20 ஏப்ரல் 2017

மாமன்னர் சின்னமருதுபாண்டியருக்கு 264வது புகழ்வணக்கம்!



சிவகங்கையை கி.பி.1780 முதல் கி.பி.1801 வரை ஆண்ட மருதிருவரில் ஒருவரான மாமன்னர் சின்ன மருது அவர்கள் பிறப்பெடுத்த நாள் இன்று. பூமாரங் என்ற வளரி வீச்சை பற்றி இன்று உலகெங்கும் பேசப்பட்டாலும், அதை வெள்ளைக்காரனுக்கு கற்றுக்கொடுத்து ஆவணப்படுத்திய பெருமைக்கு காரணமாக இருந்திருக்கிறார் சின்ன மருது. உருவத்தில் கருத்த நிறத்திலும், உள்ளத்தில் வெள்ளையாகவும் திகழ்ந்த சின்னமருதுவின் சிவந்த இரத்தம் தான் சிவகங்கை மண்ணின் வீரத்தின் அடையாளமாக இன்றளவும் திகழ்கிறது.

உலகிலேயே முதன் முறையாக ஐரோப்பியர்களுக்கு எதிராக திருச்சி மலைக்கோட்டையிலும், திருவரங்கத்திலும் கி.பி.1801 ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி 'ஜம்புத்தீவு பிரகடனம்' வெளியிட்ட பெருமைக்குரியவர் சின்ன மருது. தன் குடிவழி முழுக்க அழித்தொழிக்கும் எண்ணத்தில் செயற்பட்ட ஐரோப்பிய இழிபிறவிகள் கூட்டத்தை சேர்ந்த வெல்ஷ் என்ற வெள்ளையன் கூட சின்னமருதுவின் மகன் துரைசாமியை இயலொணா நிலையில் கண்டதை பற்றியும், சின்னமருதுவின் வீரத்தை பற்றியும் கண்ணீர் ததும்ப பதிவு செய்திருக்கிறார்.

கரடி கருத்தான் போன்ற துரோகிகளின் கூட்டத்தினரால் காட்டிக்கொடுக்கப்பட்டும் கூட, தாங்கள் கட்டிய காளையார்கோவில் கோபுரம் தகர்க்கப்படக் கூடாதென்பதற்காக தன்னுயிரை கொடுக்க முன்வந்தார் சின்னமருது. தங்கள் மன்னன் மட்டுமா இறப்பது? அவர்களோடு நாங்களும் செத்து மடிகிறோமென சூளுரைத்து 500க்கும் மேற்பட்ட பல்வேறு இனக்குழுக்களை சேர்ந்தவர்களும் 1801ம் ஆண்டு அக்டோபர் 24ல் உயிர்கொடை தந்தனர் என்பது வரலாற்றில் மறக்க முடியாத சுவடுகளாகி போனது. அப்படிப்பட்ட தியாகத்திற்கும், வீரத்திற்கும், ஆளுமைக்கும் பெயர்போன சின்னமருதுவை இந்நாள் மட்டுமின்றி எந்நாளும் நெஞ்சில் வைத்து போற்றுவோம்!

எம் முப்பாட்டான் மாமன்னர் சின்னமருதுபாண்டியருக்கு 264ம் ஆண்டு புகழ் வணக்கம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக