குற்றப்பரம்பரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குற்றப்பரம்பரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18 ஜூன் 2014

இலங்கையில் இசுலாமியர் மீதான தாக்குதலும், பசும்பொன் தேவரும்!



குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து களத்தில் குதித்த வாலிபர்கள் மீது பெருங்காநல்லூரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், மொத்தம் பதினான்கு பேர் தங்கள் உயிர்களைத் தந்தார்கள். இப்படிப்பட்ட காலகட்டத்திற்கு பிறகு, சிவகாசியில், தேவர் திருமகனாருக்கும், காவல்துறை உயர் அதிகாரிக்கும் வாதம் நடக்கிறது.

‘ரேகைச் சட்டத்தை எதிர்த்து நீங்கள் ஏன் போராடுகிறீர்கள்? உங்களுக்கு என்ன பிரச்சனை?’ என்கிறான். பசும்பொன் தேவர் அவர்கள் சொல்கிறார்கள்:‘பக்கத்து வீடு பற்றி எரிந்தால் பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா?’ பக்கத்து வீடு பற்றி எரியும்போது அணைக்காவிட்டால், அடுத்து தன்னுடைய வீடும் தானாக எரியும். இன்றைக்கு இந்த ரேகைச் சட்டம் அப்பாவிகள் மீது பாய்கிறது. நாளைக்கு என் மீதும் பாயாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்று கேட்கிறார்.

இந்த வாதம் நடக்கிறபோது, பெரிய காவல்துறை அதிகாரி வருகிறார். ‘எங்கள் ஏகாதிபத்தியம் உலகத்தில் பல நாடுகளில் பரவி இருக்கிறது. மிக சக்தி வாய்ந்தது. உங்களுக்குத் தெரியுமா?’ என ஆங்கிலத்தில் கேட்கிறான். பசும்பொன் தேவரும் ஆங்கிலத்தில் பதில் சொல்கிறார். ‘தெரிவேன் நன்றாகத் தெரிவேன், மேலும் தெரிவேன். இதைவிட எத்தனையோ ஏகாதிபத்தியங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து, புல் முளைத்த சரித்திரமும் நான் அறிவேன்’ என்கிறார்.

எங்கள் பேரரசுக்குக் கடல் போன்ற இராணுவ பலம் இருக்கிறது தெரியுமா? என்கிறான் வெள்ளைக்காரன். உடனே சொல்கிறார் பசும்பொன் தேவர்: ‘கடல் போன்ற படை இருக்கிறதா? மானத்தைப் பெரிதாகக் கருதுகிறவனுக்கு, சாவு பொருட்டு அல்ல. சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டம் என்பதை நீ தெரிந்து கொள்’ என்றார்.

இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், 2009 காலக்கட்டத்தின் போது, லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்ட போது, தங்களை தமிழர்களாக மனதில் கொள்ளாமல், இலங்கை வாழ் இசுலாமியர்கள் அனைவரும் தங்களை மதவாதிகளாகவே கணக்கில் கொண்டு, பெளத்த-சிங்கள இனவெறியர்களுக்கு ஆதரவாக நின்று, மகிந்த ராஜபக்சேவை பாராட்டி ஊர்வலம் போனார்கள். ஆனால் இன்றைய நிலைமையில் தமிழர்களை அழித்த அதே பெளத்த-சிங்கள இனவெறியர்கள் தமிழ் இசுலாமியர்கள் மீதும் அடக்குமுறையை ஏவியுள்ளனர். அன்றைக்கு, தமிழன் வீடு பற்றி எரியும்போது கைக்கட்டி வேடிக்கை பார்த்ததன் விளைவு, இன்று தன் வீடும் பற்றி எரிகிறது. எதிலும் ஒரு தொலைநோக்கு பார்வை வேண்டும் என்பதை அன்றைக்கே பசும்பொன் தேவர் ஒரு முன்னுதாரணமாக இருந்து சென்றுவிட்டார். இனியாவது தமிழ் இசுலாமியர்கள் இந்த எதார்த்தத்தை புரிந்து கொள்வார்களா?

- இரா.ச.இமலாதித்தன்

06 ஏப்ரல் 2013

குற்றப்பரம்பரைச் சட்டம்





பெருங்காமநல்லூர் 

இந்திய வரலாற்றில், குறிப்பாகத் தமிழக வரலாற்றில் மன்னர்கள் இடம் பெறுவர், மக்கள் இடம் பெறுவதில்லை என்று வரலாற்று அறிஞர்கள் கூறுவதுண்டு. ஆயினும், மன்னர்கள் அறம் பிறழ்ந்தபோதும் அநீதி இழைத்தபோதும், சாதாரண மக்கள் நீதியை நிலை நாட்டும் நெஞ்சுரம் கொண்டிருந்தனர். சாதாரண மக்கள் நீதிக்காகப் போராடிய வரலாற்றுக் குறிப்புகள் ஆங்காங்கே இலக்கியங்களில் புதைந்து கிடைப்பதையும் மறுக்க இயலாது. அத்தகைய மக்கள் வரலாற்றில் ஒரு பதிவுதான் ""தென்னக ஜாலியன் வாலாபாக்'' எனப் போற்றப்படும் வீரம் விளைந்த ""பெருங்காமநல்லுர்'' கிராமத்தில் நடைபெற்ற தீரச் செயல் ஆகும்.

ஜாலியன் வாலாபாக்:
ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் 21.03.1919-ல் "ரௌலட் சட்டம்' என்ற ஒரு கொடிய சட்டம் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டது. எது குற்றம் - என்பதை இச்சட்டம் வரையறுக்கவில்லை. ஆனால், "சந்தேகத்தின் பேரில் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். சுருக்கமான வழக்கு விசாரணை இரகசியமாக நடைபெறும். சாட்சி விசாரணை கிடையாது. மேல் முறையீடு செய்ய வழிவகை இல்லை' என்று அதிகாரங்கள் தரப்பட்டிருந்தன.

பத்திரிகைகளின் குரலை ஒடுக்கி, மக்களின் விடுதலை வேட்கையை அடக்கி ஒடுக்கிட இச்சட்டம் அமல்படுத்தப்பட்டது.
இந்திய மக்கள் அனைவரும் இச்சட்டத்தை எதிர்த்தனர். இச்சட்டத்தை எதிர்த்து ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்த மகாத்மா காந்தி, 10.04.1919-இல் கைது செய்யப்பட்டார். 13.04.1919 அன்று பஞ்சாப் மாகாணத்தின் அமிர்தசரஸில் ஒரு கண்டனக் கூட்டம் நடைபெற்றது.

பெரிய மதில் அடைப்புச் சுவர்களும், சிறிய நுழைவாயிலும் கொண்ட ஜாலியன் வாலாபாக் திடலில், மக்கள் பல்லாயிரக்கணக்கில் கூடி இருந்தனர். எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், மக்கள் கலைந்து செல்வதற்கு எச்சரிக்கையும் கொடுக்காமல், குண்டு மழை பொழிந்து நூற்றுக்கணக்கான அப்பாவிகளைக் கொன்றும் - ஆயிரக்கணக்கானவர்களைப் படுகாயப்படுத்தியும், கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டான் ஜெனரல் டயர்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை இந்திய வரலாற்றில் கறுப்பு அத்தியாயமாகும்.

குற்றப்பரம்பரைச் சட்டம்:

ரௌலட் சட்டத்தைவிடக் கொடுமையானது "குற்றப்பரம்பரைச் சட்டம்'. வடஇந்தியாவில் கள்ள நாணயம் தயாரிப்பவர்களைக் கட்டுப்படுத்த, 1860-களில் இச்சட்டம் இயற்றப்பட்டது. சில பழங்குடியினரை உள்ளடக்கி 1871-இல் இச்சட்டம் மாற்றி அமைக்கப்பட்டது.

பின்னர் ஆங்கில அரசுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை அச்சுறுத்தித் தண்டிக்கும் வகையில் 1911-இல் இச்சட்டம் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. 1913-இல் சென்னை இராஜதானியில் இச்சட்டம் அமலுக்கு வந்தது. இச்சட்டப்படி,

01) மாவட்ட ஆட்சித்தலைவர் எந்த ஒரு சாதியையும் "குற்றப்பரம்பரை' என அறிவிக்கலாம். அதை நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது.

02) குற்றவாளி - நிரபராதி என்ற பாகுபாடு கிடையாது. ஒரு சாதியில் பிறந்த அனைவரும் "பிறவிக் குற்றவாளிகள்' என்றது அச்சட்டம்.

03) அச்சாதியில் பிறந்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தங்கள் பெயர், முகவரி மற்றும் கைரேகையைக் காவல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும்.

04) இரவில் ஆண்கள் யாரும் தங்கள் வீட்டில் தூங்கக்கூடாது. காவலர் கண்காணிப்பில் பொது மந்தை அல்லது காவல் நிலையத்தில்தான் தூங்க வேண்டும். வயதானவர், புதிதாகத் திருமணமானவர்கட்கும் விதி விலக்கு கிடையாது.

05) பக்கத்து ஊருக்குச் செல்வதாக இருந்தாலும் கடவுச்சீட்டு பெறவேண்டும். இந்த விதிகளை மீறினால் 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும்.

06) கட்டுப்பாட்டு எல்லைக்கு வெளியே வந்தால், தலையாரி கூட அவரைக் கைது செய்யலாம்.

07) சந்தேகப்படும்படி ஒருவர் நடந்துகொண்டால்கூட 3 ஆண்டு சிறைத்தண்டனை உண்டு. இந்த சட்டத்தின் கீழ், ஒரு தீப்பெட்டியும், கத்தரிக்கோலும் கையில் இருந்தது என்பதற்காக ஒருவர் மீது குற்றவழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இப்படி ஏராளமான அடக்குமுறைப்பிரிவுகள் அச்சட்டத்தில் இருந்தன.

மக்களின் எதிர்ப்பலை:

"குற்றப்பரம்பரைச் சட்டம்', அப்பாவி மக்களிடம் எதிர்ப்பலையைக் கிளப்பியது. 25.11.1915 அன்று மதுரை மாவட்ட பிறமலைக் கள்ளர் வாழ்ந்த பகுதியில் உறப்பனுரைச் சேர்ந்த சிவனாண்டித்தேவன், பிரபல வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசப் மூலம் சென்னை மாகாண ஆளுனருக்கு ஒரு ஆட்சேபனை மனுவினை அனுப்பி வைத்தார். அம்மனுவில் கீழ்க்கண்ட விவரங்களைக் குறிப்பிட்டிருந்தார்.

01) 1860-ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமே தவிர, ஒட்டு மொத்த சமுதாயத்தையும் குற்றவாளிகள் என விளம்புவது சமூக நீதிக்கு எதிரானது.

02) விவசாயமே எங்கள் வாழ்வாதாரம்.

03) சட்டத்தை மதித்து முறையாக நிலவரி செலுத்திக் கண்ணியமாக வாழ்ந்து வருகிறோம்.

04) மதுரை திருமலை நாயக்கர், கள்ளர் சமுதாயத்தின் எட்டு நாட்டுக்குத் தலைமை ஏற்கும் ஆட்சிப் பொறுப்பை எம்மிடம் ஒப்படைத்ததற்கான தாமிரப் பட்டையங்கள் உள்ளன.

எனவே, நீதிக்குப் புறம்பான இச்சட்டத்தை நிறுத்தி வையுங்கள் என அந்த மனுவில் கேட்டிருந்தார். அவரது நியாயமான கோரிக்கை, மனிதாபிமானமற்ற முறையில் அரசால் நிராகரிக்கப்பட்டது.

பெருங்காமநல்லுர் துப்பாக்கிச் சூடு:
மதுரை மாவட்டம் பிறமலைக் கள்ளர் நாட்டில், அதிகாரிகள் இச்சட்டத்தை அமல்படுத்தி வருகையில், இறுதிமுகமாக பெருங்காமநல்லுர் கிராமத்திற்கு வந்தனர். மக்கள் இச்சட்டத்திற்கு அடிபணிய மறுத்தனர். ""சத்தியத்திற்கும், தர்மத்திற்கும் உகந்த சட்டங்கட்கு நாங்கள் கட்டுப்படுவோம். சமூக நீதிக்கு எதிரான சட்டத்திற்குக் கட்டுப்பட முடியாது'' எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

எந்த வகையில் - என்ன செய்தாகிலும் சரி, சட்டத்தை அங்கே அமல்படுத்தியே ஆக வேண்டும் என அன்றைய மதுரை மாவட்ட ஆட்சியர் ஆணையிட்டார்.

02.04.1920 இரவில் ஆயுதப்படை மற்றும் குதிரைப்படைகளுடன் பெருங்காமநல்லுர் செல்வதற்காக அதிகாரிகள் சிந்துப்பட்டி காவல் நிலையத்தில் முகாம் இட்டனர். தகவல் அறிந்த பெருங்காமநல்லுர் மக்கள் ஒன்று கூடி விவாதித்தனர். "ஆயுதத்தைக் கொண்டு நம்மை அடிபணிய வைக்க ஆங்கில அரசு நினைக்கிறது. நிரபராதிகளைக் குற்றவாளிகளாகச் சித்தரித்து காவல் நிலையத்தில் கைரேகை பதியச் சொல்வது நமக்குப் பெரிய அவமானம். உயிரினும் மானம் பெரிது. அடுத்த நாள் அதிகாரிகள் வந்து நெருக்கடி கொடுத்தால், படாங்கு வேட்டுப் போட்டுப் பக்கத்து ஊர் மக்களையும் வரவழைத்துப் போராட வேண்டும்' என முடிவு செய்தனர்.
 03.04.1920 அன்று அதிகாலை குதிரைப்படை மற்றும் ஆயுதப்படையுடன் அதிகாரிகள் பெருங்காமநல்லுர் கிராமத்தை முற்றுகையிட்டனர். முக்கிய அதிகாரிகள், மந்தையில் இருந்து கொண்டு ஊர்ப் பெரியவர்கள் சிலரை அங்கே வரவழைத்தனர்.

சட்டத்தை மறுப்பது குற்றம் என அதிகாரிகள், பெரியவர்களிடம் எடுத்துரைத்தனர்.

 ""நாங்கள் செய்த குற்றம் என்ன? அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டோமா, கொலை கொள்ளையில் ஈடுபட்டோமா, சாதி - சமயச் சண்டையில் ஈடுபட்டோமா? எதற்காக இங்கே இவ்வளவு குதிரைப்படை, ஆயுதப்படையோடு வந்து எங்களைப் பயமுறுத்துகிறீர்கள்? குற்றவாளி, அப்பாவி என்ற பேதமில்லாமல் ஒட்டுமொத்த கள்ளர் சமுதாயத்தையும் குற்றவாளி என சட்டம் போட்டது குற்றம் இல்லையா? அச்சட்டத்தைக் கூறி எங்களைப் பயமுறுத்தி கொடுமைப்படுத்துவது எந்த வகையில் நியாயம்? நாங்கள் கைரேகை பதிக்க மறுப்பது எங்களைப் பொறுத்தவரை தன்மானப் பிரச்னையாகும். அதை குற்றம் என்று நீங்கள் சொல்வது சரியா?'' எனக் கேட்டனர். வாக்குவாதம் மணிக்கணக்கில் தொடர்ந்தது. விவாதம் முடிவின்றி இழுபறியாக நீடித்தது.

 ஆயுதப்படையினர் தாக்குதலுக்கு தயாராவதுபோல அணி வகுத்தனர். மக்கள் படாங்கு வேட்டை வெடித்தனர். பக்கத்து ஊர் மக்கள் வேட்டு சத்தம் கேட்டதும் படை திரண்டு வந்தனர். இந்த மக்களை அடி பணிய வைப்பது எளிதான செயல் அல்ல என்பதை அதிகாரிகள் புரிந்துகெண்டனர்.

"சட்ட அமலாக்கத்தில் தோல்வி அடைந்துவிட்டோம்' என்ற எண்ணம் அதிகாரிகள் நெஞ்சில் உறுத்தியது. பின்வாங்குவதுபோல் பாவனை செய்து, அதிகாரிகள் ஊருக்குக் கீழ்புறம் அரை பர்லாங் தூரம் சென்றனர். பெரும் திரளான மக்களிடமிருந்து முனைப்புடன் நின்றவர்களைப் பிரித்து இழுக்கவே அவர்கள் இந்த உத்தியைக் கையாண்டனர்.

முன்னணி வீரர்கள் ஆயுதப்படையின் அருகில் சென்றதும், தங்கள் தோல்வியை மறைத்து மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுக்கும் சுயநல உள்நோக்கத்துடன் துப்பாக்கியைத் தூக்கினர். மாயக்காள் என்ற பெண் உட்பட 16 பேர்களின் உடலை துப்பாக்கிக் குண்டுகள் துளைத்தன. வீர மரணம் அடைந்த 16 பேர்களின் உடலை ஒரு கட்டை வண்டியில் ஏற்றி உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள ஆற்றங்கரையில் ஒரே குழியில் புதைத்தனர்.

துப்பாக்கி சூட்டில் நிலைகுலைந்து சிதறி ஓடிய மக்களில் சுமார் 200 நிரபராதிகளை அதிகாரிகள் பிடித்து ஒரு கை, ஒரு காலுடன் இணைக்கும் நெடிய சங்கிலியால் விலங்கிட்டு நடைப்பயணமாக சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமங்கலத்திற்கு ஆடு, மாடுகளைப் போல் நடத்திச்சென்று நீதிமன்றத்தில் "ரிமாண்ட்' செய்தனர். வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசப், "ரிமாண்டு' செய்யப்பட்ட ஏழைகளுக்கு இலவசமாக வாதாடி வழக்கிலிருந்து விடுதலை பெற்றுத்தந்தார்.

கள்ளர் சீரமைப்பு:

பெருங்காமநல்லுர் அப்பாவி மக்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூடு நிகழ்ச்சி இங்கிலாந்து பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. எழுத்தறிவற்ற ஏழை, அப்பாவி விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஏற்க இயலாது என்றும், அப்பகுதி மக்களின் கல்வி, சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கி நிவாரணம் தேடுங்கள் என்றும் பாராளுமன்றம் அறிவுறுத்தியதின் பேரில், கள்ளர் சமுதாய சீரமைப்புக்கென தனியே ஒரு துறையை உருவாக்கி நலத்திட்டங்கள் நிறைவேறத் தொடங்கின. அதிகார வர்க்கம் செய்த தவறுக்கு பிரிட்டிஷ் பாராளுமன்றமும், பிரிட்டிஷ் அரசும் தேடிய பிராயச் சித்தமாக இதனைக் கொள்ளலாம்.

ஒப்பிடலாம்:

ஆங்கில அதிகார வர்க்கம் நடத்திய கொலைக்களம் என்ற வகையில் ஜாலியன் வாலாபாக்கையும், பெருங்காமநல்லுரையும் ஒப்பிடலாம். ஜாலியன் வாலாபாக்கில் பலியானவர்கள் அங்கு நடந்த கண்டனக் கூட்டத்தைப் பார்க்க வந்த அப்பாவிகள் மற்றும் அருகில் இருந்த கோவில் வழிபாட்டில் கலந்துகொள்ள வந்தவர்கள்.

பெருங்காமநல்லுரில் பலியானவர்கள் தன்மானம் காத்த மாவீரர்கள். ஒரு கொள்கைக்காக நேருக்கு நேர் இறுதிவரை உறுதியாகப் போராடி வீர மரணத்தைத் தழுவியவர்கள். இம்மாவீரர்கட்கு பெருங்காமநல்லுரில் நடுகல் நட்டு ஆண்டு தோறும் வீர வணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு போராட்டங்களுக்குப் பின், "குற்றப் பரம்பரைச் சட்டம்' இறுதியாக 5.6.1947-இல் ரத்தானது.

வீரர்களாக இருங்கள் என்று முழங்கினார் சுவாமி விவேகாநந்தர். அநீதி எந்தத் திசையில் இருந்து வந்தாலும் அதை எதிர்க்கும் துணிவும், திறனும், இன்றைய இளைஞர்களிடம் வேர் ஊன்றினால், அதுவே பெருங்காமநல்லுர் வீரத் தியாகிகட்கு நாம் செலுத்தும் உண்மையான வீர வணக்கமாக அமையும்.

கட்டுரையாளர்:  என்.எஸ். பொன்னையா, வழக்குரைஞர், தினமணி, 2013.