26 ஜனவரி 2017

புறக்கணிக்கப்பட்ட தமிழர்களின் குடியரசு நாள், ஜனவரி 26?



'சிலம்பு செல்வர்' ம.பொ.சி அவர்களால் வடிவமைக்கப்பட்ட தமிழ்நாட்டு கொடி. தமிழகம் முழுக்க இக்கொடியை பறக்கவிட வேண்டுமென்ற அவரது ஆசை கடைசிவரை நிறைவேறாமலே போனது. காலம் கனியும் போது, இனி இந்த தமிழர்கொடி எம் தமிழ் மண்ணில் பறக்கும். இது போல, இப்போதைய சூழலில் தமிழ்நாட்டிற்கென தனிக்கொடி ஏதாவது இருக்கிறதா? பெரும்பான்மையான தமிழர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான கொடி இருக்கிறதா? திராவிட நாடென சொல்லும் ஆந்திரா/கர்நாடாகாவுக்கு கூட தனிக்கொடி இருக்கிறது; அவர்களின் போராட்டக்களங்களில், கட்சிக்கொடிகளை தவிர்த்து விட்டு, இந்த கொடியைத்தான் பயன்படுத்துகிறார்கள். நாம் ஏன் இன்னமும் கருப்பு கொடியை மட்டும் தூக்கி கொண்டிருக்க வேண்டும்? மங்களகரமாக மண்ணியல் சார்ந்த வண்ணங்களோடு ஒரு கொடியை உருவாக்கலாமே?!


குடிமக்களின் உணர்வுகளையும், அவர்களது பண்பாட்டு கூறுகளையும் மதிக்காமல், ஒரு மொழி, ஓர் இனம் என்ற ஏகாதிபத்தியத்தை திணிக்கும் ஹிந்திய கொள்கைக்கு, குடியரசு நாள் ஒரு கேடா? வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இம்மண்ணின் பெருமைக்குரிய அடையாளம். அதையெல்லாம் மறந்து, எங்களது கலாச்சாரத்தின் கருவறையை சீர்குலைக்கும் ஹிந்தியத்தின், குடியரசு நாளை தமிழ் பெருங்குடியை சேர்ந்தவனாக வெறுக்கிறேன். இதுநாள் வரை இம்மண்ணை அடக்கி ஆளுகின்ற ஆட்சியாளர்களால், இந்த ஜனவரி 26 தேதி என்பது வருடத்தில் மற்றுமொரு நாளே தவிர வேறந்த சிறப்பும் இந்நாளுக்கு இல்லாமலே போனது. ஆனாலும், உங்களின் விருப்பு வெறுப்பை யார் மீதும் திணிக்காமல், மகிழ்வோடு கொண்டாடுங்கள். என்னை பொறுத்தவரை இந்நாளை கருப்பு நாளாகவே அனுசரிக்கிறேன்!

- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக