20 மே 2017

தா.கி.யும் திமுகவும்!




சிவகங்கை மாவட்டத்திலுள்ள கொம்புக்கரனேந்தல் எனும் ஊரில் 10.02.1937ல் அகமுடையார் இனக்குழுவில் பிறப்பெடுத்த மேனாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் தா.கிருட்டிணன், தி.மு.க.வின் தென்மண்டல அடையாளமாக திகழ்ந்தவர். இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், அதனை தொடர்ந்து சட்டபேரவை உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றிய இவரை 'தா.கி' என்றே அழைக்கலாயினர்.

சிவகங்கையின் மாவட்டச் செயலாளராக தனது ஆதரவாளர் சிவராமனைக் கொண்டு வர அழகிரி கடும் முயற்சி செய்தார். இதற்கு தா.கி முட்டுக்கட்டையாக இருந்தார். இதுபோன்ற பல விசயங்களில் கட்சி வளர்ச்சிக்காக அழகிரியின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்திய தா.கி.யை ஒழித்துக்கட்ட வேண்டுமென அழகிரி நினைத்தார். தென் தமிழகத்தில் தா.கி.யின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாத மு.க.அழகிரியின் தூண்டுதலால் அவரது கூலிப்படையினர் வெட்டிக்கொலை செய்த நாள் இன்று; சரியாக பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பாக 20.5.2003ல் மதுரையில் தா.கி. கொலை தொடர்பாக மதுரை அண்ணாநகர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து மு.க.அழகிரி, மேனாள் துணை மேயர் மன்னன், திமுக செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார். கோபி, தி.மு.க நிர்வாகிகள் முபாரக் மந்திரி, கராத்தே சிவா உள்ளிட்ட 13 பேரைக் கைது செய்து வழக்குத் தொடர்ந்தது;

மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு கடந்த 2006ம் ஆண்டில் தி.மு.க ஆட்சியில் ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. சித்தூர் நீதிமன்றமோ, தா.கி. தன்னைத்தானே வாக்கிங் செல்லும் போது தன் கழுத்தை வெட்டிக்கொண்டார் என முடிவு செய்து, மு.க.அழகிரி உள்ளிட்ட 13 பேரையும் விடுதலை செய்தது.

அழகிரி தன்னை மிரட்டியதாகவும், அழகிரியின் நடவடிக்கைகள் குறித்தும் கருணாநிதிக்கே பல கடிதங்களை எழுதியுள்ளார் தா.கி. அந்தக் கடிதங்களையெல்லாம் தன் மகனுக்காக கண்டுகொள்ளாமல் மெளனம் காத்தவர் தான் இந்த கருணாநிதி. பக்கத்து நாட்டு பிரச்சனையை, 'தமிழினத்தின் தலைவர்' என்று அழைக்கப்படும் கருணாநிதியால் தீர்க்க முடியாதென ஈழ விசயத்தில் முட்டுக்கொடுப்பதை கூட பெரும்பாலானோர் ஏற்கவில்லை. ஆனால் சொந்த கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர் கொலை செய்யப்பட்டதை கூட கண்டுகொள்ளாமல் தன் பிள்ளை, தன் குடும்பமென கை கட்டி வேடிக்கை பார்த்த கருணாநிதியை தா.கி.யின் ஆன்மா கூட மன்னிக்காது.

சொல்லி வைத்தாற்போல் சில ஆண்டுகளுக்கு முன்பாக இதே நாளில் தான், கருணாநிதியின் மகளான கனிமொழியும் 2ஜி வழக்கு தொடர்பாக திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதே போல், எந்த அதிகார பதவி ஆசைப்பட்டு தா.கி.கொலை செய்யப்பட்டாரோ, அந்த கொலைக்கு சம்பந்தப்பட்ட அனைவருமே இன்றைக்கு அரசியலிலிருந்து ஓரங்கட்டப்பட்டு அடையாளமற்று கிடக்கின்றனர் என்பது மட்டும் தான் ஓரளவுக்கு ஆறுதலான விசயம்.

தா.கி. என்ற மாபெரும் ஆளுமைமிக்க செயல்வீரர் துரோகிகளால் கொலை செய்யப்பட்ட நாள் இன்று. (20 மே 2003)

14ம் ஆண்டு நினைவேந்தல் வீர வணக்கம்

- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக