30 மே 2017

எல்லாவற்றிக்குள்ளும் ஒரு செய்தி இருக்கிறது!

நிகழ்வு: 01

இந்த மூன்று நடிகைகளின் சந்திப்புகளை கவனிக்கும் போது, கமல்ஹாசனின் மேனாள் துணைவியும், #LifeAgainFoundation என்ற உலகளாவிய தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவருமான கெளதமி மட்டுமே அடக்க ஒடுக்கமாய் அமர்ந்திருப்பது போல தெரியும்.

illusion!




நிகழ்வு: 02

#DravidaNadu என்ற ட்ரெண்டிங் மலையாளிகளின் ஆதரவால் ட்விட்டரில் மிக பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. அப்போது கவனித்த திராவிடநாடு என்ற பெயரிலுள்ள இரு ப்ரோபைல்களை இங்கே இணைத்திருக்கிறேன். அதிலுள்ள ஒரு ப்ரோபைலின் முகப்பு படத்தின் லோகோவில், ஆப்பிளும், நாகமும், ஏழு கண்களும், முக்கோண வடிவத்திற்குள் இருப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.









நிகழ்வு: 03

விரைவில்... உங்கள் ViJAY டிவியில் BiGG BOSS.
ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது.
i WiLL BE WATCHiNG!




நிகழ்வு: 04

ஐ!

இந்த இரு படங்களில் மட்டுமில்லாது இந்த இரு நிகழ்வுகளுக்கு பின்னாலும் ஏகப்பட்ட குறியீடுகள் இருக்கின்றன.

27 மே 2017

சைவம்? அசைவம்!


எந்த கடவுளும் நேரடியாக வந்து, இதை சாப்பிடு; அதை சாப்பிடாதே என யாரிடமும் சொல்லவில்லை. தட்பவெட்ப சூழ்நிலைக்கு ஏற்ப, அந்தெந்த பகுதிகளுக்கேற்ப கிடைக்கும் அனைத்தையும் சாப்பிட்டு பரிணாம வளர்ச்சியடைந்தவன் மனிதன் தான். அதன் பிறகு பகுத்தறிந்து இதை சாப்பிடலாம்; அதை சாப்பிட வேண்டமென்று பட்டியலிட்டதும் இந்த மனிதன் தான்.

"புல்லாகி, பூடாகி, புழுவாய், மரமாகி
பல்விருகமாகி பறவையாய், பாம்பாய்
கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்
வல் அசுரராகி, முனிவராய், தேவராய் செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்'' என திருவாசகத்தில் மாணிக்கவாசகர் சொல்கிறார்.

'வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்' என சொன்ன இராமலிங்க அடிகளாரின் சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் கீரையை கூட சாப்பிடுவதில்லை; காரணம் கீரையை வேர் வரை பிடிங்கி ஓர் உயிரை சாகடித்து உண்பதால் அம்மார்க்கத்தினர் அதை உணவில் சேர்ப்பதில்லை. மாடு மட்டுமல்ல; மாடு சாப்பிடும் புல் கூட ஓர் உயிர் தான். அந்த மாட்டின் ரத்தத்தின் ஒருபகுதியான பால் கூட அசைவம் தான்.

எனவே கடவுளின் பெயரைச்சொல்லியோ, மதவாதிகளின் ஆதரவிற்காகவோ, எதையும் அதிரடியாக தடை செய்வதில் உடன்பாடில்லை. இவ்வுலகில் 'உணவுச் சங்கிலி' என்பது சரியான விகிதத்திலேயே தான் இயற்கையால் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. ஒன்றின் தேவை அதிகமானால், அந்த தேவைக்கான உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமே தவிர, அந்த தேவையையே முடக்க கூடாது. உலகளாவிய அளவில் மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஹிந்தியா இரண்டாம் இடத்தில் இருப்பதை கவனித்தாலே, தடை செய்ய வேண்டியது எதுவென புரியும். வணிக சூழ்ச்சிகளால் சூழப்பட்ட உலகமயமாக்கலில் இனப்பெருக்கம் என்பதை கூட மேற்கத்திய நாட்டவன் கொடுக்கும் ஊசியை நம்பி வாழ பழகி விட்டோம். எனவே, நாம் இப்படித்தான் கருத்தடை, பலித்தடையென தடை போட்டு நம் வீரியத்தை தொலைத்து, கண்டவனிடமும் ஜெர்சி மாடுகளை போல இனி வருங்கால சந்ததி உள்பட எல்லாவற்றையும் யாசகம் தான் பெறுவோம்.

மாட்டின் கொம்புகளுக்கு கூட வண்ணம் தீட்ட கூடாதென்று தடை போடும் காரணத்தை கூட ஏனென யாரும் கேட்டதாக தெரியவில்லை. ஒருவேளை கொம்புகளுக்கு வண்ணம் பூசினால் மாடு இறந்துவிடுமா? ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு கொம்புக்கு வண்ணமடித்தால் தானே தனி மிடுக்கே வரும்? இதெல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். இன்னைக்கு மாட்டுக்கு தடை போட்டதும் மனமகிழ்கிறோம். ஒருவேளை ஜெயலலிதாவின் அறிவிப்பு போல, நாளை நம் குலசாமி கோவில்களில் பலியிடும் ஆட்டையும், சேவலையும் தடை போடும் சூழல் வரும் போது தான், அதன் தேவை புரியும். மாட்டுக்கறிக்காக எதையும் இங்கு சொல்லவில்லை; மாட்டுக்கறியெல்லாம் சாப்பிடும் பழக்கமும் எனக்கில்லை.

- இரா.ச. இமலாதித்தன்

26 மே 2017

காலா - குறிப்பிடும் குறியீடு என்ன?


கரிகாலனை ஏன் கொன்றார்கள்? யார் தூண்டுதலில் கொன்றார்கள்? என்பதே புரிந்து கொள்ள முடியாத பெரிய கதை. அண்ணன் பிரபாகரனுக்கும் இதே பெயர் உண்டு. கபாலியும், காலனும் அழிக்கும் கடவுளின் பெயர்களே; காலா என்பது கருமையையும் குறிக்கிறது. இப்படிப்பட்ட பல குழப்பத்திற்கு இடையே, அந்த பெயரில் ரஜினியை வைத்து என்ன செய்ய போறாப்ளயோ, 'குறியீடு' ரஞ்சித்?! ஒருவேளை ரஜினி சொன்ன அந்த அக்கப்'போர்' இது தான் போல!

காலா (கரிகாலன்)



மலேசியாவில் தொழிற்சங்க சம்மேளத்தின் தலைவராக இருந்து, சீன/தமிழ் தொழிலாளர்களுக்குள் சம்பள முறையில் ஏற்றத்தாழ்வு இருந்ததை எதிர்த்து களம் கண்டவர் தான் அகமுடையார் இனக்குழுவை சேர்ந்த தம்பிக்கோட்டையின் 'மலேயா' கணபதி தேவர். நேதாஜி உருவாக்கிய ஐ.என்.ஏ.விலும் பயிற்றுனராகவும் பணியாற்றியவர். பிரித்தானிய அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் இறங்கியதாகவும், சட்டத்திற்குப் புறம்பாக ஒரு கைத்துப்பாக்கி, ஆறு சுற்றுத் துப்பாக்கிக் குண்டுகளையும் வைத்திருந்தார் என்றும் மலேயா கணபதியின் மீது குற்றம் சாட்டப்பட்டது. கோலாலம்பூர் நீதிமன்றம் மலேயா கணபதிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இவரின் வரலாற்றை ஓரளவுக்கு தழுவித்தான், தலித்திய சிந்தனையோடு 'கபாலி' திரைப்படமாக ஏற்கனவே உருவாக்கினார் பா.ரஞ்சித். அந்த படத்தில் கோட் ஷூட்டெல்லாம் ரஜினி போட்டிருந்தார்.

இப்போது மீண்டும், இந்த போஸ்டரில் ரஜினியை கைலி கட்ட வைத்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித். அநேகமாக இதை பார்க்கும் போது, பட்டியல் சாதி மக்களுக்காக தன் சொந்த சாதியான அகமுடையார் பண்ணையார்களையும், பண்ணையடிமை தனத்தையும் எதிர்த்து களம் கண்ட பொதுவுடைமை போராளிகளான வாட்டக்குடி இரணியன் தேவர் மற்றும் மணலி கந்தசாமி தேவரின் போராட்ட வாழ்க்கையைத் தான் கதைக்களமாக உருவாக்கி இருக்கக்கூடுமென நினைக்கிறேன். ஒருவேளை இப்படி இல்லாமல் கூட போகலாம்; ஆனால் அதற்கான தரவுகளை மணலி கந்தசாமி, வாட்டக்குடி இரணியன், ஜாம்பனோடை சிவராமன் போன்ற அகமுடையார் இனக்குழுவை சேர்ந்த இப்போராளிகளின் கதையை தழுவித்தான் பொதுவுடைமை தனத்தை திரைப்படமாக்க முடியும்.

(கபாலி படம் தொடங்கப்பட்ட போது கூட, அந்த படத்தின் கதை மலேயா கணபதி தேவரின் கதையை தழுவிய படம் தானென்று ஆரம்பத்திலேயே முகநூலில் பதிவிட்டு இருந்தேன். அப்போது அதை விமர்சித்த பலரும், கபாலி படம் வந்த பின்னால், மலேசியா நாளேடுகளும், மலேசியா தொழிலாளர் போராட்டத்தை பற்றி விவரமறிந்தவர்களும், மலேயா கணபதி தான் 'கபாலி' கதையின் நிஜ ஹீரோ என சொன்ன பின்னரே என் மீதான விமர்சனத்தை நிறுத்திக்கொண்டனர்.)

- இரா.ச. இமலாதித்தன்

#Guess #அகமுடையார்




1956ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி நாக்பூரில், பீம்ராவ் அம்பேத்கர் தனது ஐந்து லட்சம் ஆதரவாளர்களோடு அதிகாரப்பூர்வமாக விழா எடுத்து பௌத்த சமயத்திற்கு மாறினார். ஆனால் ஹிந்தியாவை பொறுத்தவரை சமணம், பெளத்தம் என்ற எல்லாமே ஹிந்து என்ற ஒற்றை அடையாளத்திற்குள்ளாகவே அடைபட்டு விடும் என்பது இயக்குனர் ரஞ்சித்திற்கு தெரியாமல் இருக்க போவதில்லை. ஆனால், இதிலுள்ள இரண்டு குறியீடுகளை மையப்படுத்தியே ரஜினி + ரஞ்சித் மீண்டுமொரு கூட்டணியில் 'காலா' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.

தலித்திய சிந்தனையாளரான ரஞ்சித்திற்கு, மராட்டியரான ரஜினி இரண்டாம் முறையும் கிடைத்திருக்கிறார். ஏற்கனவே அகமுடையார் இனக்குழுவை சேர்ந்த 'மலேயா' கணபதி தேவர் என்ற தொழிற்சங்க போராளியின் கதையை ரெஃபரன்சிற்காக உள்வாங்கி, 'கபாலி' என்ற தலித்தியவாதியாக ரஜினியை உருமாற்றி திரைக்கதை அமைத்திருந்தார். இப்போது கடல் கடந்து போகாமல், ஹிந்தியாவிற்குள்ளாகவே கடலோரமாக மும்பை வரை பயணித்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித். இந்த 'காலா' கதைக்கள பின்னணி, ரஜினியின் பூர்வீக பூமியான மராட்டியத்திலேயே இருப்பதாக போஸ்டரின் மூலம் அறிய முடிகிறது. இங்கேயும் ரெஃபரன்சிற்கு வரதாபாய் என்ற அகமுடையார் இனக்குழுவை சேர்ந்த வரதராஜ முதலியாரே ரஞ்சித்தின் தலித்திய கதைக்கருவிற்கு தேவைப்படுவார்.

என்னதான் அம்பேத்கரியம் பேசினாலும் கடைசியில் கபாலி திரைப்படமானது பறையர் இனக்குழுவிற்கான அடையாளப்படம் போல சமூக ஊடகங்களில், அச்சாதியை சார்ந்தவர்களே பரப்புரை செய்தனர். இப்போது மீண்டும் நீலமும், கருப்பும், சிவப்பும் வண்ணக்குறியீடுகளோடு காலாவை வெளிக்கொண்டு வந்தாலும், அது மற்றுமொரு கபாலியின் நீட்சியாகவே சம்பந்தப்பட்ட பலராலும் பரப்புரை செய்யப்படும். இதிலுள்ள சிக்கல் என்னவெனில், மராட்டியரான ரஜினியை மள்ளரியம் பேசும் நபர்களால், கெய்க்வாட் என்ற பட்டம் கொண்ட அவர் சார்ந்த சாதியான குர்மியை, தமிழ் குடும்பர் என்ற பட்டத்தோடு இணைத்து தேசிய அளவிலான மள்ளரியம் பேசத்தொடங்கி பல ஆண்டுகள் கடந்து விட்டன. இப்போதைக்கு உலகளாவிய மள்ளரியம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது வேறு கதை; நிற்க.

ஏற்கனவே மெட்ராஸில் மஞ்சள்Xநீலம் குறியீடு வைத்ததால் வட மாவட்ட இளைஞர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. இப்போது பர்ஸ்ட்லுக் போஸ்டரிலேயே, கரிகாலன், சிவப்பு, கருப்பு, அம்பேத்கர், பெளத்தம், மும்பை, தாராவி, மராட்டியம் என பல குறியீடுகள் தென்படுவதால், இனிவரும் விமர்சனங்களையெல்லாம் எப்படி சமாளிக்க போகிறார் என்பதை காலம் தான் பதில் சொல்லும். பார்க்கலாம்; காலா வரட்டும்.

- இரா.ச. இமலாதித்தன்

24 மே 2017

பொதுவெளியில் நாம் தமிழராக இருப்போம்!


தமிழ், தமிழரென பேசும் திரு.சீமானை அந்த தமிழர்களே ஏற்கவில்லையென தமிழரல்லாத கே.டி.ராகவன் சொல்லிருக்கிறார். சினிமா இயக்குனர் என்பதுதான் திரு.சீமானின் அடையாளமென்றும் சொல்லிருக்கிறார்; பூநூல் மட்டுமே அரசியல் அடையாளமாக இருக்க வேண்டுமென நினைக்கும் பொதுபுத்தியில் செருப்பால் அடித்து, களம் காணும் திரு.சீமான் எத்தனையோ இளந்தமிழர்களை நாம்தமிழராக இயக்கி கொண்டிருக்கும் தமிழ் இயக்குனர் தான் என்பதில் எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியே. வா, போ என பேசுவதுதான் தமிழ் கலாச்சராமாயெனவும் கே.டி.ராகவன் கேட்டிருக்கிறார். அன்பு அதிகமுள்ள உறவுமுறைகளுக்குள் வா, போ மட்டும் தான் இருக்கும். இந்த ஆண்டான் அடிமை தன்மையை உருவாக்கிய ஆரிய வந்தேறிகளின் வர்ணாசிரமம் இங்கே இல்லாமல் இருந்திருந்தால், இதே வா,போ என்ற ஒருமைதான் இம்மண்ணில் இன்றும் உயிர்ப்போடு அன்பின் அடையாளமாய் மாறியிருக்கும்.

தென் தமிழகத்திலுள்ள தன் சொந்த ஊருக்குட்பட்ட தொகுதியை விட்டுவிட்டு, வட தமிழகத்திலுள்ள மேனாள் அமைச்சர் தொகுதியில் ஒரு வோட்டுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்கள் பட்டுவாடா செய்யப்பட்ட சூழலில், தன் மக்களிடமே பணம் வசூலித்து களம் கண்ட திரு.சீமான் தோற்றதில், அவருக்கு எந்த இழப்புமில்லை. தமிழனுக்காக போராடிய திரு.சீமானை, அந்த தமிழர்களே ஏற்றுக்கொள்ளாமல் தோற்கடித்து விட்டனர் என தொலைக்காட்சி விவாதங்களில் கண்டவனெல்லாம் பேசும் நிலைக்கு ஆளாக்கி விட்டோமேயென நினைத்து அத்தொகுதியின் வாக்களர்கள் தான் வருத்தப்பட வேண்டும்; ஏனெனில் இது அவர்களுக்கான தோல்வி. திரு.சீமான் பேச்சுக்காகவே கூட்டம் கூட ஆயிரக்கணக்கான பேர் இங்குண்டு. ஆனால் ராகவன் போன்றோர்களின் பேச்சைக்கேட்க கூட இம்மண்ணில் ஆளில்லை என்பதே எதார்த்த களநிலவரம். மாற்றுக்கருத்துகளும், விமர்சனங்களும் கூட திரு.சீமான் மீது சிலருக்கு இருக்கலாம். ஆனால் பொதுவெளியில் தமிழர் போலவே இயங்கி கொண்டிருக்கும் தமிழரல்லாதவர்களிடம் எப்போதுமே அண்ணன் சீமானை விட்டுக்கொடுக்க கூடாது; நாம் தமிழர்!

- இரா.ச. இமலாதித்தன்

20 மே 2017

தா.கி.யும் திமுகவும்!




சிவகங்கை மாவட்டத்திலுள்ள கொம்புக்கரனேந்தல் எனும் ஊரில் 10.02.1937ல் அகமுடையார் இனக்குழுவில் பிறப்பெடுத்த மேனாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் தா.கிருட்டிணன், தி.மு.க.வின் தென்மண்டல அடையாளமாக திகழ்ந்தவர். இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், அதனை தொடர்ந்து சட்டபேரவை உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றிய இவரை 'தா.கி' என்றே அழைக்கலாயினர்.

சிவகங்கையின் மாவட்டச் செயலாளராக தனது ஆதரவாளர் சிவராமனைக் கொண்டு வர அழகிரி கடும் முயற்சி செய்தார். இதற்கு தா.கி முட்டுக்கட்டையாக இருந்தார். இதுபோன்ற பல விசயங்களில் கட்சி வளர்ச்சிக்காக அழகிரியின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்திய தா.கி.யை ஒழித்துக்கட்ட வேண்டுமென அழகிரி நினைத்தார். தென் தமிழகத்தில் தா.கி.யின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாத மு.க.அழகிரியின் தூண்டுதலால் அவரது கூலிப்படையினர் வெட்டிக்கொலை செய்த நாள் இன்று; சரியாக பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பாக 20.5.2003ல் மதுரையில் தா.கி. கொலை தொடர்பாக மதுரை அண்ணாநகர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து மு.க.அழகிரி, மேனாள் துணை மேயர் மன்னன், திமுக செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார். கோபி, தி.மு.க நிர்வாகிகள் முபாரக் மந்திரி, கராத்தே சிவா உள்ளிட்ட 13 பேரைக் கைது செய்து வழக்குத் தொடர்ந்தது;

மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு கடந்த 2006ம் ஆண்டில் தி.மு.க ஆட்சியில் ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. சித்தூர் நீதிமன்றமோ, தா.கி. தன்னைத்தானே வாக்கிங் செல்லும் போது தன் கழுத்தை வெட்டிக்கொண்டார் என முடிவு செய்து, மு.க.அழகிரி உள்ளிட்ட 13 பேரையும் விடுதலை செய்தது.

அழகிரி தன்னை மிரட்டியதாகவும், அழகிரியின் நடவடிக்கைகள் குறித்தும் கருணாநிதிக்கே பல கடிதங்களை எழுதியுள்ளார் தா.கி. அந்தக் கடிதங்களையெல்லாம் தன் மகனுக்காக கண்டுகொள்ளாமல் மெளனம் காத்தவர் தான் இந்த கருணாநிதி. பக்கத்து நாட்டு பிரச்சனையை, 'தமிழினத்தின் தலைவர்' என்று அழைக்கப்படும் கருணாநிதியால் தீர்க்க முடியாதென ஈழ விசயத்தில் முட்டுக்கொடுப்பதை கூட பெரும்பாலானோர் ஏற்கவில்லை. ஆனால் சொந்த கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர் கொலை செய்யப்பட்டதை கூட கண்டுகொள்ளாமல் தன் பிள்ளை, தன் குடும்பமென கை கட்டி வேடிக்கை பார்த்த கருணாநிதியை தா.கி.யின் ஆன்மா கூட மன்னிக்காது.

சொல்லி வைத்தாற்போல் சில ஆண்டுகளுக்கு முன்பாக இதே நாளில் தான், கருணாநிதியின் மகளான கனிமொழியும் 2ஜி வழக்கு தொடர்பாக திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதே போல், எந்த அதிகார பதவி ஆசைப்பட்டு தா.கி.கொலை செய்யப்பட்டாரோ, அந்த கொலைக்கு சம்பந்தப்பட்ட அனைவருமே இன்றைக்கு அரசியலிலிருந்து ஓரங்கட்டப்பட்டு அடையாளமற்று கிடக்கின்றனர் என்பது மட்டும் தான் ஓரளவுக்கு ஆறுதலான விசயம்.

தா.கி. என்ற மாபெரும் ஆளுமைமிக்க செயல்வீரர் துரோகிகளால் கொலை செய்யப்பட்ட நாள் இன்று. (20 மே 2003)

14ம் ஆண்டு நினைவேந்தல் வீர வணக்கம்

- இரா.ச. இமலாதித்தன்

07 மே 2017

செந்தமிழ் திருமகன் உமா மகேசுவரன் பிள்ளை (1883- 1941)





அகமுடையார் குலத்தோன்றல் 'தமிழவேள்' கரந்தை உமாமகேசுவரன் பிள்ளை! இவர் மட்டும் முயற்சி எடுக்காவிட்டால் சாதி வகைபாட்டியலில் முற்பட்டோர் பட்டியலில் இருந்த அகமுடையாரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைந்திருக்கவே முடியாது. இட ஒதுக்கீடே இல்லாமல் தவித்திருக்கும் சமூகமாய் அகமுடையார் இனக்குழு இன்றளவும் இருந்திருக்கும். தமிழை செம்மொழியாக்க வேண்டுமென 1919லேயே கரந்தை தமிழ் சங்கத்தின் மூலமாக தீர்மானம் நிறைவேற்றிய, தமிழ்த்தாய் வாழ்த்தை முதன்முதலாக பயன்படுத்திய பெருமைக்குரிய பெருந்தமிழருக்கு 134 வது புகழ் வணக்கம்!





சுந்தரனார் எழுதிய மணோன்மனியம் நூலிலுள்ள பாடலை, தமிழ்த்தாய் வாழ்த்தாக முதன்முதலில் அறிமுக படுத்தியவர்.

ஸ்ரீமான், ஸ்ரீமதி போன்ற அந்நிய மொழியேற்றத்தை எதிர்த்து, திருமகன், திருவாட்டி என தனித்தமிழில் திருத்தியவர்.

பத்திராதிபர், சந்தா, விலாசம், வி.பி.பி. என்பனவற்றுக்கும் பதிலாக பொழிற்றொண்டர், கையொப்பத் தொகை, உறையுள், விலை கொளும் அஞ்சல் போன்ற தனித்தமிழ் வார்த்தைகளை உருவாக்கி தந்தவர்.

1911ம் ஆண்டில் ஐந்தாம் தமிழ்ச்சங்கமாக, தஞ்சையில் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தை உருவாக்கியவர்.

பல்லாயிர கணக்கான நூல்களை விலை கொடுத்து வாங்கி, அவற்றையெல்லாம் தமிழாய்வுக்காக தனி நூலகத்தை உருவாக்கியவர்.

தமிழ்ப்பொழில் என்ற தமிழ் மொழிக்கான மாத இதழை தொடங்கி தொடர்ச்சியாக நடத்தியவர்.

பார்பனரல்லாதவர் பட்டப்படிப்பு படிக்கவே இக்கட்டான சூழல் நிரம்பிய காலக்கட்டத்தில், அகமுடையார் இனக்குழுவில் பிறந்த இவர் சட்டம் படித்து, இலவசமாக வழக்குரைஞர் பணியையும் திறன்பட சேவை செய்தவர்.

தமிழை செம்மொழியாக்க வேண்டுமென்று 1900 காலக்கட்டத்திலேயே தீர்மானம் நிறைவேற்றியவர்.

பார்பனர் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய அரசியலில், பார்பனரில்லாத கட்சியான 'நீதிக்கட்சி' தொடங்க காரணகர்த்தர்களில் ஒருவராக இருந்தவர்.

முற்பட்டோர் பட்டியலில் இருந்த அகமுடையாரை, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்து இட ஒதுக்கீடு பெற வழி செய்தவர்.

"வான வரிவைக் காணும்போ தெல்லாம் உமாமகேசுரன் புகழே என் நினைவில்வரும்" என பாரதிதாசனால் புகழப்பட்டவர்.

இப்படியான பல பெருமைகளை கொண்ட தமிழவேள் உமா மகேசுவரன் பிள்ளையவர்கள், 07.05.1883ல் அவதரித்து 09.05.1941ல் இம்மண்ணை விட்டு மறைந்தாலும், அவர் புகழ் எப்போதும் மறையாது.

புகழ் வணக்கம்!

- இரா.ச. இமலாதித்தன்

05 மே 2017

வாட்டக்குடி இரணியனுக்கு செவ்வணக்கம்!

1818ம் ஆண்டு இதே மே 05ம் தேதியன்று பொதுவுடைமை சித்தாந்தத்தின் செங்கதிர்வேலனாய், மேற்கத்திய நாடான ஜெர்மனியில் கார்ல் மார்க்ஸ் பிறந்தார். இந்த மே 05க்கு அது மட்டுமே குறிப்பிடத்தக்க விசயமாக அமையவில்லை. கூடவே, நம் மண்ணிலும் இந்த மே 05ம் தேதி வரலாற்று சிறப்புமிக்க நாளாகி போனது. ஆம், வாட்டக்குடி இரணியன் என்ற பொதுவுடைமை போராளியும், காங்கிரஸ் சர்வாதிகாரத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட நாள் இன்று.

யார் இந்த வாட்டக்குடி இரணியன்?

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், வாட்டாக்குடி கிராமத்தில் இராமலிங்கத்தேவர் - தையல் அம்மாளுக்கு, 1920 நவம்பர் 15 அன்று வெங்கடாச்சலம் என்ற இயற்பெயரோடு பிறந்த மாவீரன் தான் வாட்டாக்குடி இரணியன்.
வாட்டாகுடி இரணியன்,சாம்பவனோடை சிவராமன் ஆகிய இருவரும்  அகமுடையார் எனும் தமிழ் பெரும்குடியில் பிறந்து  தாழ்த்தப்பட்ட மற்றும் விவசாயக் கூலி மக்களுக்காகப் போராடி தங்கள் உயிரை இழந்தவர்கள்.

தனது 13 வது வயதில் உறவினர்களுடன் சிங்கப்பூர் சென்று வேலைபார்த்தார். அங்கெல்லாம் ஆங்கிலேயர்கள், சீனர்கள்,மலேசியர்களின் தோட்டங்களில் தமிழர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டது கண்டு, அவருக்கு பொதுவுடைமைச் சிந்தனையாளர்களுடன் உறவு ஏற்பட்டது. பொதுவுடைமைச் சிந்தனையாளர்கள் மலேயா கணபதி, வீரசேனன் ஆகியோருடன் இரணியனுக்கு தொடர்பு கிடைத்தது. நூல் வாசிப்புப் பழக்கம் உருவானது. பொதுவுடைமை மீதான பிடிப்பு அதிகமானது. இரகசிய அரசியல் கூட்டங்களில் பங்கேற்கும் வாய்ப்புக்கிட்டியது. சிங்கப்பூரில் பொதுவுடைமை மற்றும் பகுத்தறிவு சிந்தனையை வளர்த்துக் கொண்டதால் நாத்திக சிந்தனையாளன் “இரணியன்” பெயரை தனது பெயராக மாற்றிக்கொண்டார்.

1943ல் சிங்கப்பூர் வந்த வங்கத்துச்சிங்கம் நேதாஜியைச் சந்திக்கும் வாய்ப்புப் பெற்றார்.”இரத்தம் தாருங்கள்;விடுதலை பெற்றுத்தருகிறேன்” என்று சிங்கப்பூர் தமிழர்கள் மத்தியில் நேதாஜி வீரமுழக்கமிட்டதில் ஈர்ப்படைந்த இரணியன் நேதாஜி அமைத்த இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து பயிற்சியாளராக உயர்ந்தார்.

பின் சிங்கப்பூர் துறைமுக தொழிற்சங்கத்தின் தலைவராக செயலாற்றினார். அங்கு பணியாற்றும் போது தொழிற்சங்க பணியும் தோழர்களின் பழக்கமும் இரணியனை பொதுவுடைமைவாதியாக மாற்றுகிறது. பிறகு, மலேசியாவில் தொழிலாளர் ஒடுக்குமுறைக்கு எதிராக "இளைஞர் தற்கொலைப் படை” ஒன்றை நிறுவி, இளைஞர்களுக்கு கொரில்லா பயிற்சியும் துப்பாக்கிச்சுடும் பயிற்சியும் கொடுத்த பல போராளிகளை உருவாக்கினார். பின்னாட்களில், இங்கே ஊர் திரும்பிய பின் ஒருங்கிணைந்த தஞ்சை மண்ணான டெல்டா மாவட்டங்களில் சுதந்திரத்திற்கு பின்னாலும் வேறூருன்றிருந்த ஆண்டான் அடிமை ஆதிக்க போக்கை அன்றைக்கே எதிர்த்து கம்யூனிசத்தை வளர்த்தெடுக்க பெரும்பங்காற்றினார்.

ஆளும் வர்க்கத்தின் இடையூறுகளையெல்லாம் கடந்து
சிங்கப்பூரிலிருந்து தாயகம் வந்த இரணியன், பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டார். பிறகு இங்குள்ள உழவர்களின், தொழிலாளர்களின் அவலநிலையை கண்டு கொதித்தெழுந்து அவர்களுக்கான போராட்ட வழிமுறைகளை உருவாக்கி களப்போராளியாக வெகுண்டெழுந்தார். டெல்டா பகுதியில் ஜமீன்தாரி/பண்ணை அடிமை ஒழிப்பை கொண்டுவந்து அப்பாவி பட்டியல் சாதி மக்களை காத்ததாலும், விவசாயிகளின், தொழிலாளர்களின் உரிமைக்காகப் பாடுபட்டதன் விளைவாலும், வாட்டாக்குடி இரணியனுக்கு எதிராக சுயசாதியை சேர்ந்த பண்ணையார்களே எதிராகி போனார்கள்.

தலைமறைவாக இருந்த போது எதிர்பாராத விதமாக வடசேரி சவுக்கு தோப்பில் பட்டாமணியம் சம்பந்தமூர்த்தி என்பவரால், 05.05.1950 அன்று காட்டிக்கொடுக்கப்படுகிறார். அரச கைக்கூலிகளின் துப்பாக்கி குண்டுகள் இரணியனின் மார்பில் பாய்கிறது; "புரட்சி ஓங்குக! செங்கொடி வாழ்க!" என முழக்கமிட்டு தாய் மண்ணில் 30 வயதே நிரம்பிய மாவீரன் வாட்டக்குடி இரணியன் விழுந்தார் விதையாய்! அவரது விருட்சமாய் நாங்கள் இன்னும் அவர் விட்டுச்சென்ற வீரத்தையும், கொள்கையையும் தூக்கி பிடிக்கிறோம் இரணியனியனின் வழித்தோன்றலாய்!

வாட்டக்குடி இரணியனோடு இணைந்து செயல்பட்ட ஜாம்பனோடை சிவராமனையும் ஆளும் வர்க்கம் உயிரோடு வைக்கவில்லை. அவரும் அரசாங்க துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானார் என்பதே புரட்சி கலந்த சோக வரலாறு. ஆதிக்கசாதி என அடையாளப்பட்டும் கூட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து, தன் சொந்தசாதி பண்ணையார்களையே எதிர்த்து களம்கண்ட அகமுடையார் இனக்குழுவை சார்ந்த வாட்டக்குடி இரணியன், சாம்பவனோடை சிவராமன், மலேயா கணபதி, மணலி கந்தசாமி போன்ற பொதுவுடைமைவாதிகளை மறந்த சமூகம் தான், தன் மொழி, பண்பாடு, கலச்சாரம் பற்றியே தெரியாத வேற்று நாட்டு சே'குவேராவை தலையில் தூக்கி வைத்து, சட்டையில் படம் போட்டு கொண்டாடுகிறது! சே'வை கொண்டாடுங்கள், அதே சமயம் தன் இனத்தானையும் மறக்காதீர்கள். ஒருங்கிணைந்த தஞ்சை பகுதியின் பெருமைமிகு அகமுடையார் இனக்குழுவின் அடையாளமாக திகழும் வாட்டக்குடி இரணியன்,  சாம்பவனோடை சிவராமன், மலேயா கணபதி (இவர் தான் 'கபாலி' படத்தின் நிஜ ஹீரோ), மணலி கந்தசாமி போன்ற கம்யூனிச மாவீரர்களையும் நினைவு கூர்வோம்.

தன் சாதிக்காக போராடும் நபர்களெல்லாம் இன்றைய நாளில் இனப்போராளியாக புகழப்படும் காலத்தில், தன் சாதிக்கோ, தனக்கோ எவ்வித பிரச்சனையும் இல்லாத போதும் கூட, தன் சாதிக்காரர்களையும், உறவினர்களையும் எதிர்த்து பட்டியல் சாதி மக்களுக்காக போராடிய இம்மாவீரர்களெல்லாம் சாதியால் (அகமுடையார்) ஆதிக்கவாதிகள்; ஆனால், செயலால் பொதுவுடைமை வாதிகள்! எம்குல மாவீரர்களுக்கு செவ்வணக்கம்!

- இரா.ச. இமலாதித்தன்