07 மே 2017

செந்தமிழ் திருமகன் உமா மகேசுவரன் பிள்ளை (1883- 1941)





அகமுடையார் குலத்தோன்றல் 'தமிழவேள்' கரந்தை உமாமகேசுவரன் பிள்ளை! இவர் மட்டும் முயற்சி எடுக்காவிட்டால் சாதி வகைபாட்டியலில் முற்பட்டோர் பட்டியலில் இருந்த அகமுடையாரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைந்திருக்கவே முடியாது. இட ஒதுக்கீடே இல்லாமல் தவித்திருக்கும் சமூகமாய் அகமுடையார் இனக்குழு இன்றளவும் இருந்திருக்கும். தமிழை செம்மொழியாக்க வேண்டுமென 1919லேயே கரந்தை தமிழ் சங்கத்தின் மூலமாக தீர்மானம் நிறைவேற்றிய, தமிழ்த்தாய் வாழ்த்தை முதன்முதலாக பயன்படுத்திய பெருமைக்குரிய பெருந்தமிழருக்கு 134 வது புகழ் வணக்கம்!





சுந்தரனார் எழுதிய மணோன்மனியம் நூலிலுள்ள பாடலை, தமிழ்த்தாய் வாழ்த்தாக முதன்முதலில் அறிமுக படுத்தியவர்.

ஸ்ரீமான், ஸ்ரீமதி போன்ற அந்நிய மொழியேற்றத்தை எதிர்த்து, திருமகன், திருவாட்டி என தனித்தமிழில் திருத்தியவர்.

பத்திராதிபர், சந்தா, விலாசம், வி.பி.பி. என்பனவற்றுக்கும் பதிலாக பொழிற்றொண்டர், கையொப்பத் தொகை, உறையுள், விலை கொளும் அஞ்சல் போன்ற தனித்தமிழ் வார்த்தைகளை உருவாக்கி தந்தவர்.

1911ம் ஆண்டில் ஐந்தாம் தமிழ்ச்சங்கமாக, தஞ்சையில் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தை உருவாக்கியவர்.

பல்லாயிர கணக்கான நூல்களை விலை கொடுத்து வாங்கி, அவற்றையெல்லாம் தமிழாய்வுக்காக தனி நூலகத்தை உருவாக்கியவர்.

தமிழ்ப்பொழில் என்ற தமிழ் மொழிக்கான மாத இதழை தொடங்கி தொடர்ச்சியாக நடத்தியவர்.

பார்பனரல்லாதவர் பட்டப்படிப்பு படிக்கவே இக்கட்டான சூழல் நிரம்பிய காலக்கட்டத்தில், அகமுடையார் இனக்குழுவில் பிறந்த இவர் சட்டம் படித்து, இலவசமாக வழக்குரைஞர் பணியையும் திறன்பட சேவை செய்தவர்.

தமிழை செம்மொழியாக்க வேண்டுமென்று 1900 காலக்கட்டத்திலேயே தீர்மானம் நிறைவேற்றியவர்.

பார்பனர் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய அரசியலில், பார்பனரில்லாத கட்சியான 'நீதிக்கட்சி' தொடங்க காரணகர்த்தர்களில் ஒருவராக இருந்தவர்.

முற்பட்டோர் பட்டியலில் இருந்த அகமுடையாரை, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்து இட ஒதுக்கீடு பெற வழி செய்தவர்.

"வான வரிவைக் காணும்போ தெல்லாம் உமாமகேசுரன் புகழே என் நினைவில்வரும்" என பாரதிதாசனால் புகழப்பட்டவர்.

இப்படியான பல பெருமைகளை கொண்ட தமிழவேள் உமா மகேசுவரன் பிள்ளையவர்கள், 07.05.1883ல் அவதரித்து 09.05.1941ல் இம்மண்ணை விட்டு மறைந்தாலும், அவர் புகழ் எப்போதும் மறையாது.

புகழ் வணக்கம்!

- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக