போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29 மார்ச் 2017

முதுகெலும்பில்லாத ஹிந்தியா!



இம்மண் சார்ந்த பிரச்சனைகளுக்காக யார் போராடினாலும் ஆரம்பத்திலேயே அந்த போரட்டத்தை பல்வேறு வடிவங்களில் நீர்த்து போக செய்வதில் இந்த ஹிந்திய ஆட்சியாளர்கள் ரொம்பவே திறமைச்சாலிகள். இவர்களின் முதல் ஆயுதம், தேசத்துரோகி. இந்த ஒற்றை வார்த்தையை வைத்து, போராளிகளுக்கு எதிராக தேசத்துரோக வழக்காக பதிய வைத்து கைது செய்து சிறையிலும் அடைப்பார்கள். எது தேசத்துரோகம்? பன்னாட்டு கார்ப்ரேட் கம்பெனிகளுக்காக இம்மண்ணின் வளத்தையே சூறையாடி வாரி கொடுப்பது தானே தேசத்துரோகம். அந்த இழிசெயலை எதிர்க்கும், மண்ணின் மைந்தர்கள் எப்படி தேசத்துரோகி ஆக முடியும்?

மதத்தை வைத்து தீவிரவாதி, கட்சியை வைத்து நக்சலைட், மொழியை வைத்து பொறுக்கி, இனத்தை வைத்து ஈழவியாபாரிகள், என இப்படியாக பல அடைமொழிகளை கொடுத்து விட்டு இவர்கள் மட்டும் உத்தமனாகி விடுகிறார்கள். இங்குள்ள அனைவருக்குமே ஏதோவொரு வகையில் ஒரு பின்புலம் இருக்கத்தான் செய்கிறது. அதை தேடிப்பிடித்து அவர்களை தனிநபர் தாக்குதல் நடத்தி உளவியல் ரீதியாக ஒடுக்கும் யுக்தியை இந்த ஹிந்திய ஆட்சியாளர்கள் முறையாக கையாளுகின்றனர். அப்படித்தான், ஹிந்திய கூட்டாட்சி ஒன்றியத்தின் தலைநகரான டெல்லியில் நடக்கும் விவசாயிகளின் போரட்டத்தையும் கொச்சை படுத்துகிறார்கள். முசிறியை சேர்ந்த ஐயாக்கண்ணு அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட டெல்லி விவசாய போரட்டத்தை மழுங்கடிக்க, அவரது சொத்து மதிப்பு, அவரது மனைவி, மகன் உள்ளிட்ட அந்தரங்க விசயங்களை அவதூறாக பரப்பி சுகம் காண்கிறார்கள். விவசாயி என்பவனுக்கு தொப்பை இருக்கவே கூடாதா? அவனுக்கு சொந்தமாக ஏக்கர் கணக்கில் நிலம் இருக்க கூடாதா? என்ன மாதிரியான மனநிலையில் சில ஹிந்துத்துவ வாதிகள் இருக்கிறார்களென தெரியவில்லை.

ஒருவேளை, பச்சை துண்டிற்கு பதிலாக காவித்துண்டை தலையில் கட்டி விவசாயிகள் போராடிருந்தால் ஹிந்திய ஆட்சியாளர்கள் கடைக்கண் பார்வை எப்போதே பட்டிருக்கலாம். இப்போதும் பெரிய விசயமில்லை; அவர்கள் மொழியில் சொல்வதென்றால், விவசாயிகளில் பெரும்பாலானோர் 'சோ கால்டு' ஹிந்து தான் என்பதையாவது ஆட்சியாளர்களுக்கு உணர வைத்தாலே போதும், போரட்டத்திற்கான பலன் சீக்கிரமாகவே கிடைக்கும். 'மான்கி பாத்' போன்ற மக்களோடு உரையாடும் ஒவ்வொரு முறையும் புதிய ஹிந்தியா பிறந்து விட்டதாக நரேந்திர மோடி மார் தட்டுகிறார். அப்படியொரு ஹிந்தியா பிறப்பது உண்மைதான். அதில் சிக்கல் என்னவென்றால், விவசாயத்துடன் கூடிய கிராமம் என்ற முதுகெலும்பு இல்லாமலேயே குறை பிரசவமாக புதிய ஹிந்தியா பிறந்து விடுகிறது.


திருக்குறளிலுள்ள 133 அதிகாரங்களில் "உழவு" என்ற அதிகாரமும் உண்டு. அதிலுள்ள முதல் ஐந்து குறள்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. (1031)


பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது.

உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா
தெழுவாரை எல்லாம் பொறுத்து. (1032)

பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும்.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர். (1033)

உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது.

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர். (1034)

பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள்.

இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர். (1035)

தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார், தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார்.

------

விவசாயியென்றால் பிச்சைக்காரன் போல இருக்க வேண்டுமென்ற பொது புத்தியை செருப்பாலேயே அடிக்க வேண்டும். எம் சோழ தேசத்தின் பெரும்பான்மையானோர் விவசாய குடும்பத்தினர் தான். அதில் சிறு/குறு/நடு/பெரு என பலதரப்பட்ட விவசாயிகள் இருக்கின்றனர். ஆளுக்கு தகுந்தாற்போல் நிலங்களின் எண்ணிக்கையுடன் கூடிய அளவும் மாறுபடும். விவசாய கூலியும் இருக்கிறார்கள்; மற்றவர் நிலத்தையோ, கோவில் நிலத்தையோ குத்தகைக்கு சாகுபடி செய்பவர்களும் இருக்கிறார்கள்; ஏக்கர் கணக்கிலும், வேலி கணக்கிலும் நிலங்களை வைத்து விவசாயம் செய்பவர்களும் இருக்கிறார்கள்.

எங்கள் குடும்பமும், எங்களது உறவினர்களது குடும்பங்களும் முழுக்க விவசாய பின்னணியிலுள்ள குடும்பங்கள் தான். ஒருகாலத்தில் டிராக்டர் என்பது பத்து கிராமங்களுக்கு ஒன்று இருக்கும்; மாட்டு வண்டிகளெல்லாம் காலாவதி ஆனபின்னால், இப்போதைய நிலவரப்படி, ஒரு கிராமத்திற்கு குறைந்தது நான்கைந்து டிராக்டர்களாவது இருக்கின்றது. பண்ணை போன்ற பெரு விவசாயிகளிடம், முன்பெல்லாம் ஒரு டிராக்டரும், ஒரு அம்பாசிட்டர் காரும் இருக்கும்; இப்போது டிராக்டரோடு, கதிரடிக்கும் மெசினும் இருக்கிறது. ஆடிகார் இல்லாவிட்டாலும் கூட நவீனரக காரும் அவர்களிடம் இருக்கிறது. காவிரியும், வானமும் கை கொடுத்திருந்தால், அனைவருக்கும் முப்போகம் சாகுபடி விளைந்திருக்கும். அப்போது ஆடி காரெல்லாம் ஒரு விசயமாகவே இருந்திருக்காது. விவசாயிகள் என்பவர்கள் பிச்சைக்காரர்கள் அல்ல; அனைவருக்கும் உணவளிக்கும் முதலாளிகள்; கடவுளின் தூதுவர்கள். அவர்களை போற்ற கூட வேண்டாம்; குறைந்த பட்சம் அவதூறு பரப்பி தூற்றாமலாவது இருங்கள்!

விவசாயி மகனாக,
இரா.ச. இமலாதித்தன்

16 ஏப்ரல் 2016

யாருக்காக இந்த அரசு?

கடந்த ஒரு வார காலமாக தொடர்ச்சியாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு அரசாங்க பணிகளை புறக்கணித்து வரும், மிகப்பெரிய பொறுப்புகளிலுள்ள பதவியில் இருக்கும் அரசு பணியாளர்களை பற்றி எந்த ஊடகமும் வாயே திறக்கவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்து அரசு பணிகளும் முற்றிலுமாக முடங்கி கிடக்கிறது. ஆனாலும் அதை பற்றியெல்லாம் 'என் தலைமையிலான ஆட்சி' என்று நொடிக்கொரு முறை தம்பட்டம் அடித்து கொள்ளும் ஜெயலலிதாவுக்கும் கவலையில்லை.

அந்த அரசு அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளையாவது நிறைவேற்றி தரலாம். இல்லையென்றால் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேசி இந்த வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட சொல்லலாம். எதுவுமே செய்யாமல் இருப்பதற்கு, ஒரு அரசு தேவையா?!
மக்களுக்காகவே அரசு. மக்களுக்கு சேவை செய்யவே, அரசாங்க அலுவலர்களுக்கு சம்பளம். மக்களின் தேவையறிந்து மக்களுக்கு பணியாற்றவே, அரசியல்வாதிகளுக்கு அரசாங்க பதவிகளை மக்கள் வழங்கியுள்ளனர். "மக்களுக்காகவே நான், எனக்கென்று யாருமில்லை" என்ற சொன்னதெல்லாம், வெறும் வார்த்தைகளாகவே இருக்கிறது என்பதை இனியாவது ஜெயலலிதா புரிந்து கொள்ளட்டும்.

- இரா.ச.இமலாதித்தன்

20 செப்டம்பர் 2015

நரிக்குடியில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் பதாகை அவமதிப்பு

நரிக்குடியில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் பதாகை அவமதிப்பு செய்யப்பட்டதற்காக, சென்னை, திருவண்ணாமலை-ஆரணி, திருப்பத்தூர், சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, கோவை, மதுரை விளாங்குடி, இராமநாதபுரம், சிவகாசி, விருதுநகரென தமிழகமெங்கும் கண்டன போஸ்டர்களும், தன்னெழுச்சியாக நடைப்பெற்ற களப்போரட்டங்களும், அமைப்பு வேறுபாடின்றி பல்வேறு வகையில் எதிர்ப்புகளை பதிவு செய்து களத்தில் நின்ற அகமுடையார் அரண், வீரகுல அமரன் இயக்கம், அகில இந்திய அகமுடையார் மஹா சபை, தமிழக தலைமை அகமுடையார் சங்கம், அகமுடையார் மக்கள் மகாசபை, அனைத்து மாமன்னர் மருதுபாண்டியர் சங்கங்கள் என அனைத்து அகமுடையார் இயக்கங்களுக்கும், புதிய நீதிக்கட்சிக்கும், முகநூலில் உடனுக்குடன் கள நிலவரங்களை பகிர்ந்து மிகப்பெரிய போராட்ட களத்தை ஏற்படுத்திய அனைத்து உறவுகளுக்கும் எம் சிரம் தாழ்ந்த நன்றி!

13 மே 2014

இணைய போராளிகளுக்கிடையில் ஈழம்!

ஈழத்தமிழர்களுக்காக ஃபேஸ்புக் போன்ற சமூக இணையங்களில் புரட்சிகரமாகவும், உணர்ச்சிகரமாகவும் எழுதும் பலர், ஈழம் சார்ந்த எந்தவொரு போராட்டக்களங்களிலும் நேரடியாக கலந்து கொள்ளதவர்களாகவே இருக்கின்றனர் என்பதுதான் எதார்த்தம். இவர்களின் உணர்வு சற்றும் குறைவானதில்லை என்றாலும் கூட, அந்த உணர்வை மற்றவர்களுக்கு திணிப்பதில் மட்டுமே கவனம் செலுத்திவிட்டு, இவர்கள் லாவகமாக ஓய்வெடுத்து கொள்கின்றனர்.

வெறும் எழுத்துகளால் மட்டுமே ஒரு இனத்தின் லட்சியம் வெற்றி பெறுவதில்லை; அதன் நீட்சியாக அனைவரும் களத்திற்க்கு வரும்போதுதான் அந்த போராட்டம் முழுமையடைந்து, வெற்றிக்கான வழிகளும் விரிவடைகின்றது.

தாங்கள் அறிவுஜீவிகள் என்ற அளவீடோடு இணையத்தில் மட்டுமே பக்கம் பக்கமாய் எழுதி செல்வது, சிலரது அன்றைய நாளின் உணர்வை மட்டுமே தட்டியெழுப்புமே தவிர வேறெதையும் செய்துவிடாது. அடுத்த நாள் அனைவரது கவனமும் அடுத்த வேறொரு பதிவை நோக்கி நகரும். போராட்டக்களத்தின் வடிவம் எதுவாகினும் அது தொடர்ச்சியாக செல்லக்கூடிய மாதிரியான நீண்டகால வடிவமைப்பை பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் அந்த போராட்டம் முழுமையாகவும், விரைவாகவும் வெற்றிப்பெறும் என்பதே எதார்த்தம். எனவே, எழுத்துகளால் மட்டுமே புரட்சி செய்யாமல், கொஞ்சம் களத்திற்கும் வர முயற்சி செய்யுங்கள். இங்கே சொல்லப்பட்ட அனைத்து விமர்சனத்திற்க்கும் யாரும் அப்பாற்பட்டவர் கிடையாது நான் உள்பட.

தமிழர்களின் தாகம்! தமிழீழ தாயகம்!

- இரா.ச.இமலாதித்தன்

08 மே 2014

உச்சநீதிமன்றமும் தமிழனும்

ஜல்லிக்கட்டு, மீனவர் பிரச்சனை, நதிநீர் பங்கீடு உள்ளிட்ட தமிழர் நலம் சார்ந்த எந்தவொரு பிரச்சனையிலும் உச்சநீதிமன்றத்திடமிருந்து நீதியை எதிர்பார்க்க முடியாது என்பதற்கு இன்றைய நாளும் ஓர் உதாரணம்!

கூடன்குளம் அணு உலைக்கு எதிரான மனுவும் தள்ளுபடி!
ஊருக்கொரு அமைப்பு வைத்து இனத்தை காக்க வந்தவர்களாக அவதாரமெடுத்துள்ள தலைவர்கள் அனைவரும், ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து என்ன செய்வார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்; மிஞ்சிப்போனால் கண்டன போஸ்டர்களோடு இவர்களது போராட்டம் நின்றுவிடுமென்று நினைக்கின்றேன். பார்க்கலாம்...

-இரா.ச.இமலாதித்தன்