05 மே 2017

வாட்டக்குடி இரணியனுக்கு செவ்வணக்கம்!

1818ம் ஆண்டு இதே மே 05ம் தேதியன்று பொதுவுடைமை சித்தாந்தத்தின் செங்கதிர்வேலனாய், மேற்கத்திய நாடான ஜெர்மனியில் கார்ல் மார்க்ஸ் பிறந்தார். இந்த மே 05க்கு அது மட்டுமே குறிப்பிடத்தக்க விசயமாக அமையவில்லை. கூடவே, நம் மண்ணிலும் இந்த மே 05ம் தேதி வரலாற்று சிறப்புமிக்க நாளாகி போனது. ஆம், வாட்டக்குடி இரணியன் என்ற பொதுவுடைமை போராளியும், காங்கிரஸ் சர்வாதிகாரத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட நாள் இன்று.

யார் இந்த வாட்டக்குடி இரணியன்?

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், வாட்டாக்குடி கிராமத்தில் இராமலிங்கத்தேவர் - தையல் அம்மாளுக்கு, 1920 நவம்பர் 15 அன்று வெங்கடாச்சலம் என்ற இயற்பெயரோடு பிறந்த மாவீரன் தான் வாட்டாக்குடி இரணியன்.
வாட்டாகுடி இரணியன்,சாம்பவனோடை சிவராமன் ஆகிய இருவரும்  அகமுடையார் எனும் தமிழ் பெரும்குடியில் பிறந்து  தாழ்த்தப்பட்ட மற்றும் விவசாயக் கூலி மக்களுக்காகப் போராடி தங்கள் உயிரை இழந்தவர்கள்.

தனது 13 வது வயதில் உறவினர்களுடன் சிங்கப்பூர் சென்று வேலைபார்த்தார். அங்கெல்லாம் ஆங்கிலேயர்கள், சீனர்கள்,மலேசியர்களின் தோட்டங்களில் தமிழர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டது கண்டு, அவருக்கு பொதுவுடைமைச் சிந்தனையாளர்களுடன் உறவு ஏற்பட்டது. பொதுவுடைமைச் சிந்தனையாளர்கள் மலேயா கணபதி, வீரசேனன் ஆகியோருடன் இரணியனுக்கு தொடர்பு கிடைத்தது. நூல் வாசிப்புப் பழக்கம் உருவானது. பொதுவுடைமை மீதான பிடிப்பு அதிகமானது. இரகசிய அரசியல் கூட்டங்களில் பங்கேற்கும் வாய்ப்புக்கிட்டியது. சிங்கப்பூரில் பொதுவுடைமை மற்றும் பகுத்தறிவு சிந்தனையை வளர்த்துக் கொண்டதால் நாத்திக சிந்தனையாளன் “இரணியன்” பெயரை தனது பெயராக மாற்றிக்கொண்டார்.

1943ல் சிங்கப்பூர் வந்த வங்கத்துச்சிங்கம் நேதாஜியைச் சந்திக்கும் வாய்ப்புப் பெற்றார்.”இரத்தம் தாருங்கள்;விடுதலை பெற்றுத்தருகிறேன்” என்று சிங்கப்பூர் தமிழர்கள் மத்தியில் நேதாஜி வீரமுழக்கமிட்டதில் ஈர்ப்படைந்த இரணியன் நேதாஜி அமைத்த இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து பயிற்சியாளராக உயர்ந்தார்.

பின் சிங்கப்பூர் துறைமுக தொழிற்சங்கத்தின் தலைவராக செயலாற்றினார். அங்கு பணியாற்றும் போது தொழிற்சங்க பணியும் தோழர்களின் பழக்கமும் இரணியனை பொதுவுடைமைவாதியாக மாற்றுகிறது. பிறகு, மலேசியாவில் தொழிலாளர் ஒடுக்குமுறைக்கு எதிராக "இளைஞர் தற்கொலைப் படை” ஒன்றை நிறுவி, இளைஞர்களுக்கு கொரில்லா பயிற்சியும் துப்பாக்கிச்சுடும் பயிற்சியும் கொடுத்த பல போராளிகளை உருவாக்கினார். பின்னாட்களில், இங்கே ஊர் திரும்பிய பின் ஒருங்கிணைந்த தஞ்சை மண்ணான டெல்டா மாவட்டங்களில் சுதந்திரத்திற்கு பின்னாலும் வேறூருன்றிருந்த ஆண்டான் அடிமை ஆதிக்க போக்கை அன்றைக்கே எதிர்த்து கம்யூனிசத்தை வளர்த்தெடுக்க பெரும்பங்காற்றினார்.

ஆளும் வர்க்கத்தின் இடையூறுகளையெல்லாம் கடந்து
சிங்கப்பூரிலிருந்து தாயகம் வந்த இரணியன், பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டார். பிறகு இங்குள்ள உழவர்களின், தொழிலாளர்களின் அவலநிலையை கண்டு கொதித்தெழுந்து அவர்களுக்கான போராட்ட வழிமுறைகளை உருவாக்கி களப்போராளியாக வெகுண்டெழுந்தார். டெல்டா பகுதியில் ஜமீன்தாரி/பண்ணை அடிமை ஒழிப்பை கொண்டுவந்து அப்பாவி பட்டியல் சாதி மக்களை காத்ததாலும், விவசாயிகளின், தொழிலாளர்களின் உரிமைக்காகப் பாடுபட்டதன் விளைவாலும், வாட்டாக்குடி இரணியனுக்கு எதிராக சுயசாதியை சேர்ந்த பண்ணையார்களே எதிராகி போனார்கள்.

தலைமறைவாக இருந்த போது எதிர்பாராத விதமாக வடசேரி சவுக்கு தோப்பில் பட்டாமணியம் சம்பந்தமூர்த்தி என்பவரால், 05.05.1950 அன்று காட்டிக்கொடுக்கப்படுகிறார். அரச கைக்கூலிகளின் துப்பாக்கி குண்டுகள் இரணியனின் மார்பில் பாய்கிறது; "புரட்சி ஓங்குக! செங்கொடி வாழ்க!" என முழக்கமிட்டு தாய் மண்ணில் 30 வயதே நிரம்பிய மாவீரன் வாட்டக்குடி இரணியன் விழுந்தார் விதையாய்! அவரது விருட்சமாய் நாங்கள் இன்னும் அவர் விட்டுச்சென்ற வீரத்தையும், கொள்கையையும் தூக்கி பிடிக்கிறோம் இரணியனியனின் வழித்தோன்றலாய்!

வாட்டக்குடி இரணியனோடு இணைந்து செயல்பட்ட ஜாம்பனோடை சிவராமனையும் ஆளும் வர்க்கம் உயிரோடு வைக்கவில்லை. அவரும் அரசாங்க துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானார் என்பதே புரட்சி கலந்த சோக வரலாறு. ஆதிக்கசாதி என அடையாளப்பட்டும் கூட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து, தன் சொந்தசாதி பண்ணையார்களையே எதிர்த்து களம்கண்ட அகமுடையார் இனக்குழுவை சார்ந்த வாட்டக்குடி இரணியன், சாம்பவனோடை சிவராமன், மலேயா கணபதி, மணலி கந்தசாமி போன்ற பொதுவுடைமைவாதிகளை மறந்த சமூகம் தான், தன் மொழி, பண்பாடு, கலச்சாரம் பற்றியே தெரியாத வேற்று நாட்டு சே'குவேராவை தலையில் தூக்கி வைத்து, சட்டையில் படம் போட்டு கொண்டாடுகிறது! சே'வை கொண்டாடுங்கள், அதே சமயம் தன் இனத்தானையும் மறக்காதீர்கள். ஒருங்கிணைந்த தஞ்சை பகுதியின் பெருமைமிகு அகமுடையார் இனக்குழுவின் அடையாளமாக திகழும் வாட்டக்குடி இரணியன்,  சாம்பவனோடை சிவராமன், மலேயா கணபதி (இவர் தான் 'கபாலி' படத்தின் நிஜ ஹீரோ), மணலி கந்தசாமி போன்ற கம்யூனிச மாவீரர்களையும் நினைவு கூர்வோம்.

தன் சாதிக்காக போராடும் நபர்களெல்லாம் இன்றைய நாளில் இனப்போராளியாக புகழப்படும் காலத்தில், தன் சாதிக்கோ, தனக்கோ எவ்வித பிரச்சனையும் இல்லாத போதும் கூட, தன் சாதிக்காரர்களையும், உறவினர்களையும் எதிர்த்து பட்டியல் சாதி மக்களுக்காக போராடிய இம்மாவீரர்களெல்லாம் சாதியால் (அகமுடையார்) ஆதிக்கவாதிகள்; ஆனால், செயலால் பொதுவுடைமை வாதிகள்! எம்குல மாவீரர்களுக்கு செவ்வணக்கம்!

- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக