இறைவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இறைவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12 ஜூன் 2016

ஆன்மீகம் எதுவென உணருங்கள்!

நம் எண்ணங்களுக்கு அபூர்வமான ரகசிய சக்தி உண்டு. நாம் எதை நோக்கி அதிகம் கவனம் செலுத்துகிறோமோ, அது நம்மருகே எந்த முயற்சியுமே இல்லாமல் கவர்ந்திழுக்கப்படும். எதை அதிகமாக சிந்திக்கிறாமோ அது தொடர்பான அனைத்தும் நமக்கு வசமாகும். அதற்கு முதன்மையான அடிப்படை தகுதி, நம்பிக்கை மட்டுமே. ஒரு விசயம் கிடைக்குமென நம்பி, அதை கேட்டால், அதை நாம் நிச்சயம் பெற முடியும். இங்கே அதை யாரிடம் கேட்பது என்பதில் குழப்பம் வந்தால், ஒரு கருங்கல்லிடம் கூட கேட்கலாம். ஆனால் சந்தேகமில்லாமல், கேட்க வேண்டும்; கிடைக்குமென்ற ஒற்றை நம்பிக்கையோடு கேட்க வெண்டும். நிச்சயம் அது கிடைத்தே தீரும். தூணிலும் துரும்பிலும் இருக்கும் அந்த பரம்பொருள் நமக்காக வரங்களை கொடுக்க காத்திருக்கிறது. ஆனால், நாம் தான் அதை கவனிக்க தவறிக்கொண்டிருக்கிறோம்.

அந்த பரம்பொருளானது, எந்த மதத்தினாலும் காப்புரிமை வாங்கப்பட்டு, எவராலும் உருவாக்கப்பட்ட இறைவனல்ல. அது இயல்பாகவே நம்மை சூழ்ந்திருக்கும் ஒட்டுமொத்த 'பிரபஞ்சம்' தான். பல்லாயிர கிரகங்கள் உட்பட பலநூறு சூரிய சந்திரன்களையும் பால்வெளியில் பேரண்டமாய் சுமந்திருக்கும் அந்த ஒற்றை கூரையான பிரபஞ்சமே பேரம்பலம். அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் என்பது போல, நம்முள்ளுள்ள உள்ளொளியும் கடவுள் தான்; அந்த கடவுளே சிற்றம்பலம். இதை புரிந்தாலே பரம்பொருள் ரகசியம் எளிதாக நம் சிற்றறிவுக்கு அம்பலமாகி விடும். அதன் பின்னால், அந்த அருட்பெரும் ஜோதியோடு உறவாடி, நாமே கடவுளாகலாம்.

தாய்மொழியில், தமிழ்மொழியால் உரையாட தெரியாதவன் கடவுளாகவே இருக்க முடியாது; அவனை கடவுளென சொல்ல தகுதியுமில்லை; அவன் கடவுளாக இருக்க வாய்ப்புமில்லை. எனவே, சிற்றம்பலமும் - பேரம்பலமும் உறவாடும் போது, அங்கே அரபியோ, ஹீப்ருவோ, சமகிருதமோ எதுவும் தேவையில்லை. ஏனெனில் கடவுளுக்கென மொழியுமில்லை; கடவுளை தொடர்பு கொள்ள மொழியும் தேவையில்லை. "அருள் இல்லார்க்கு அவ்வுலகமில்லை பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லாகி யாங்கு" என்ற திருக்குறளின் வரிகளுக்கேற்ப, பொருளோடு அருளையும் சேர்த்து பேரம்பலத்தானோடு சரணாகதியடைந்து, நீங்களும் கடவுளோடு கடவுளாக ஐக்கியமாகுங்கள். இறைத்தூதர் என்ற யாரையும் கடவுளாக்கி கடைசி வரையில் கடைக்கோடியிலேயே காலம் தள்ளாதீர்கள்.

- இரா.ச. இமலாதித்தன்

02 பிப்ரவரி 2016

ஆன்மீகமென்னும் எளிய வழிமுறை!

