சர்கார் - திராவிட அரசியலின் முகமூடி அவிழ்ப்பு!சூப்பர் ஸ்டார் விஜயின் 'சர்கார்' படத்தில் முழுக்க முழுக்க குறியீடுகளே நிரம்பிருக்கின்றன; அனைத்துமே அரசியல் குறியீடுகள். கடந்த ஐம்பதாண்டு கால திராவிட அரசியலின் ஆணிவேரை அசைத்து பார்த்திருக்கிறது இந்த படம். திராவிட அரசியலில் நடந்த / நடக்கின்ற, நாம் கண்டும் கண்டுகொள்ளாமல் கடந்து சென்று கொண்டிருக்கின்ற அத்தனை அவலங்களையும், இந்தப்படம் பேசி இருக்கிறது.

பழ.கருப்பையா பாத்திரம் அப்படியே கருணாநிதியை நினைவுபடுத்துகிறது. ராதாரவியின் பாத்திரம் மூன்றுபேரை ஒத்திருக்கிறது; ராதாவியை 'ரெண்டு' என அடையாளப்படுத்தப்படுவதிலும் குறியீடு இருக்கிறது. அந்த இரண்டாம் இடத்தில் உள்ளவர்கள் அன்பழகன் - துரைமுருகன் - ஸ்டாலின். இந்த மூவரில் குறிப்பாக ஸ்டாலினையும் துரைமுருகனையும், ராதாரவியின் செயல்பாடுகள் நினைவுபடுத்துகிறது. தாய் கழகத்துடன் இணைப்பு விழா என்பது போன்ற அரசியல் நிகழ்வில் மின்னொளி விளக்கில் பழ.கருப்பையாவின் உருவம் அப்படியே கருணாநிதியை போலவே இருக்கும்.

பழ.கருப்பையாவின் மகளாக வரும் வரலட்சுமியின் பாத்திரம், மூன்றுபேரை நினைவுபடுத்துவதாக இருக்கிறது; ஒன்று, கனிமொழி; இரண்டு, ஜெயலலிதா; மூன்று, சசிகலா. அடுத்து, பழ.கருப்பையாவும், ராதாரவியும் வரலட்சுமியை 'பாப்பா' என்றே எல்லா இடங்களிலும் அழைப்பதும், விஜய் கூட ஓரிடத்தில் 'பாப்பா' என நேரடியாக சொல்வதும், வரலட்சுமியின் கதாபாத்திர பெயர் 'கோமளவல்லி' என்று இருப்பதும், அப்படியே ஜெயலலிதாவையே நினைவூட்டுகிறது. மேலும் அந்த வரலட்சுமியின் கதாபாத்திரம் மூவரை உள்ளடக்கிய கலவையான பாத்திரமாக உருவாக்கப்பட்டுள்ளதால், அம்மூவரின் குணாதிசயங்களையும், நடவடிக்கைகளையும் அந்த பாத்திரம் வெளிக்காட்டுகிறது.

படத்தின் டைட்டிலில் சூரியனோடு சிங்கம் இருக்கின்ற கொடியை கொண்ட அரசுக்கும், புலிக்கொடியை கொண்ட அரசுக்கும் போர் நடந்து, இறுதியாக புலிக்கொடி வெல்வதாக காட்டிருக்கின்றனர். மேலும், கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை ஆக்கிரமிப்பது போலவும் ஒரு காட்சி கட்டப்பட்டிருக்கும். பிறகு, நேதாஜியும் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த ஜானகி தேவரும் இராணுவ உடையோடு படை வீரர்களுக்கு இடையே நடந்து வரும் காட்சி காட்டப்படும்; அதனை தொடர்ந்து காந்தி, நேரு, அம்பேத்கர், ஈ.வெ.ரா., காமராஜர் என பட்டியல் நீளும். கடைசியாக ஒரு கருடன் பறந்து வந்து, இந்திய வரைபடத்தில் தமிழ்நாட்டுக்குள் புகுவதை போன்றதொரு காட்சியும் அமைத்து இருப்பார்கள். கூடவே புலிக்கொடி பெரிதாக காட்டப்படும்.

இந்த புலிக்கொடிக்கு பின்புலமாக மூன்று வரலாற்று நிகழ்வுகள் இருக்கின்றன; முதலாவது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே (ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் போன்ற) சோழர்கள் தெற்காசியாவையே புலிக்கொடியோடு ஆண்டனர். அதற்குப் பிறகான நேதாஜியின் புலிக்கொடியும், ஐரோப்பிய கிழக்கிந்திய கம்பெனியின் வணிக கூட்டாட்சிக்கு எதிராக இந்திய தேசிய இராணுவத்தை கட்டமைத்து, வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கியது. மூன்றாவதாக, புலிக்கொடி அண்ணன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூலம் மீண்டும் பட்டொளி வீசி பறக்க விடப்பட்டது; உலக வரலாற்றில்ல் ஒரு போராளி இயக்கம் முப்படைகளை வைத்திருந்த பெருமைமிகு சாதனையையும் தமிழீழ புலிக்கொடி உருவாக்கி கொடுத்தது.சுந்தர் ராமசாமியாக வரும் விஜய் தன்னை மீனவனாகவே பல இடங்களில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். தனது பூர்வீகம் இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவக் குடும்பம் என்பதாகவும், தன்னுடைய அப்பா சிங்கள ராணுவத்தால் கடலிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் சொல்லிருப்பார். தொடர்ச்சியாக பக்கத்து நாட்டு இராணுவம் தமிழ் மீனவர்களை சுட்டுக் கொல்கிறது என்பதையும் பேசிருப்பார்.

மெர்சலில் பல இடங்களில் வருவது போல தன்னிரு கைகளை குறுக்கு வெட்டாக வைத்து கருட முத்திரையை சர்க்காரிலும் அரசியல் மேடையில் க்ளோசப் காட்சியாக விஜய் காட்டியிருப்பார். மேலும் நான்கைந்து காட்சிகளில் இரண்டு கைகளையும் விரித்து சிறகுகள் போல ஒரு குறியீட்டை காட்டியிருப்பார்.

கருணாநிதி, அண்ணாதுரை, அண்ணா அறிவாலயம், அண்ணா சிலை, மதிமுக கட்சிக்கொடி, ஸ்டாலின், துரைமுருகன், சூரிய சிங்கக் கொடி, புலிக்கொடி, கிழக்கிந்திய கம்பெனி, கருடன், ஜெயலலிதா, கனிமொழி, சவுக்கு சங்கர், மெரினா சமாதி, அ.இ. என தொடங்குகின்ற கட்சிப்பெயர், அப்போலோ மருத்துவமனை வீடியோ காட்சிகள், ஒரு தலைவரின் மரணத்தை வைத்து செய்யப்படுகின்ற அரசியல், இப்படியான அனைத்து தரப்பட்ட திராவிட அரசியலின் இன்னொரு முகத்தை பல குறியீடுகளோடு இந்த சர்க்கார் சொல்லிருக்கிறது.

கோமலவள்ளி என்ற பெயருக்கு பதிலாக வேறொரு பெயரை வைத்திருந்தால், திமுக, அமமுக போல அதிமுகவும் நேரடியாக சர்காரை எதிர்த்திருக்க மாட்டார்கள். கோமலவள்ளி தான் ஜெயலலிதா என நம்பும் இவர்களுக்கு மாசிலாமணியாக வரும் பழ.கருப்பையா யார்? ஐம்பத்தைந்து வருட அரசியல், மூன்றாம் தலைமுறை அரசியல், தலைவர் முகமே ஒரு பிராண்ட், என்பதெல்லாம் தமிழக அரசியலில் யாரை குறிக்கிறது? பெயரளவில் மட்டும் கோமலவள்ளியாக வரும் வரலட்சுமியின் நடை, உடை, பேச்சு, உடல்மொழி இவையெல்லாம் யாரை குறிக்கிறது? தலைவர் தலைவரென சொல்லும் 'ரெண்டு' ராதாரவியின் உடல்மொழி யாரை முன்னிறுத்துகிறது? இவையெல்லாம் யாருக்குமே தெரியவில்லையா? இல்லை; தெரிந்தும் தெரியாததது போலவே இருக்கின்றீர்களா?

விஜயின் அரசியல் வருகையை பற்றியெல்லாம் இன்றைக்கு தலைப்பு செய்திகளாக ஊடகங்கள் பேசிக்கொண்டிருக்கின்றன. ஆனால் தனது முதல் அரசியல் நகர்வை 2011ம் ஆண்டே நாகப்பட்டினத்தில் தான் விஜய் தொடங்கினார். குறிப்பாக மீனவர்கள் பிரச்சினைக்காக அவரது முதல் அரசியல் கூட்டம் நாகையில் தான் நடந்தது. இந்த கண்டன கூட்டமானது, பெரிய கட்சியின் அரசியல் மாநாடு போல மாறிப்போனது. அன்று கூடிய கூட்டத்தையும், நிரம்பிருந்த வாகன நெரிசலையும் அவ்வளவு எளிதாக இங்குள்ள எந்த அரசியல்வாதியாலும் மறந்துவிட முடியாது. அன்றைய கூட்டத்தில், "தொடர்ச்சியாக தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் தாக்குதல் நடத்தி, கொன்று கொண்டிருந்தால் உலக வரைபடத்தில் இருந்து இலங்கை காணாமல் போகும்" என்று அவர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதன் பின்னால் அவரது படங்களெல்லாம் இலங்கையில் திரையிட முடியாத அளவுக்கு கூட பிரச்சினை உருவானது.

இந்த படத்திலும் சாட்டை முத்துக்குமார் என்ற பத்திரிகையாளர் சேகரித்த முக்கிய தகவல்கள் அடங்கிய ஹார்ட் டிஸ்கை, நாகப்பட்டினத்தை சேர்ந்த ஒருவரே கொடுப்பதாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அப்போது விஜய் சொல்லுவார் "இந்த இன்னிங்சில் முக்கியமான ஓவரின் பெரிய சிக்ஸர் நீங்கள்தான்" என்று... இதை அந்த அரசியல் கண்ட பொதுக்கூட்டத்தோடும் ஒப்பிட்டு பார்க்க முடியும்.

டைட்டில் காட்சியில் ஈ.வெ.'ராமசாமி'யின் படத்தை காட்டியும், கதாநாயகனுக்கு சுந்தர் 'ராமசாமி' என்ற பெயரை வைத்திருந்தும், அந்த ஈவேராவின் அரசியல் சித்தாந்தத்தை மையப்படுத்திய 50 ஆண்டுகால திராவிட அரசியலின் மற்றொரு முகத்தை கிழித்திருக்கும் துணிச்சலுக்கு பாராட்டுகள்!மற்றபடி இந்த படம் அனைவருக்கும் பிடிக்குமா? பிடிக்காதா? என்பதை பற்றியெல்லாம் யோசிக்கவே தேவையில்லை. நம்மை சுற்றியுள்ள ஓட்டரசியலை யார் தான் பேசுவது? என்ற பூனைக்கு மணி கட்டிருக்கின்றனர். அன்று விஜய் சொன்னது போல, உண்மையாவே அரசியலில் மெர்சல் செய்திருக்கின்றனர். உள்ளூர் அரசியலுக்குள்ளும் உலகரசியலின் பங்கு இருப்பதை புரிந்து கொண்டவர்களுக்கு சர்க்காரின் தேவையும் புரியக்கூடும். ரசிகனாக, தமிழனாக, வாக்காளனாக, இந்த சர்க்கார் எனக்கு தனிப்பட்ட முறையில் பிடித்திருக்கிறது.

- இரா.ச. இமலாதித்தன்
0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment