - ராமநவமி என்ற நவமியிலும் அவதரித்ததாக சொல்வதிலுள்ள சூட்சமம் என்னவென்று தெரியவில்லை. ஒன்று மட்டும் தெளிவாகிறது; அனைத்தையும் தன்வசம் படுத்தி ஏப்பமிடும் ஆக்டொபஸ் போல, ஆரியமும் காலம்காலமாக இம்மண்ணில் பலவற்றை ஏப்பமிட்டு வருகிறது.

சீதையால் கோழை என தூற்றப்பட்ட ராமனை கடவுளாக்கிய கம்பரை விட வால்மீகி நேர்மையாளர் என்பதை தெரிந்து கொள்ள கூட வடக்கத்திய மொழியறிவு தேவையாகிறது. நேர்மையற்ற முறையில் பல சூழ்ச்சிகளால் துரியோதனனை வீழ்த்திய கிருஷ்ணனுக்கும், வாலியை மறைந்திருந்து தாக்கிய ராமனுக்கும் பெரிய வித்தியாசமொன்றுமில்லை. தான் வாழ பிறரை கெடுப்பதுதான் இறைமொழியாயென்று சந்தேகம் எழுவதை தவிர்க்கவும் முடியவில்லை. கடவுள் போல தம் மக்கள் போற்றிய மாவலி மன்னனை, அந்தனனாய் போலி வேடம் தரித்து பிச்சை கேட்டு படுகொலை செய்த வாமனனுக்கும், கர்ணனிடம் யாசகம் கேட்டு இறப்பில்லா வரம்பெற்ற கவச குண்டலத்தை களவாடிய கிருஷ்ணனுக்கும் வித்தியாசமொன்றுமில்லை.

ஆரிய அகராதிகளில் துரோகம் தான், தர்ம புண்ணியமாக கணக்கிடப்படுகிறது. தமிழனெல்லாம் அரக்கனாக சித்தரிக்கப்படுகிறான். இந்த ஆரிய அட்டூழியங்களை ஒழிக்க வந்த 24ம் தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரரின் இறப்பை தீபாவளி ஆக்கியதோடு மட்டுமில்லாமல், அவரையே நரகாசுரனாக்கி நயவஞ்சக தீயை மூட்டி குளிர் காய்வதும் இதே ஆரியம் தான். இன்னும் எவ்வளவோ இருக்கு ஆரிய சூழ்ச்சி. வேற வழியில்லை. சிக்குண்டோம், ஹிந்து, ஹிந்தியா, ஹிந்தியென... உலக மொழிக்களுக்கெல்லாம் தகப்பன் மொழியான எம் தாய்மொழி தமிழை நீஷபாஷையென சொல்லி அழிக்க காலம்காலமாய் போராடும் தேவபாஷை சமஸ்கிருதமும் இம்மண்ணில் வாழ்ந்துவிட்டு போகட்டும், துரோகத்தின் எச்சமாய்!

- இரா.ச. இமலாதித்தன்

திருவள்ளுவர் சமணரா? திருக்குறள் சமண நூலா?!

”ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” - முதுமொழி

பல்லுக்கு உறுதி தரக்கூடியவைகளில், ஆலமர குச்சியும், வேப்பமர குச்சியும் எந்தளவுக்கு உண்மையோ, அதுபோலவே நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதியென சொல்லிருக்கிறார்கள். இங்கே ”நாலும் இரண்டும்” என்பதில், நாலும் என்பது நான்கு அடிகளை கொண்ட நாலாடியாரும், இரண்டும் என்பது இரண்டு அடிகளை கொண்ட திருக்குறளும் குறிப்பிடப்படுகிறது. மேலும், நாலடியாருக்கும் திருக்குறளுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. அதை என்னால் முடிந்தளவுக்கு சிறிய ஒப்பீடு செய்திருக்கிறேன். அவை;

01. இந்த இரண்டுமே பதினென் கீழ் கணக்கு நூல்களில் இடம்பெற்று இருக்கின்றன.

02. இந்த இரண்டிலுமே, பாடல்களெல்லாம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன.

03. இந்த இரண்டு அறநூல்களுமே, அறத்துப்பால் - பொருட்பால் - இன்பத்து பால் என்ற மூன்று பெரும்பிரிவுகளை கொண்டுள்ளன.

04. நாலடியாரில், அறத்துப்பால் - 13 அதிகாரங்களும், பொருட்பால் - 24 அதிகாரங்களும், இன்பத்துப்பால் - 3 அதிகாரங்களுமென ஆகமொத்தம் 40 அதிகாரங்களை கொண்டுள்ளது.

05. திருக்குறளில், அறத்துப்பால் - 38 அதிகாரங்களும், பொருட்பால் - 70 அதிகாரங்களும், இன்பத்து பால் - 25 அதிகாரங்களுமென ஆகமொத்தம் 133 அதிகாரங்களை கொண்டுள்ளது.

06. நாலடியார், மொத்தமாக 40 அதிகாரங்களை கொண்டது; அதிகாரத்திற்கு 10 பாடல்கள் என்ற வீதத்தில் 400 பாடல்களை தன்னகத்தே கொண்டுள்ளது. திருக்குறள், 133 அதிகாரங்களை கொண்டது; அதிகாரத்திற்கு 10 பாடல்கள் என்ற வீதத்தில் 1330 பாடல்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

07. இந்த இரண்டிலுமே, பொருளுக்கு அதிகமான பாடல்களும், அதற்கடுத்து அறத்திற்கு ஓரளவு மிதமான பாடல்களும், மூன்றாவதாக இன்பத்திற்கு குறைவான பாடல்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

08. இதிலுள்ள, நாலடியார் என்ற நூலை இயற்றியது சமண முனிவர்கள் என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒன்று. அதுபோலவே திருக்குறளை இயற்றியதும் சமண மதத்தை சார்ந்த திருவள்ளுவர் என்று அழைக்கப்படும் ஒரு சமணத்துறவி தான் என்பது என் அனுமானம்.

- இரா.ச.இமலாதித்தன்