27 மே 2017

சைவம்? அசைவம்!


எந்த கடவுளும் நேரடியாக வந்து, இதை சாப்பிடு; அதை சாப்பிடாதே என யாரிடமும் சொல்லவில்லை. தட்பவெட்ப சூழ்நிலைக்கு ஏற்ப, அந்தெந்த பகுதிகளுக்கேற்ப கிடைக்கும் அனைத்தையும் சாப்பிட்டு பரிணாம வளர்ச்சியடைந்தவன் மனிதன் தான். அதன் பிறகு பகுத்தறிந்து இதை சாப்பிடலாம்; அதை சாப்பிட வேண்டமென்று பட்டியலிட்டதும் இந்த மனிதன் தான்.

"புல்லாகி, பூடாகி, புழுவாய், மரமாகி
பல்விருகமாகி பறவையாய், பாம்பாய்
கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்
வல் அசுரராகி, முனிவராய், தேவராய் செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்'' என திருவாசகத்தில் மாணிக்கவாசகர் சொல்கிறார்.

'வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்' என சொன்ன இராமலிங்க அடிகளாரின் சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் கீரையை கூட சாப்பிடுவதில்லை; காரணம் கீரையை வேர் வரை பிடிங்கி ஓர் உயிரை சாகடித்து உண்பதால் அம்மார்க்கத்தினர் அதை உணவில் சேர்ப்பதில்லை. மாடு மட்டுமல்ல; மாடு சாப்பிடும் புல் கூட ஓர் உயிர் தான். அந்த மாட்டின் ரத்தத்தின் ஒருபகுதியான பால் கூட அசைவம் தான்.

எனவே கடவுளின் பெயரைச்சொல்லியோ, மதவாதிகளின் ஆதரவிற்காகவோ, எதையும் அதிரடியாக தடை செய்வதில் உடன்பாடில்லை. இவ்வுலகில் 'உணவுச் சங்கிலி' என்பது சரியான விகிதத்திலேயே தான் இயற்கையால் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. ஒன்றின் தேவை அதிகமானால், அந்த தேவைக்கான உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமே தவிர, அந்த தேவையையே முடக்க கூடாது. உலகளாவிய அளவில் மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஹிந்தியா இரண்டாம் இடத்தில் இருப்பதை கவனித்தாலே, தடை செய்ய வேண்டியது எதுவென புரியும். வணிக சூழ்ச்சிகளால் சூழப்பட்ட உலகமயமாக்கலில் இனப்பெருக்கம் என்பதை கூட மேற்கத்திய நாட்டவன் கொடுக்கும் ஊசியை நம்பி வாழ பழகி விட்டோம். எனவே, நாம் இப்படித்தான் கருத்தடை, பலித்தடையென தடை போட்டு நம் வீரியத்தை தொலைத்து, கண்டவனிடமும் ஜெர்சி மாடுகளை போல இனி வருங்கால சந்ததி உள்பட எல்லாவற்றையும் யாசகம் தான் பெறுவோம்.

மாட்டின் கொம்புகளுக்கு கூட வண்ணம் தீட்ட கூடாதென்று தடை போடும் காரணத்தை கூட ஏனென யாரும் கேட்டதாக தெரியவில்லை. ஒருவேளை கொம்புகளுக்கு வண்ணம் பூசினால் மாடு இறந்துவிடுமா? ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு கொம்புக்கு வண்ணமடித்தால் தானே தனி மிடுக்கே வரும்? இதெல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். இன்னைக்கு மாட்டுக்கு தடை போட்டதும் மனமகிழ்கிறோம். ஒருவேளை ஜெயலலிதாவின் அறிவிப்பு போல, நாளை நம் குலசாமி கோவில்களில் பலியிடும் ஆட்டையும், சேவலையும் தடை போடும் சூழல் வரும் போது தான், அதன் தேவை புரியும். மாட்டுக்கறிக்காக எதையும் இங்கு சொல்லவில்லை; மாட்டுக்கறியெல்லாம் சாப்பிடும் பழக்கமும் எனக்கில்லை.

- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக