09 ஜனவரி 2017

ஹிந்திய நாட்டிற்குள் அழித்தொழிக்கப்படும் தமிழ் பண்பாடு!

தமிழர்களின் தேசியத்திருவிழாவான பொங்கல் திருநாளை, கட்டாய விடுமுறை தினத்தில் இருந்து ஹிந்திய அரசு நீக்கியுள்ளது. பல தேசிய இனங்களின் கூட்டாட்சி நாட்டில், சர்வாதிகார ஆட்சியை நடத்தி வரும் மோடி சர்க்காருக்கு நன்றி. இதற்கு மேலுமா அவமானப்படுத்த வேண்டும்? ஏற்கனவே பல அடிகளை கொடுத்தீங்க. நாங்க என்ன திருப்பி அடித்தாமோ என்ன? எங்களையே ஏன் ஜி அடிக்கிறீங்க? நாங்க ஜெயலலிதா செருப்புக்கு மாற்றாக, தீபாவின் செருப்பா? சசிகலாவின் செருப்பா? என பரபரப்பாக தேடிக்கிட்டு இருக்கும் போது, நீங்க வேற ஏன் ஜி இப்படி பண்றீங்க?

மக்களை திசை திருப்புவதில் கை தேர்ந்தவர்கள் அரசியல் கட்சிகள்; அதில் பி.ஜே.பி.தான் பி.ஹெச்.டி முடித்திருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு வேண்டுமென்று ஒருமித்து குரல்கொடுக்கும் போது, பொங்கல் திருநாளை கட்டாய விடுமுறையிலிருந்து நீக்குவதாக அறிவித்து இம்முறையும் மக்களை மடைமாற்றி விட்டிருக்கிறார்கள். நாளுக்கு நாள், 100 பேருக்கும் மேலான தமிழ்நாட்டு விவசாயிகள் வறட்சி காரணமாக செத்துக்கொண்டிருக்கிறார்கள். வர்தா புயலால் தமிழக தலைநகரமே பாதிக்கப்பட்டு வறட்சி/புயல் நிவாரணம் கேட்டுக்கொண்டிருக்கும் வேளையில் கர்நாடகத்திற்கு வறட்சி நிவாரணமாக பல கோடிகளை ஒதுக்கி இருக்கிறது மோடி சர்க்கார்.

கன்னடத்திற்கு ஆதரவாக காவிரி ஆணையம் தேவையில்லையென சொல்லிவிட்டு, கெளதமியை சந்திக்க நேரம் ஒதுக்கிய மோடியால், தமிழ்நாட்டு விவசாயிகளையோ, எம்.பி.க்களையோ சந்திக்க நேரம் ஒதுக்க முடியாமல் போனதுதான் ஆச்சர்யம். கடைசியாக காவிரி பிரச்சனையின் போது, தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் என பாரபட்சம் பார்க்காமல் அனைத்து வாகனங்களையும் தீயிட்டு கொழுத்தி, தமிழ் இளைஞனை கட்டி உதைத்து, பலரது உடைமைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய கன்னட வெறியர்களை பற்றி வாய் திறக்காமல், தமிழர்கள் அத்துமீறி வன்முறை செய்கிறார்கள் என்று சொல்லி, தொடர்ச்சியாக தமிழர் விரோத இனவெறி அரசியலை செய்யும் மோடி சர்க்கார், கனவிலும் கூட ஆட்சி அதிகாரத்திற்கு இனியொரு போதும் வந்துவிட கூடாது என இறைவனை வேண்டுகிறேன். சென்ற நாடாளுமன்ற தேர்தலில் தாமரைக்கு வாக்கு கேட்டு, பிஜேபி கூட்டணிக்கு வாக்களித்ததற்காக வெட்கப்படுகிறேன்.

தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, ஹோலி, ராம நவமி, தசரா, மகாசிவராத்திரி, மஹாவீர் ஜெயந்தி, புத்த பூர்ணிமா, குருநானக் ஜெயந்தி, ஹனுமந்த் ஜெயந்தி... இதெல்லாம் ஹிந்திய சட்ட விதிகளின் படி ஒருவகையில் ஹிந்து பண்டிகைகள் தான். எனக்கு ஐயனார் குல தெய்வம்; நானும் ஹிந்து. நீ கடவுள் மறுப்பாளர்; ஆனாலும் நீ ஹிந்து. வாழ்க ஹிந்துத்துவா! வல்லபாய் படேலாலும், இராணுவத்தாலும் கட்டாயப்படுத்தி ஹிந்தியா எனும் கூட்டாட்சி நாட்டில் எங்கள் தமிழ்நாட்டை இணைத்ததையும் ரத்து செய்ய முன்வாருங்கள் வட ஹிந்தியர்களே!

பிஜேபியையோ, நரேந்திர மோடியையோ, போலி ஹிந்துத்வாவையோ பற்றி விமர்சிப்பவரெல்லாம் ஈ.வெ.ரா. ஆட்களென்றோ, இசுலாமிய ஆட்களென்றோ நினைக்கும் பக்தாள் கூட்டம் அதிகமாகி கொண்டே வருகிறது. ஆன்மீகத்தை பற்றியோ, ஆண்டவன் பற்றியோ ஏதுமறியாமல் அரைகுறை அறிவோடு, நாங்கள் ஹிந்து, நாங்கள் காவியென பெருமை பேசி குருட்டுத்தனமாக ஹிந்திய சர்க்காரின் கொள்கை முடிவுகளை ஆதரிப்பதால் யாருக்கு என்ன பயன்?

இங்கே தன்னை ஹிந்துயென வெளிக்காட்டிக்கொண்டு பெருமை பேசும் அனைத்து முட்டாள்தனமான வெறியர்களை விடவும், அதிகமான ஆன்மீக ஈடுபாடு எனக்குண்டு. அதை பற்றிய ஓரளவிற்கான தெளிவும் எனக்குண்டு. பிஜேபி என்ற கட்சி ஹிந்துத்வ கட்சி என்பதால், அவர்கள் செய்யும் அனைத்தையும் கண்மூடித்தனமாக ஆதரிக்க வேண்டுமா என்ன? போகிற போக்கை பார்த்தால், பிஜேபி மீது விமர்சனம் வைப்பவர்களெல்லாம் ஹிந்துவே இல்லையென சொல்லி விடுவார்கள் போல. நீங்கள் மட்டுமல்ல, யார் சொன்னாலும் சோ கால்டு ஹிந்து என அடையாளப்படுபவர்களில் 90% பேர் ஹிந்துக்களே இல்லை என்பதே உண்மை.

ஈரான் - மத்திய ஆசியாயென பல்வேறு பகுதியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு மதம் ஹிந்துவாக உருமாற்றம் பெற்றுள்ளது. இதன் ஏகபோக உரிமையாளராக, கோவில் கருவறையின் முதலாளிகளான பார்பனர்களே உள்ளனர் என்பது தெரிந்த பின்னாலும், சிந்து நதிக்கரையில் வந்தேறிய கூட்டத்தால் உருவாக்கப்பட்ட மதத்தை தூக்கி பிடிப்பது ஏன்?

”சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாதப் பட்டரே
வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ
மாத்திரைப் போதும்முளே யறிந்து தொக்க வல்லிரேல்
சாத்திரப்பை நோய்கள் ஏது சத்திமித்தி சித்தியே.”

- சிவ வாக்கியர் (14)

“கோயிலாவது ஏதடா குளங்கலாவது ஏதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே”

- சிவ வாக்கியர் (35)

”இருக்கு நாலு வேதமும் எழுத்தை அறவோதிலும்
பெருக்க நீறு பூசிலும் பிதற்றிலும் பிரான் இரான்
உருக்கி நெஞ்சை உட்கலந்து உண்மை கூற வல்லிரேல்
சுருக்கம் அற்ற சோதியைத் தொடர்ந்து கூடலாகுமே!”

- சிவ வாக்கியர் (38)

”காலை மாலை நீரிலே முழுகும் அந்த மூடர்காள்
காலை மாலை நீரிலே கிடந்த தேரை என் பெறும்
காலமே எழுந்திருந்து கண்கள் மூன்றில் ஒன்றினால்
மூலமே நினைப்பிராகில் முத்தி சித்தி யாகுமே”

- சிவ வாக்கியர் (132)

”மாதா மாதம் தூமைதான் மறந்துபோன தூமைதான்
மாத மற்று நின்றலோ வளர்ந்து ரூபம் ஆனது
நாதம் ஏது வேதம் ஏது நற்குலங்கள் ஏதடா
வேதம் ஓதும் வேதியா விளந்தாவாறு பேசடா”

- சிவ வாக்கியர் (136)

வள்ளலார் உள்பட சித்தர்கள் அனைவரும் கண்டுணர்ந்த மெய்ஞானத்தை விட இங்குள்ள ஹிந்துத்வா பேசும் அறிவுஜீவிகள் நிறையவே உணர்ந்து தெளிந்தவர்களென நினைக்கிறேன். ஆழ்ந்த அனுதாபங்கள்!

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக