18 ஜூன் 2014

இலங்கையில் இசுலாமியர் மீதான தாக்குதலும், பசும்பொன் தேவரும்!



குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து களத்தில் குதித்த வாலிபர்கள் மீது பெருங்காநல்லூரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், மொத்தம் பதினான்கு பேர் தங்கள் உயிர்களைத் தந்தார்கள். இப்படிப்பட்ட காலகட்டத்திற்கு பிறகு, சிவகாசியில், தேவர் திருமகனாருக்கும், காவல்துறை உயர் அதிகாரிக்கும் வாதம் நடக்கிறது.

‘ரேகைச் சட்டத்தை எதிர்த்து நீங்கள் ஏன் போராடுகிறீர்கள்? உங்களுக்கு என்ன பிரச்சனை?’ என்கிறான். பசும்பொன் தேவர் அவர்கள் சொல்கிறார்கள்:‘பக்கத்து வீடு பற்றி எரிந்தால் பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா?’ பக்கத்து வீடு பற்றி எரியும்போது அணைக்காவிட்டால், அடுத்து தன்னுடைய வீடும் தானாக எரியும். இன்றைக்கு இந்த ரேகைச் சட்டம் அப்பாவிகள் மீது பாய்கிறது. நாளைக்கு என் மீதும் பாயாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்று கேட்கிறார்.

இந்த வாதம் நடக்கிறபோது, பெரிய காவல்துறை அதிகாரி வருகிறார். ‘எங்கள் ஏகாதிபத்தியம் உலகத்தில் பல நாடுகளில் பரவி இருக்கிறது. மிக சக்தி வாய்ந்தது. உங்களுக்குத் தெரியுமா?’ என ஆங்கிலத்தில் கேட்கிறான். பசும்பொன் தேவரும் ஆங்கிலத்தில் பதில் சொல்கிறார். ‘தெரிவேன் நன்றாகத் தெரிவேன், மேலும் தெரிவேன். இதைவிட எத்தனையோ ஏகாதிபத்தியங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து, புல் முளைத்த சரித்திரமும் நான் அறிவேன்’ என்கிறார்.

எங்கள் பேரரசுக்குக் கடல் போன்ற இராணுவ பலம் இருக்கிறது தெரியுமா? என்கிறான் வெள்ளைக்காரன். உடனே சொல்கிறார் பசும்பொன் தேவர்: ‘கடல் போன்ற படை இருக்கிறதா? மானத்தைப் பெரிதாகக் கருதுகிறவனுக்கு, சாவு பொருட்டு அல்ல. சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டம் என்பதை நீ தெரிந்து கொள்’ என்றார்.

இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், 2009 காலக்கட்டத்தின் போது, லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்ட போது, தங்களை தமிழர்களாக மனதில் கொள்ளாமல், இலங்கை வாழ் இசுலாமியர்கள் அனைவரும் தங்களை மதவாதிகளாகவே கணக்கில் கொண்டு, பெளத்த-சிங்கள இனவெறியர்களுக்கு ஆதரவாக நின்று, மகிந்த ராஜபக்சேவை பாராட்டி ஊர்வலம் போனார்கள். ஆனால் இன்றைய நிலைமையில் தமிழர்களை அழித்த அதே பெளத்த-சிங்கள இனவெறியர்கள் தமிழ் இசுலாமியர்கள் மீதும் அடக்குமுறையை ஏவியுள்ளனர். அன்றைக்கு, தமிழன் வீடு பற்றி எரியும்போது கைக்கட்டி வேடிக்கை பார்த்ததன் விளைவு, இன்று தன் வீடும் பற்றி எரிகிறது. எதிலும் ஒரு தொலைநோக்கு பார்வை வேண்டும் என்பதை அன்றைக்கே பசும்பொன் தேவர் ஒரு முன்னுதாரணமாக இருந்து சென்றுவிட்டார். இனியாவது தமிழ் இசுலாமியர்கள் இந்த எதார்த்தத்தை புரிந்து கொள்வார்களா?

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக