ரசிகனின் பார்வையில் பைரவா!

திரையில் எம்ஜிஆர், ரஜினி ஃபார்மலா தான் எனக்கு பிடிக்கும். அதே பாணியில் சமகாலத்தில் கமர்சியல் எண்டர்டெயினராக தன்னை வெளிப்படுத்தும் இளையதளபதி விஜயைத்தான் எனக்கு பிடிக்கும்; இந்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையெல்லாம் விட இளைய தளபதி என்ற அடையாளமே போதுமென்று விஜயே ஒரு மேடையில் சொல்லிருக்கிறார்; ஆனாலும் அவரை சூப்பர் ஸ்டார் விஜயாகவே பார்க்க விரும்புகிறேன். இது என் தனிப்பட்ட விருப்பம். எம்ஜிஆர் மலையாளி, ரஜினி கன்னட மராத்தியர் என்ற விமர்சனம் அப்போதிலிருந்தே இங்கு உண்டு. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு தமிழன், திரைத்துறையில் சூப்பர் ஸ்டார் என்ற இடத்திற்கு மிக அருகிலோர் உச்சபட்ச நிலையை தொட்டிருப்பதால், விஜயை ஆதரிக்க வேண்டுமென்ற விருப்பமும் எனக்குண்டு. என்னுடைய இந்த நிலைப்பாட்டை விமர்சிப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பவெறுப்பு சம்பந்தபட்டது. அதைப்பற்றியெல்லாம் எப்போதும் கவலைப்பட போவதில்லை.

இப்போது பைரவா பற்றி சிலவற்றை எழுதலாமென்று நினைக்கிறேன். முதலில், எனக்கு பைரவா ரொம்பவே பிடித்திருக்கிறது. துப்பாக்கி + கத்தி + தெறி என்ற கடைசி விஜய் ஹிட்லிஸ்ட் படங்களின் பட்டியலில் இந்த படமும் சேருமென்றே நினைக்கிறேன். காமெடி, ஃபைட், டான்ஸ், குத்துப்பாட்டு, செண்டிமெண்ட், ரொமான்ஸ் என்ற ஒரு கமர்சியல் ஃபார்மலா படத்தில், சமூகத்தில் நடக்கின்ற சமகால பிரச்சனையை பற்றிய மெசேஜை பைரவாவில் சொல்லிருக்கும் விதம் பாராட்டுக்குரியது.

ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்துவதை சுட்டிக்காட்டிய அதே வேளையில், அதே சோசியல் மீடியாவால் தான் சென்னை வெள்ளத்திலிருந்த சென்னையை மீட்க முடிந்ததென்ற உண்மையை திரையில் மிக அழுத்தமாக விஜய் சொல்லிருக்கிறார். கூடவே மீம்ஸ் உருவாக்கி தவறானவர்களை பொதுவெளிக்கு அடையாளப்படுத்த முடியுமென்பதையும் காட்சி படுத்திருக்கிறார் இயக்குனர் பரதன். திரைத்துறையில் வெற்றிப்பெற்றவர்களுக்கே அடுத்த வாய்ப்பு கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கும் வேளையில், விஜய் மீண்டுமொரு வாய்ப்பை பரதனுக்கு கொடுத்ததன் பின்னணி பெருந்தன்மையுடன் கூடிய விஜயின் மனசாட்சிக்கு சம்பந்தப்பட்ட ஒன்று. கிடைத்த அந்த வாய்ப்பையும் பரதன் நேர்மையாகவே பயன்படுத்தி இருக்கிறாரென்று நினைக்கிறேன்.

கும்பகோணம் பள்ளி தீ விபத்தால் கொல்லப்பட்ட 90க்கும் அதிகமான குழந்தைகள், தாம்பரம் பள்ளி வாகனத்தின் உள்ளேயிருந்த ஓட்டையில் விழுந்து இறந்த மாணவி, கள்ளக்குறிச்சியில் அங்கீகாரமில்லாத செவிலியர் கல்லூரியின் கிணற்றில் விழுந்து தன்னுயிரை விட்ட மூன்று மாணவிகள் என கல்வித்துறையில் நடந்த, நடக்கின்ற அவலங்களையும், அதனை கண்டு கொள்ளாத அரசு நிர்வாகத்தையும் கண்டிக்கும் சமூக அக்கறைக்காகவே இப்படத்தை க்ளாஸ் என வகைப்படுத்தலாம். டயலாக் டெலிவரி, காமெடி, ஆக்‌ஷன் சீக்வென்ஸ், டான்ஸ், ஸ்டைல் என எல்லாவற்றிலும் விஜய், இப்படத்தை மாஸ் ஆக்கிருக்கிறார். சினிமாவின் இலக்கணம் பற்றியெல்லாம் கணக்கீடு செய்யாமல் பாமர ரசிகனாக எனக்கு பைரவா பிடித்திருக்கிறது. உங்களுக்கும் கூட பிடிக்கலாம்; எந்த ரசிகனின் கண்ணாடியையும் அணியாமல் பார்த்தால் உங்களுக்கும் தனியாக வந்த இந்த பைரவாவை பிடிக்கலாம்.

- இரா.ச. இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment