பங்குனி உத்திர திருநாள்!

பங்குனி மாத உத்திரம் நட்சத்திரத்துடன் கூடிய இந்நாளில் தான், சிவபெருமான் - பார்வதி, ரங்கமன்னார் - ஆண்டாள், ராமன் - சீதை போன்றோர்களின் திருமணமும் நடந்தது என்பது ஐதீகம். அதிலும் குறிப்பாக சூரபதமனை சம்ஹாரம் செய்த பிறகு, இந்த பங்குனி உத்திரத்தில் தான் முருகப்பெருமான், தெய்வானையை மணம்கொள்கிறார். மேலும் இன்றைய நாளில் தான் ஐயப்பன் பிறப்பதாகவும், மன்மதனை உயிர்ப்பிக்கும் நாளாகவும், மர்காண்டேயனுக்காக காலனை எட்டி உதைத்த நாளாகவும், மேலும் இடும்பனால் காவடி தூக்கும் பழக்கமும் இன்றைய பங்குனி உத்திரத்தில் தான் தொடங்கியது என்பதும் ஐதீகம். இதுபோல இன்னும் பங்குனி உத்திர நாளுக்கு பல சிறப்புகள் இருந்தாலும், உண்மையில் சிவ-சக்தியின் ஐக்கியத்தை உணர்வதற்கான உன்னத நாளாகவே இந்நாள் விளங்கிறது என்பதே அடிப்படை. இங்கே ஆண் - பெண் இணைதல் என்பது வெறும் காமமாக காட்சிப்படுத்தப்பட்டாலும், அண்டத்திலுள்ள எல்லாமும் இந்த இரு தத்துவார்த்த ரீதியிலே பிரிந்து கிடக்கின்றது என்பதே நிதர்சனம். எனவே, அந்த இரு தன்மைகளும் ஒன்றாக இணையும் நாளாகவே இந்நாளை நாம் எடுத்து கொள்ளலாம். அந்த இரு துருவங்களின் இணைப்பின் உருவகமாகவே லிங்கத்தையும் நாம் பார்க்க வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, அறம் பொருள் இன்பத்தை குறளில் சொன்ன வள்ளுவரும் காமத்து பாலோடு நின்றுவிடவில்லை. அதற்கடுத்த, வீடுபேற்றை நாமே அனுபவித்து கொள்ளவே மறைபொருளாக நிறுத்திவிட்டார். அதை நாம் தான் உணர்தல் வேண்டும்.

நம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் பங்குனி உத்திர திருநாள் நல் வாழ்த்துகள்!

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment