இணைய போராளிகளுக்கிடையில் ஈழம்!

ஈழத்தமிழர்களுக்காக ஃபேஸ்புக் போன்ற சமூக இணையங்களில் புரட்சிகரமாகவும், உணர்ச்சிகரமாகவும் எழுதும் பலர், ஈழம் சார்ந்த எந்தவொரு போராட்டக்களங்களிலும் நேரடியாக கலந்து கொள்ளதவர்களாகவே இருக்கின்றனர் என்பதுதான் எதார்த்தம். இவர்களின் உணர்வு சற்றும் குறைவானதில்லை என்றாலும் கூட, அந்த உணர்வை மற்றவர்களுக்கு திணிப்பதில் மட்டுமே கவனம் செலுத்திவிட்டு, இவர்கள் லாவகமாக ஓய்வெடுத்து கொள்கின்றனர்.

வெறும் எழுத்துகளால் மட்டுமே ஒரு இனத்தின் லட்சியம் வெற்றி பெறுவதில்லை; அதன் நீட்சியாக அனைவரும் களத்திற்க்கு வரும்போதுதான் அந்த போராட்டம் முழுமையடைந்து, வெற்றிக்கான வழிகளும் விரிவடைகின்றது.

தாங்கள் அறிவுஜீவிகள் என்ற அளவீடோடு இணையத்தில் மட்டுமே பக்கம் பக்கமாய் எழுதி செல்வது, சிலரது அன்றைய நாளின் உணர்வை மட்டுமே தட்டியெழுப்புமே தவிர வேறெதையும் செய்துவிடாது. அடுத்த நாள் அனைவரது கவனமும் அடுத்த வேறொரு பதிவை நோக்கி நகரும். போராட்டக்களத்தின் வடிவம் எதுவாகினும் அது தொடர்ச்சியாக செல்லக்கூடிய மாதிரியான நீண்டகால வடிவமைப்பை பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் அந்த போராட்டம் முழுமையாகவும், விரைவாகவும் வெற்றிப்பெறும் என்பதே எதார்த்தம். எனவே, எழுத்துகளால் மட்டுமே புரட்சி செய்யாமல், கொஞ்சம் களத்திற்கும் வர முயற்சி செய்யுங்கள். இங்கே சொல்லப்பட்ட அனைத்து விமர்சனத்திற்க்கும் யாரும் அப்பாற்பட்டவர் கிடையாது நான் உள்பட.

தமிழர்களின் தாகம்! தமிழீழ தாயகம்!

- இரா.ச.இமலாதித்தன்

+2 முதல் வேலை வரை!

2002ம் வருசம் +2 எக்ஸாம் எழுதிட்டு எப்படியாவது பாஸ் ஆகிடணும்ன்னு, குலதெய்வம் கோவிலான வேதாரண்யம் - கருப்பம்புலம் அருகிலுள்ள கடிநெல்வயல் வேம்புடையார் என்ற வேம்படி ஐயனார்கிட்ட எப்படியெல்லாம் வேண்டிக்கிட்டேன் என்பதை இப்போ நினைச்சாலும் சிலிர்ப்பாதான் இருக்கு. எப்படியோ என்குலசாமி ஐயனார் என்னை பாஸ் பண்ண வச்சிட்டாரு.

பள்ளி, கல்லூரிகளில் நன்றாக படித்த பலர் வாழ்க்கையில் வெற்றியடைந்திருக்கின்றார்கள். ஆனால், அவர்களை விட சுமாராக படித்து வருடமொருமுறை வகுப்பறைகளை சம்பிரதாயத்திற்காக கடந்த பலரே வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கின்றார்கள். அதனால், படிக்கும் காலத்தில் எடுக்கும் மதிப்பெண்களை வைத்து மட்டுமே, யாருடைய வருங்கால வெற்றிகளையும் கணித்துவிட முடியாது. எனவே, +2ல் ஜஸ்ட் பார்டர்ல பாஸ் ஆன அனைவருக்கும் என் வாழ்த்துகள்!

10ல 348
12ல 677
இதுதான் அடியேனின் பள்ளிக்கால பொதுத்தேர்வு வரலாறு!


+2 தேர்வு முடிவுகள் வந்ததிலிருந்து மாணவர்களை கவர அனைத்து நாளிதழ்களும் கல்லூரி சேர்க்கை விளம்பரத்தையே முன்னிறுத்தி கொண்டிருக்கின்றன. ஆனால், மூன்று - நான்கு வருடங்களுக்கு முன்பாக இதே மாதிரியான விளம்பரத்தை பார்த்து ஏதோவொரு கல்லூரியில் இன்றைக்கு படிப்பை முடித்த பலரும், அதே நாளிதழின் ஏதாவதொரு மூலையில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் வேலைவாய்ப்புக்கான விளம்பரத்தை தேடிக்கொண்டிருக்கின்றார்கள். இந்த எதார்த்தம் புரியாத, பெரும்பாலான பள்ளி மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர செம்மறிஆட்டு கூட்டம் போல அருகிலுள்ள கல்லூரிவாசலில் தவமிருக்கின்றனர்.

- இரா.ச.இமலாதித்தன்

உச்சநீதிமன்றமும் தமிழனும்

ஜல்லிக்கட்டு, மீனவர் பிரச்சனை, நதிநீர் பங்கீடு உள்ளிட்ட தமிழர் நலம் சார்ந்த எந்தவொரு பிரச்சனையிலும் உச்சநீதிமன்றத்திடமிருந்து நீதியை எதிர்பார்க்க முடியாது என்பதற்கு இன்றைய நாளும் ஓர் உதாரணம்!

கூடன்குளம் அணு உலைக்கு எதிரான மனுவும் தள்ளுபடி!
ஊருக்கொரு அமைப்பு வைத்து இனத்தை காக்க வந்தவர்களாக அவதாரமெடுத்துள்ள தலைவர்கள் அனைவரும், ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து என்ன செய்வார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்; மிஞ்சிப்போனால் கண்டன போஸ்டர்களோடு இவர்களது போராட்டம் நின்றுவிடுமென்று நினைக்கின்றேன். பார்க்கலாம்...

-இரா.ச.இமலாதித்தன்

ஜல்லிக்கட்டோடு மல்லுக்கட்டும் ஆரியம்!

தமிழர்களின் பாரம்பரியத்தை ஒவ்வொன்றாக அழித்தொழிக்கும் செயல்களை காலம்காலமாக செய்துவரும் ஆரியத்தின் வெற்றியாகவே, ஜல்லிக்கட்டு மீதான தடையென்ற உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பை நாம் பார்க்க வேண்டும். வீரம்செறிந்த மறத்தமிழர்களின் வீரவிளையாட்டான ஏறு தழுவதல் என்ற ஜல்லிக்கட்டானது, பண்டையகாலம் தொட்டே தமிழர்களிடையே நடைபெற்றுவரும் கலச்சாரம் சார்ந்த பண்பாட்டு நிகழ்வு. இதை இன்றைக்கு விலங்குகளுக்கு பாதுகாப்பில்லை என்ற பொய்யான பரப்புரையை புதிதாக கையில் எடுத்து, அதில் வெற்றியும் கண்டிருக்கின்றது ஆரியம்.

அசுவமேத யாகம் என்ற பெயரில் பசுக்களை நெருப்பிலிட்டு கொலை செய்யலாம். அதே மாடுகளை பீப் கறிக்காக அடிமாடாக விலைக்கு விற்கலாம். ஆனால், வருடம் ஒருமுறை பாரம்பரியத்தின் நீட்சியாக அதே பசுவை கெளரவிப்பதற்காக் விழா எடுத்து, ஏறுதழுவதல் என்ற ஜல்லிக்கட்டை நடத்தினால் தடை! தமிழன் மாடுகளை மனிதனை விட உயர்வாக நினைக்கும் கூட்டம் என்பதை மறந்து விடுகின்றார்கள்.


ஆடு, மாடுகளை தன் குடும்ப உறவுகள் போல பேணி காத்து, ஒரு ஆட்டுக்குட்டியோ, கன்று குட்டியோ இறந்தால் மூன்றுநாள் துக்கத்தில் பட்டினியாக கிடக்கும் இரக்க குணம் கொண்ட என் தமிழினம், எப்படி அவ்விலங்கினத்தை துன்புறுத்தும்? ஒருவேளை துன்புறுத்துவது உண்மையென கொண்டால் கூட, அதை கட்டுபடுத்த தானே முதலில் முயற்சி எடுத்திருக்க வேண்டும்? அதை விட்டுவிட்டு ஒட்டுமொத்தமாக ஓரினம் சார்ந்த அடையாளத்தையே தடை செய்வது எவ்வகையில் நியாயமான தீர்ப்பாக இருக்கும்?

விலங்கை கூட குடும்பத்தில் ஒருவர் போல முக்கியத்துவம் கொடுத்து அன்பு செலுத்தும் பண்பை இன்றைக்கும் ஒவ்வொரு கிராமங்களிலும் நேரடியாக பார்க்க முடியும். அப்படிப்பட்ட அன்பிற்கு அடிபணியும் வீரம்செறிந்த கூட்டமான என் சக தமிழர்கள், ஈழத்தில் கொத்து கொத்தாக லட்சக்கணக்கில் கொலை செய்யப்பட்ட போது, இன்றைக்கு விலங்கிற்காக போலியாக நீலிக்கண்ணீர் வடிக்கும் இதே ஆரியம் தான், ஆயுதம் கொடுத்து தமிழினத்தை அழிக்க உதவியது என்பதுதான் தமிழனின் சோக வரலாறு. மேலும், தமிழனை ஒரு மனிதனாக கூட பொருட்படுத்தாமல், விலங்கிற்கு கொடுக்கும் முக்கியவத்தை கூட கொடுக்காமல் பலிவாங்கிய ஆரியத்திற்கு, தமிழனின் உயிர் என்பது விலங்கை விட மலிவானதாகி போய் விட்டது என்பதையும் ஒவ்வொரு தமிழனும் உணர வேண்டும். ஆரிய சூழ்ச்சியின் நீட்சியாக தமிழனின் அடையாளம் ஒவ்வொன்றாக சிதைக்கப்படுவதற்கு பாரம்பரிய ஜல்லிக்கட்டு தடையும் ஓர் உதாரணம் என்பதை, ஒவ்வொரு தமிழனும் புரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் அவசியமாகிறது.

ஹரப்பா - மெகஞ்சோதரா யென்று பழங்கால நாகரீகத்தை பற்றி பெருமை பேசும் தமிழரல்லாத பலருக்கும், அன்றைய நாகரீக காலத்தில் தோன்றிய காளையை அதே பாரம்பரிய இனப்பெருக்க ஜீன்களோடு கலப்பில்லாமல் வளர்த்து, இன்றைக்கும் பண்டைய பாரம்பரிய அடையாளத்தை பாதுகாத்து வருவது என் தமிழினம் என்பதை வசதியாக மறந்துவிடுகின்றனர்!


ஆடு மாடுகளுக்காகவே வருடத்தில் ஒரு நாள் மாட்டு பொங்கல் வைத்து விழா காண்கின்ற பண்பாட்டு தமிழன், ஆடு மாடு இறந்தால் ஊரையே கூட்டி ஒப்பாரி வைத்து மூன்றுநாள் பட்டினியாக கிடக்கும் பாசக்கார தமிழன், பசுவையே தெய்வமாக வணங்கும் பாரம்பரிய தமிழன், ஜல்லிக்கட்டின் போது வாடியில் இருந்து வெளியே வந்து பத்து நிமிடம் யாரும் அடக்க முடியாத அளவுக்கு திமிராக களம்காணுவதற்காகவே, வருடம் முழுவதும் தீணி போட்டு வளர்க்கும் வீர்ம்செறிந்த தமிழனா, மாட்டை கொடுமைப்படுத்த போகிறான்?

உணர்வில்லா உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம், கேராளவிற்கு அடிமாடாக போகும் மாடுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த போகின்றதே தவிர வேறொன்றும் புரட்சி நடந்துவிட போவதில்லை. போராட்ட குணத்தையே மறந்து போன எம்மினத்தான் என்ன செய்ய போகிறான் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சக தமிழனாக, இன்றைய ஜல்லிக்கட்டு தடையென்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின் மீது வெறுப்பும் - கோபமும் - ஏமாற்றமும் மட்டுமே என்னுள் மிஞ்சி நிற்கிறது.
- இரா.ச.இமலாதித்தன்

டெல்டா போராளிகள்!

1943ல் தேசத்தந்தை நேதாஜியை சிங்கப்பூரில் சந்தித்து இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து, பின்னர் பயிற்சியாளராக உயர்ந்தவர். மலேசியாவில் தொழிலாளர் ஒடுக்குமுறைக்கு எதிராக "இளைஞர் தற்கொலைப் படை” ஒன்றை நிறுவி, இளைஞர்களுக்கு கொரில்லா பயிற்சியும் துப்பாக்கிச்சுடும் பயிற்சியும் கொடுத்தவர். எங்கள் ஒருங்கிணைந்த தஞ்சை மண்ணான டெல்டா மாவட்டங்களில் சுதந்திரத்திற்கு பின்னாலும் வேறூருன்றிருந்த தலித் விரோத ஆதிக்க போக்கை அன்றைக்கே எதிர்த்து கம்யூனிசத்தை வளர்த்தெடுத்தவர். 

 அந்த மாவீரன் யார் தெரியுமா?
 
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், வாட்டாக்குடி கிராமத்தில் இராமலிங்கத்தேவர் - தையல் அம்மாளுக்கு, 1920 நவம்பர் 15 அன்று வெங்கடாச்சலம் என்ற இயற்பெயரோடு பிறந்த மாவீரன் வாட்டாக்குடி இரணியன், தனது 30வது வயதிலேயே விவசாயிகளின், தொழிலாளர்களின் உரிமைக்காகப் பாடுபட்டதன் விளைவாக காவல்துறையால் கொல்லப்பட்ட தினம் இன்று. (05.05.1950)

மேலும், டெல்டா பகுதியில் ஜமீன்தாரி/பண்ணை ஒழிப்பை கொண்டுவந்து அப்பாவி தலித் மக்களை காத்ததால், வாட்டாக்குடி இரணியன் மட்டுமல்ல; ஜாம்பனோடை சிவராமனையும் சேர்த்து இருபெரும் பொதுவுடைமை போராளிகளை ஒரேநாளில் காவல்துறையால் கொல்லப்பட்ட தினம் இன்று மே 5 1950. இம்மாவீரர்கள் சாதியால் (அகமுடையார் - தேவர்) ஆதிக்கவாதிகள்; ஆனால், செயலால் பொதுவுடைமை வாதிகள்!

டெல்டாவின் இருபெரும் மாவீரர்களுக்கு அடியேனின் வீரவணக்கம்!

- இரா.ச.இமலாதித்தன்