29 ஏப்ரல் 2015

அரசு வேலை அவ்வளவு எளிதா?

கடந்த ஒரு சில நாட்களாக தமிழக கல்வித்துறைக்கு சம்பந்தப்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பதவிக்காக மாவட்டம் தோறும் 10வது படிச்சிருக்க பெரும்பாலானோர் முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். குறிப்பிடப்பட்ட கல்லூரிகளுக்கு சென்று விண்ணப்பம் வாங்கி, சான்றிதழையெல்லாம் காட்டிவிட்டு ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர். முதலில் ஸ்கிரின் டெஸ்ட் அடுத்து நேர்காணல். எழுத்து தேர்வில் 5:1 என்ற விகிதச்சாரத்தில் ஆட்களை எடுக்க போவதாக அறிவிப்பு வந்துள்ளது. ஆனால், நிலைமை என்னவென்றால் இதெல்லாம் வெறும் கண் துடைப்பு தான் என்பதும் இங்குள்ள பெரும்பாலானோருக்கும் தெரிந்திருக்கிறது. இது தேர்தல் நெருங்கும் வேளையில் ஆளுங்கட்சிக்கான வசூல் வேட்டைக்கான ஒரு யுக்தி என்பது பலருக்கும் தெரிந்து பின்பும், ஓர் அற்ப மகிழ்ச்சிக்காகவும், குருட்டு அதிர்ஷ்டத்தை நம்பியும் சென்னையில் பணிபுரிவர்களெல்லாம் விடுப்பு எடுத்துக்கொண்டு அப்ளை செய்து வருகின்றனர்.

ஒரு பதவிக்கு இத்தனை ரூபாய் பணம் என்பதை முன் கூட்டியே நிர்ணயித்து, அதை ஒன்றியம், நகரம், ஊராட்சி, மாவட்டமென பல நிலைகளில் ஆட்களை நியமித்து வசூலித்து பதவியை கொடுப்பது தான் அரசாங்கமென்றால், அது மக்களுக்கு எதற்கு? ஏழை ஏழையாக இருப்பதை பற்றி அவன் கவலை கொள்வதில்லை. பணக்காரன் இன்னும் பணக்காரனாக இருப்பதற்காக கவலை படாமல் பல வழிகளில் தன் ஆளுமையை பயன்படுத்தி கொள்கிறான். ஆனால் நடுத்துர வர்க்கமோ நாளுக்கு நாள், அந்த பக்கமும் போக முடியாமல், இந்த பக்கமும் போக முடியாமல் நசுக்கப்பட்டு வருகின்றது.

மாவட்ட அளவில் பெரிய அரசாங்க பதவியில் இருக்கும் நபரே, தன் மகனுக்காக 6 லட்சத்தை, (மாவட்டம் வாரியாக நியமிக்கப்பட்டுள்ள அந்த நபரான) யாரிடம் கொடுக்க வேண்டுமோ அவரிடம் கொடுத்து வைத்து காத்திருக்கிறார். எனக்கே இவ்வளவு சிரமம் இருக்கு. நீங்கயெல்லாம் எதுக்கு தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்குறீங்க?ன்னு கேட்கிறார். இது அனைவருக்கும் தெரிந்தும் கூட தட்டிகேட்க வக்கில்லாமல், வேடிக்கை பார்ப்பது தான் பல சாமானியர்களுக்கு சாலச்சிறந்தது. இப்படி லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து அரசு வேலையில் சேரும் ஒருவன், எப்படி சேவை மனப்பான்மையில் அரசுக்கு உண்மையாக பணியாற்றுவான்? கொடுத்த பணத்தை எவ்வகையில் சம்பாரிக்கலாமென்று தானே சிந்திப்பான். இது தான் இன்றைய அரசியலின் வளர்ச்சி. இந்த வளர்ச்சி தான் ஆண்ட - ஆளும் - ஆளப்போகின்ற அரசுக்கு பக்க துணை.

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக