26 ஜூன் 2014

அரசு மருத்துவமனையில் ஒரு நாள்!

நேற்று முழுவதும் நாகப்பட்டினம் அரசு பொது மருத்துவமனையில் தான் என் பொழுது கழிந்தது. என் மச்சானுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதால், மருத்துவமனையிலேயே அண்ணன் தம்பி மாமன் மச்சான்களோடு அஞ்சு ஆறு பேரா சுத்திக்கிட்டு இருந்தோம். ஒரு பெண் தீக்குளிப்பு, ஒரு இளைஞன் பைக் விபத்து, ஒரு நடுத்தரவயதுள்ளவரின் வெட்டுக்குத்து கேஸ் என மூன்று சம்பங்களை மருத்துவமனை வளாகத்துக்குள் பார்க்க முடிந்தது.

அந்த பெண்ணின் தீக்குளிப்புக்கான காரணம் தெரியவில்லை. சொந்த பந்தமெல்லாம் சேர்ந்து பொம்பளய்ங்களோட அழுகுரலை கேட்கமே மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு.

பைக் விபத்தில் இறந்தவரின் வயது 30க்குள் தான் இருக்கும். பொலிரோ ஜீப் மோதி ஸ்பாட் அவுட். அண்ணன் தம்பி நண்பர்கள் அப்பா அம்மான்னு எல்லாரும் இறந்த இளைஞனை பற்றி சொல்லி அழும் போது மனசே உடைஞ்சிருச்சு. நண்பர்கள் யார் யாருக்கோ போன் போட்டு "என் தம்பி என்னைய விட்டு போய்ட்டான். என் தம்பி செத்துட்டான்"னு சொல்லி சொல்லி அழும் அண்ணனின் குரலை கேட்டும் ஒவ்வொருத்தனுக்கும் கண்ணில் கண்ணீர் வந்தே தீரும்.

மூனாவது வந்த வெட்டுகுத்து கேஸ்ல, கடப்பாறையால முகத்துல குத்தி இருக்காய்ங்க. அந்த நடுத்தர வயதுள்ளவர் கொஞ்சம் குடிபோதையில் இருந்ததால் படுகாயம் அடைந்திருந்தார். கையில் அரிவாள் வெட்டு, நெத்தியில் கடப்பாறை குத்துயென மிக மோசமான நிலையில் அட்மிட் செய்யப்பட்டார்.

தீக்குளிப்பை தவிர மற்ற இரண்டு சம்பவமும் மது போதையில் வந்தது தான். சாலையோரமெல்லாம் டார்கெட் வைத்து டாஸ்மாக்கை திறக்கும் இந்த அரசாங்கம் பாவத்தை மட்டுமே சம்பாரித்து கொண்டிருக்கின்றது. தமிழன் தினம் தினம் குடிபோதையில் மரணித்து கொண்டிருக்கின்றான்.

ஒரு மணிநேரம் கழித்து என் மச்சான்கள் மூவரும் வா மார்சரி போய் அந்த ரெண்டு பாடியையும் பார்த்துட்டு வருவோம்ன்னு கட்டாயபடுத்தி என்னை பிணவறைக்கு அழைச்சிட்டு போனாய்ங்க. தீக்குளித்த பெண்ணை கண்ணாடி பாக்ஸ்ல வைத்திருந்தனர். ஆக்ஸிடண்ட் ஆனவரை அப்படியே தரையில் போட்டு வைத்திருந்தனர். பிணவறை பூட்டப்பட்டு இருந்தது. ஜன்னலோரம் உறவினர்கள் எல்லாம் அவனது உடலை பார்த்து தேம்பி தேம்பி அழுதவாறு நின்று கொண்டிருந்தனர். அந்த இளைஞனை பெத்த தகப்பன், ஒரு கையில் அந்த இளைஞனின் நண்பனனையும், இன்னொரு கையில் மூத்த மகனையும் இறுக பிடித்து மெதுவாக அந்த பிணவறையை விட்டு தூர அழைத்து வந்தார். அதுவரை அவர் அழவில்லை. மற்ற இருவரும் தான் விடாமல் அழுது கொண்டிருந்தனர். பிணவறையை விட்டு கொஞ்ச தூரம் போனதும் மூனு பேருமே ஒப்பாரி வைத்து அழுததை பார்க்கும் போது என் மனசு வலிக்கிற மாதிரி இருந்துச்சு. இறப்பின் வலியும், இழப்பின் வலியும் என்னால் கொஞ்சம் புரிந்து கொள்ள முடிந்தது.

அநாதை போல அவனது உடல் அந்த பிணவறையில் ஜன்னலோரம் கிடந்த காட்சியை பார்த்து விட்டு. "மனுசனோட வாழ்க்கை இவ்வளவு தான்!" என்று, முரட்டுத்தனமான என் மச்சான்களே என்கிட்ட சொன்னாய்ங்க. நாலு பேருமே கணத்த இதயத்துடன் வெளியேறினோம் பிணவறையை விட்டு!

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக