அரசு வேலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசு வேலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

08 நவம்பர் 2018

தமிழ்நாட்டில் அரசுப்பணியாளர் தேர்வின் அத்துமீறல்!



தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்வுகளில் இனி ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கப்போவதாக அறிவிப்பு செய்திருக்கின்றனர். தமிழரல்லாதவர்களை தமிழ்நாட்டில் அரசுப்பணியாளர்களாக திணிக்கவே இம்முயற்சி அரங்கேறிக் கொண்டிருக்கிறது. தமிழில் கேள்வித்தாளை அமைப்பதற்கான நபர்கள் இல்லையென்று காரணம் சொல்லிருக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பாகவே வெளி மாநிலத்தவரும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளை எழுதி தமிழ்நாட்டு அரசின் ஊழியர்களாக வரலாமென திருத்தம் செய்தனர்.

இப்போது குரூப் 2 தேர்வுகள் போன்றவற்றிலும் தமிழ் மொழி வழியிலான கேள்விகள் இல்லையென்றால், வேற்று மொழியை தாய்மொழியாக கொண்டவர்களும், ஆங்கில வழிக்கல்வி பயின்றவர்களும், மேல்தட்டு வர்க்கத்தினரும் எளிதாக தமிழக அரசாங்க பணியாளர்களாக அமர்த்தப்படுவார்கள். PSTM என்ற தமிழ்மொழி வழியிலான பள்ளிப்படிப்பை படித்தவர்களுக்கு தனி ஒதுக்கீடும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இங்கிருக்கிறது. அதை இல்லாதொழிக்கவும், தாய்மொழி, மாநில மொழிகளின் அடிப்படையிலான இடப்பகிர்வை பறித்து கொள்ளவுமே இம்மாதிரியான அட்டூழியங்கள் செய்யப்படுகின்றன.


பொருளாதார அடிப்படையில் இடைநிலை/கீழ்நிலை குடும்பத்தில் பிறந்து, முதல் பட்டதாரியாக உருவெடுத்து, சமூகத்தில் புறக்கணிக்கப்படும் எத்தனையோ லட்சம் பேருக்கான கடைசி நம்பிக்கை இந்த டி.என்.பி.எஸ்.சி. போன்ற தேர்வுகள் தான். இந்த தேர்வுகளுக்காக, தனியார் வேலைகளை துறந்து, வாடகைக்கு தனியறை எடுத்தும், கோவில்களில் தங்கியும், கூட்டாக படித்து மாத கணக்கில் அல்லும் பகலும் தங்களை தகுதிப்படுத்தி வருகின்றனர். அந்த எளியோரின் கனவெல்லாம் அரசு வேலை மட்டுமே. அதற்கு பின்னால் தான், அவர்களது வாழ்க்கையே தொடங்கவிருக்கிறது. அந்த கனவில் மண்ணையள்ளி போடும் கயவர்களை கண்டிக்க இளையோர் ஒன்று கூட வேண்டும்.

இட ஒதுக்கீடு / அரசு ஊக்கதொகை / கல்லூரி சேர்க்கை உள்பட, எல்லா வகைகளிலும் புறக்கணிக்கப்பட்டு கொண்டிருக்கும் அகமுடையார் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்டவர்களுக்கென இருக்கும் ஒரே ஆயுதம், அரசு வேலை தான். குறிப்பாக பெரும்பான்மையானோரில் தமிழ்வழி கல்வி பயில்வோரின் எண்ணிக்கையே அதிகம்; அதிலும் இப்படியான குளறுபடி. அனைவரும் தங்களது பக்கத்தில், இச்செயலை எதிர்த்து பதிவு செய்து கண்டியுங்கள்.

- இரா.ச. இமலாதித்தன்

#TNPSC#TNPSCExam

29 ஏப்ரல் 2015

அரசு வேலை அவ்வளவு எளிதா?

கடந்த ஒரு சில நாட்களாக தமிழக கல்வித்துறைக்கு சம்பந்தப்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பதவிக்காக மாவட்டம் தோறும் 10வது படிச்சிருக்க பெரும்பாலானோர் முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். குறிப்பிடப்பட்ட கல்லூரிகளுக்கு சென்று விண்ணப்பம் வாங்கி, சான்றிதழையெல்லாம் காட்டிவிட்டு ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர். முதலில் ஸ்கிரின் டெஸ்ட் அடுத்து நேர்காணல். எழுத்து தேர்வில் 5:1 என்ற விகிதச்சாரத்தில் ஆட்களை எடுக்க போவதாக அறிவிப்பு வந்துள்ளது. ஆனால், நிலைமை என்னவென்றால் இதெல்லாம் வெறும் கண் துடைப்பு தான் என்பதும் இங்குள்ள பெரும்பாலானோருக்கும் தெரிந்திருக்கிறது. இது தேர்தல் நெருங்கும் வேளையில் ஆளுங்கட்சிக்கான வசூல் வேட்டைக்கான ஒரு யுக்தி என்பது பலருக்கும் தெரிந்து பின்பும், ஓர் அற்ப மகிழ்ச்சிக்காகவும், குருட்டு அதிர்ஷ்டத்தை நம்பியும் சென்னையில் பணிபுரிவர்களெல்லாம் விடுப்பு எடுத்துக்கொண்டு அப்ளை செய்து வருகின்றனர்.

ஒரு பதவிக்கு இத்தனை ரூபாய் பணம் என்பதை முன் கூட்டியே நிர்ணயித்து, அதை ஒன்றியம், நகரம், ஊராட்சி, மாவட்டமென பல நிலைகளில் ஆட்களை நியமித்து வசூலித்து பதவியை கொடுப்பது தான் அரசாங்கமென்றால், அது மக்களுக்கு எதற்கு? ஏழை ஏழையாக இருப்பதை பற்றி அவன் கவலை கொள்வதில்லை. பணக்காரன் இன்னும் பணக்காரனாக இருப்பதற்காக கவலை படாமல் பல வழிகளில் தன் ஆளுமையை பயன்படுத்தி கொள்கிறான். ஆனால் நடுத்துர வர்க்கமோ நாளுக்கு நாள், அந்த பக்கமும் போக முடியாமல், இந்த பக்கமும் போக முடியாமல் நசுக்கப்பட்டு வருகின்றது.

மாவட்ட அளவில் பெரிய அரசாங்க பதவியில் இருக்கும் நபரே, தன் மகனுக்காக 6 லட்சத்தை, (மாவட்டம் வாரியாக நியமிக்கப்பட்டுள்ள அந்த நபரான) யாரிடம் கொடுக்க வேண்டுமோ அவரிடம் கொடுத்து வைத்து காத்திருக்கிறார். எனக்கே இவ்வளவு சிரமம் இருக்கு. நீங்கயெல்லாம் எதுக்கு தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்குறீங்க?ன்னு கேட்கிறார். இது அனைவருக்கும் தெரிந்தும் கூட தட்டிகேட்க வக்கில்லாமல், வேடிக்கை பார்ப்பது தான் பல சாமானியர்களுக்கு சாலச்சிறந்தது. இப்படி லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து அரசு வேலையில் சேரும் ஒருவன், எப்படி சேவை மனப்பான்மையில் அரசுக்கு உண்மையாக பணியாற்றுவான்? கொடுத்த பணத்தை எவ்வகையில் சம்பாரிக்கலாமென்று தானே சிந்திப்பான். இது தான் இன்றைய அரசியலின் வளர்ச்சி. இந்த வளர்ச்சி தான் ஆண்ட - ஆளும் - ஆளப்போகின்ற அரசுக்கு பக்க துணை.

- இரா.ச.இமலாதித்தன்