ஆன்மீகம் கடலெல்லாம் இல்லை. அதை முழுவதுமாக அறிந்து கொண்டால் ஒரு சிறிய குடம் தான்.

என் சிற்றறிவுக்கு எட்டியவரை, ஆன்மீகமும் உணவு கழிவை நீக்கும் காலைக்கடன் போலத்தான். சிலருக்கு பேப்பர் படித்தால் வரும்; சிலருக்கு சிகரெட் பிடித்தால் வரும்; சிலருக்கு தண்ணீர் குடித்தால் வரும்; சிலருக்கு வெற்றிலை பாக்கு போட்டால் வரும்; சிலருக்கு டீ_காபி குடித்தால் வரும். ஆனால் எல்லாருக்குமே வரும்; ஆன்மீகமும் அப்படித்தான்.

அதனால் ஒருவனின் ஆன்மீக அனுபவம் இன்னொருவனுக்கு ஒத்து வரும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. இங்கே அனைவரும் தனித்துவமானவர்கள். முதலில் உங்கள் பலம் - பலவீனத்தை அறியுங்கள்; அதுவே ஆன்மீகத்தின் முதல் படி. இறைவனை புகழுங்கள். வழிகாட்டிய குருவிற்கு மரியாதை மட்டும் செலுத்துங்கள்.

- இரா.ச.இமலாதித்தன்

08 நவம்பர் 2014

வண்ணங்களும் வணக்கத்துக்குரியவையே!

அனைத்து வண்ணங்களிலும் ஓர் அழகு ஒளிந்திருந்தாலும், பசுமைக்கு நிகரான அழகு வேறேதுமில்லை. என் சிறு வயது முதலே மிகவும் பிடித்து போன நீலம், பச்சைக்கு பிறகு சிவப்பும் பிடித்துப்போய் விட்டது. RGB என்ற இந்த மூவண்ணங்கள் தான் மற்ற அனைத்து விதமான வண்ணங்களுக்கும் மூலாதாரமாக இருக்கின்றதென்றாலும், இந்த மூன்று வண்ணங்களுக்கு பின்னால் பல அறிவியலும் ஆன்மீகமும் கூட நிறைந்திருக்கின்றன. உதாரணமாக பச்சையை பெருமாளுக்கும், கருநீலத்தை இராமனுக்கும், சிவப்பை சிவன் மற்றும் எம்பெருமான் திருமுருகனுக்கும் உரிய நிறமாக சொல்வார்கள். மேலும், நவக்கிரங்களான புதனுக்கு பச்சையையும், சனிக்கு - நீலத்தையும், செவ்வாய்க்கு - சிவப்பையும் வஸ்திரங்களாக அணுவித்தும் வணங்குவார்கள். இது ஆன்மீகம். அதன் தொடர்ச்சியாக, குளோரினுக்கு - பச்சை, நைட்ரஜனுக்கு - நீலம், ஆக்சிஜனுக்கு - சிவப்பு என்றும், மேலும் எலக்ட்ரான் - புரோட்டான் - நியூட்ரான் போன்ற அணுக்களுக்குள்ளும் இந்த பச்சை - நீலம் - சிவப்பு வண்ணக்குறியீடுகள் மூலமும் அறிவியலிலும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். நிச்சயம் ஒருநாள், விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒற்றைப்புள்ளியில் சங்கமித்து, அறிவியலும் ஆன்மீகத்தோடு இணையும். அதன் பெயர் தான் இறைவன் என்று அப்போது புரியும்.

- இரா.ச.இமலாதித்தன்

கொசுறு:

சேனைக்கிழங்கு - நாக்கை அறிக்கும்; வள்ளிக்கிழங்கு - நாக்கில் இனிக்கும். இதுல இருந்து என்ன புரியுது? முதல்ல இருக்கிறத விட இரண்டாவதா வரதுதான் இனிக்கும். அதுனால தான் தெய்வசேனை இருக்கும்போதே வள்ளி மீதும் எம்பெருமான் திருமுருகன் காதல் வசப்பட்டுட்டாரு போல.