01 ஜனவரி 2017

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!

தமிழ் தேசியத்தின் மீது தீவிர நம்பிக்கை இருந்தாலும், ஆன்மீக ஜோதிடத்தின் நம்பிக்கையாளனாக சித்திரை ஒன்றாம் தேதியை தான் தமிழ் புத்தாண்டாக கொண்டாட தோன்றுகிறது. தையோ, சித்திரையோ, அதுவொரு தேசிய இனத்தின் புத்தாண்டாக மட்டுமே அமைகிறது. ஆனால் உலகமயமாக்கப்பட்ட சமகால சூழலில், இயேசுவின் பிறப்பை மையப்படுத்திய ஆங்கில நாட்காட்டியின் ஜனவரி ஒன்றாம் தேதியையும் இங்கு யாராலும் புறக்கணிக்க முடிவதில்லை என்பதே எதார்த்தம். மேலும், உலகின் அனைத்துதரப்பட்ட மக்களின் தொடர்புமொழியாகவும், இரண்டாம் அலுவல் மொழியாகவும் மாறிப்போன ஆங்கில புத்தாண்டை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கவும் முடியாது.

பச்சையப்பா கல்லூரியில் 1921ம் ஆண்டு எங்கள் நாகப்பட்டினத்தை சேர்ந்த மறைமலை அடிகளாரின் தலைமையிலான திரு.வி.க. உள்ளிட்ட குழுவினரின் ஆய்வுமுடிவின் படி, திருவள்ளுவர் பிறந்த ஆண்டை உறுதி செய்தனர். அவர்களது ஆய்வின் படி, இயேசு பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்னதாகவே வள்ளுவர் பிறந்தார் என்பதை வைத்து தனித்துவ நாட்காட்டியும் உருவாக்கப்பட்டது. அதன் தொட்ர்ச்சியாக தமிழக அரசு கி.பி.1972ம் ஆண்டில் திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று, அரசிதழிலும் வெளியிட்டு தமிழக அரசு அலுவலகங்களில் திருவள்ளுவர் ஆண்டு என்ற தமிழர்களுக்கான பொது ஆண்டுமுறையை கடைபிடித்தும் வருகிறது.

இயேசு கிறிஸ்து பிறக்கும் முன்னரே பல்லாயிரம் ஆண்டுகள் பண்பாட்டு கூறுகளோடு வாழ்ந்த தமிழ் பேரினத்தின் நீட்சியான சமகால தமிழனாக, கி.பி. 2017ம் ஆண்டை மனமகிழ்வோடு வரவேற்கிறேன். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற முன்னோரின் வாக்குப்படி அனைத்து உறவுகளுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக