22 ஏப்ரல் 2017

வைகையாற்று அரசியல்!


வைகை அணையில் நீர் ஆவியாகமால் இருப்பதற்காக தெர்மகோல்களை 10 லட்சம் ரூபாய்க்கு செலவழித்ததாக சொல்லிருக்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ. ”அடுத்தவன் ஆட்டோவின் கண்ணாடியை திருப்பினால், என்னோட ஆட்டோ எப்படி ஓடும்?” என்ற கருணாஸின் காமெடிதான் நினைவுக்கு வருகிறது. அந்த காமெடியன் கருணாஸ் கூட கூவத்தூரிலும் சரி, அடுத்து தன் சொந்த அமைப்பை சேர்ந்த அனைத்து நிர்வாகிகளையும் பூண்டோடு நீக்கியதிலும் சரி, இடைவிடாமல் சினிமாவை போலவே அரசியலிலும் காமெடிதான் செய்து கொண்டிருக்கிறார். இப்படிப்பட்டவர்களை தான் எம்.எல்.ஏ.க்களாக உருவாக்கிருக்கிறார் என்பது, ஜெயலலிதாவின் நிர்வாக திறனுக்கும், ஆளுமைக்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

10 லட்சம் ரூபாய்க்கு தெர்மகோல் வாங்கியதாக சொல்லிவிட்டு, பத்து பதினைந்து தெர்மகோல்களை ஆற்றில் மிதக்கவிட்டு ஒட்டுமொத்த வைகை நதியின் நீர் ஆவியாவதை தடுத்துவிட்டதாக பேட்டிக்கொடுத்த சில நிமிடங்களேயே அவையெல்லாம் காற்றில் பறந்து கரையை கடந்துவிட்டன. இந்தமாதிரியான யோசனைகளை எந்த மங்குனிகள் சொல்கிறர்களென தெரியவில்லை. அவ்வளவு விலையுர்ந்ததா இந்த தெர்மகோல்கள் என்றும் புரியவில்லை. இல்லாத ஊருக்கு சாலை போட்டதாக கணக்கில் காட்டிய அரசியல் வாதிகளும், மாயவரத்திலிருந்து மயிலாடுதுறை வரைக்கும் சாலை போட்டதாக, இருக்கின்ற ஓர் ஊருக்கு இருபெயர்களை வைத்தே போலி கணக்கு காட்டும் கோமாளிகளும், இருபது குடும்பமேயுள்ள ஒரு கிராமத்திற்கு ஐந்தாறு மயானக்கூடங்களை கட்டி அரசாங்க பணத்தில் தின்று கொழுப்படுத்தவர்கள் நிறைந்த மக்களாட்சி நாடு இது.

வெப்பம் அதிகமாவது எதனால்? அதை தடுக்க என்ன வழியென்று யோசிக்காமல், இப்படி சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்றுவிடுமா? மரங்களை அதிகமாக வளர்க்க புதிய திட்டங்களை உருவாக்கி, விழிப்புணர்வை பொதுமக்களிடையே விதைக்கலாம். கோலா/பெப்சி போன்ற அந்நிய குளிர்பான தொழிற்சாலைகளுக்கு வைகை ஆற்றில் ஆழ்துளையிட்டு நீர் எடுப்பதை தடுக்க சட்டமியற்றலாம். டெல்டா  உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்த காவிரித்தாயின் ஆற்று வழித்தடங்களிலெல்லாம் நூற்றுகணக்கான லாரிகளை கொண்டு மணல்களை சுரண்டும் மாஃபியாக்களை கைது செய்யலாம். ஆற்றின் இருமருங்கிலும் சோலார் சிஸ்டம் அமைத்து, இந்த கடுமையான வெப்பத்தை சூரிய ஆற்றலாகவும், அதை மின் சக்தியாகவும் சேமிக்கலாம். இதுமாதிரி எத்தனையோ உருப்படியான விசயங்கள் செய்ய வேண்டிய நேரத்தில், இப்படி முட்டாள்தனமாக செயல்படுவதை விட, ஓர் ஆணியையும் பிடுங்காமல் இருக்கலாம். ஏனெனில் நீங்க புடுங்கிறது எல்லாமே தேவையில்லாதது தான்!

- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக