06 நவம்பர் 2018

ஆய்வு நோக்கில் தீபாவளி திருவிழா!


 தீபாவளி எதற்காக கொண்டாடப்படுகிறது? எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது? நரகாசுரன் யார்? அவரை கொன்றது கிருஷ்ணனா? எங்கே, எப்போது, எப்படி கொன்றார்? அப்படியெனில், தீபாவளி என்பது வைணவ பண்டிகையா? அந்த நரகாசுரன், மக்களையெல்லாம் கொடுமை செய்த கொடூர அசுரனா? இப்படி நிறைய கேள்விகள் இருக்கின்றன; கேள்விகள் மட்டுமே இருக்கின்றன; உண்மையான பதில்கள், உண்மையாகவே யாரிடமும் இல்லை. பெரும்பாலும் வெறும் யூகங்களே.

நாடெங்கும் பொதுவாக கொண்டாடப்படும் இந்த தீபாவளி என்ற ஆரிய பெருவிழாவை பெரும்பான்மையானோர் கொண்டாடி வருகின்றனர். என்ன காரணம்? எதனால் இந்த பண்டிகை வருடம் தோறும் கொண்டாடி வருகிறோம்? என்பதை பற்றிய தெளிவெல்லாம் அவர்களிடம் துளியுமில்லை. ஆரிய பார்ப்பனர்களின் புனைவு புராணங்கள் என்ன சொல்லி இருக்கிறதோ அதை அப்படியே நம்பும் கூட்டமாகி மாறிப்போனவர்களிடம் எதிர்பார்க்கவும் முடியாது.

இந்த நரகாசுரன் யார் என்பதைப் பற்றி தெளிவாக சொல்ல வேண்டுமெனில், அவர் தான் ஜைன மதத்தின் 24வது தீர்த்தங்கரரான மகாவீரர். இவர் காலத்தில் தான் ஜைனம் நாடெங்கிலும் தழைத்தோங்கியது. இம்மாதிரியான ஐப்பசி மறைநிலவு நாளில் தான் மரணமடைகிறார். அவரது மார்க்கத்தை பின்பற்றியவர்களெல்லாம் ஆண்டு தோறும் அவர் இறந்த நாளன்று, தீப ஒளி விளக்குகள் வைத்து வழிபட்டனர். மகாவீரரின் மறைவிற்கு பிறகு ஜைனம் வீழ்ச்சியடைய சைவம் வைணவம் உள்ளிட்ட ஹிந்து மதம் கோலோச்ச தொடங்கியது.

அந்த காலகட்டத்தில் ஜைனத்திலிருந்து ஹிந்துவாக மடை மாற்றப்பட்டவர்கள், மகாவீரரின் இறந்த நாளை ஆண்டுதோறும் கடைபிடித்து வந்தனர். அதை தனக்கு சாதகமாக்கி கொள்ள அந்த நாள்தான் தீபாவளி திருநாள் என்றும், அந்த மகாவீரரின் இழப்பை தான் நரகாசுரன் வதமென்றும் சொல்லி வைணவ கிருஷ்ணரை முன்னிலைப்படுத்தினர். பீகார் மாநிலத்து பண்டிகையாக இருந்திருக்க வேண்டிய ஒன்றை, ஒட்டுமொத்த நாட்டின் பண்டிகையாக்கிய பெருமை ஆரிய புராணக்கதைகளுக்கே சேரும்.

பீகாரை சேர்ந்த ஜைன மதத்தின் 24வது தீர்த்தங்கரரின் இறப்பினால் ஹிந்து மதம் வளர்ச்சியடைந்தது; அதனால் அந்த மகாவீரரை நரகாசுரன் என சொல்லி ஆரியர்கள் விழா எடுப்பதில் கூட நியாயம் இருக்கிறது. ஆனால், இங்குள்ள பகுத்தறிவு பேசும் திராவிடவாதிகள் போட்டி விழாவென சொல்லி ஆரியர்களுக்கு போட்டியாக இந்த நரகாசுரன் விழாவை கொண்டாடுகிறார்கள். நரகாசுரன் என்பவர் எங்கு வாழ்ந்தார்? எங்கே ஆட்சி செய்தார்? யாரோடு போர் புரிந்தார்? என்பது போன்ற அடிப்படை சான்று ஒன்றுகூட கிடையாது. மேலும் அந்த நரகாசுரன் யார் என்பதற்கான சான்றும் கிடையாது. அந்த போலி புராணத்தின் கற்பனை பாத்திரப்பெயருக்கு மாவீரர் /மாமன்னர் / பெரும்பாட்டன் என்ற முன்னொட்டுகள் கொடுத்து விழா எடுப்பது தான் பகுத்தறிவா? இதுதான் மாற்று புரட்சியா? இதுபோன்ற விசயங்களில் ஆரியம், திராவிடம், தமிழ்தேசியம் என அனைத்து அரசியலும் ஒரே நேர் கோட்டில் நிற்பது ஏன்?

(தொடரும்...)

ஏற்கனவே சென்ற பதிவில் சொன்னது போலவே வட இந்தியாவெங்கும் நவம்பர் ஏழாம் தேதி தான் தீபாவளி பண்டிகை ஆகும்; ஆனால் தென்னிந்தியா முழுவதும் நவம்பர் ஆறாம் தேதியே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவெனில், முன்பெல்லாம் ஒட்டுமொத்த நாடெங்கும் அம்மாவாசையும் தீபாவளியும் ஒரே நாளில் வந்து கொண்டிருந்தது. ஒரு சில ஆண்டுகளாக தென்னிந்தியாவில் மட்டும் இதில் வேறுபாடு தெரிகிறது. இப்போதெல்லாம் தீபாவளிக்கு அடுத்த நாள்தான் தென்னிந்தியாவிற்கு அமாவாசை வருகிறது; வட இந்திய நாட்காடியிடன் படி இந்த மாதம் கார்த்திகை; நமக்கோ ஐப்பசி மாதம்.

பொதுவாக ஓர் ஆண்டுக்கான நாட்களை கணக்கிட வேண்டுமெனில், நிலவின் அடிப்படையில் கணிப்பதே சரியானதாக இருக்கும். ஆண்டின் எல்லா நாட்களிலும் சூரியன் எப்போதுமே உதித்துக் கொண்டே தான் இருக்கிறது. அதை வைத்து ஓராண்டின் நாட்களை கணக்கிட முடியாது. ஆனால், ஓராண்டிற்கு எத்தனை நாட்கள்? எத்தனை மாதங்கள்? என்பதை நிலவின் அடிப்படையிலேயே துல்லியமாக கணிக்க முடியும். மறைநிலவு, முழுநிலவு (அமாவாசை / பவுர்ணமி) என்பதை வைத்துதான் பனிரெண்டு மாதங்களிலும் முழுநிலவு/மறைநிலவு நிறைவேறுவதாக கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். இந்த அடிப்படையில் பார்த்தால் ஓராண்டிற்கு 360 நாட்கள் வரலாம்; அதில் ஓரிரு நாட்கள் கூடுதலாகவோ குறைவானதாகவோ இருக்கலாமே தவிர 99% 360 நாட்கள் என்பது சரியானதாகவே இருக்கும்.

நாம் பயன்படுத்தும் ஆங்கில நாட்காட்டியின் படி, ஓராண்டிற்கு 365 நாட்கள்; அதிலும் நான்கு வருடத்திற்கு ஒரு முறையாக லீப் ஆண்டு என சொல்லி 366 நாட்கள் வருகிறது. குழப்பமான ஆங்கில நாட்காட்டியின் படி கணக்கிடப்படுகிற 366 நாட்கள் என்பதையும், 365 நாட்கள் என்பதையும், ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஒரு மாதம் என்பது சராசரியாக 30 நாட்களே இருக்க வேண்டும்; அதுதான் சரியானதாகவும் இருக்கும். அப்படி பார்த்தால், நாம் பின்பற்றும் ஆங்கில நாட்காட்டி முறையே குழப்பமானது தான்.

மேலும் இந்த தீபாவளி விசயத்தில், இன்று நவம்பர் 6ம் தேதியை சிறிய தீபாவளி என்றும், நவம்பர் 7ஆம் தேதியை (கார்த்திகை அமாவாசை) வடஹிந்தியர்கள் பெருந்தீபாவளியாகவும் கொண்டாடிகின்றனர். ஆனால் தென்னிந்திய மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்திற்கு நவம்பர் ஆறாம் தேதியே தீபாவளி வந்துவிடுகிறது; குறிப்பாக அமாவாசைக்கு முதல் நாளே தீபாவளி வந்துவிடுகிறது. இங்குதான் குழப்பமே மற்றபடி இந்த தீபாவளி என்பது மகாவீரரின் நினைவு நாள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஒருவேளை, மகாவீரருக்கு முன்பு இங்கு தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதாக சான்று இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம்; அப்படி இருப்பதாக தெரியவில்லை. தீபாவளி என்பது அறுவடைத் திருநாள் என்றும், ராஜேந்திரனின் போர் வெற்றித்திருநாள் என்றும், இங்கு சொல்லப்படும் எதுவுமே சான்றுகள் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.

தமிழ்நாட்காட்டியென நம்பப்படும் ஐப்பசி மாத அமாவாசையில் தான், ஜைன மதத்தின் 24வது தீர்த்தங்கராரன மகாவீரர் உயிர்நீத்தார்; அதன் நினைவாகவே ஆண்டுதோறும் இந்த அமாவாசை நாளில் விளக்கேற்றி அசைவம் தவிர்த்து இந்த தீபாவளி பண்டிகையை பெரும்பான்மையானோர் கொண்டாடுகின்றனர். மேலும் ஜைன நாட்காட்டி படி, ஜைனர்களுக்கு மகாவீரரின் நினைவு நாளான அமாவாசையிலிருந்து அடுத்த நாளே அவர்களது ஜைன புத்தாண்டும் தொடங்குகிறது.

மேலும் மகாவீரர் இறந்த பின்னாட்களில், ஜைனம் ஒடுக்கப்பட்டு மீண்டும் வைதீக ஹிந்து மதம் தலையெடுக்கும் போது ஜைனத்திலிருந்து வைதீக ஹிந்து மதத்திற்கு மதம் மாற்றப்பட்டவர்கள் இந்த தீபாவளியை ஆண்டுதோறும் கொண்டாடி வந்தனர். அதுபோல ஜைனம் தழைத்தோங்கிய காலத்தில் வைதீக ஹிந்து மதத்திற்கு மகாவீரர் பெரும் தலைவலியாக இருந்திருக்கிறார்; எனவே அவரது மரணத்தை ஒட்டுமொத்த வைதீக ஹிந்துக்களுமே பெருவிழாவாக எடுத்து கொண்டாடி இருக்கலாம். அதன் நீட்சியே நரகாசுரன் என்ற புராண கட்டுக்கதை.

- இரா.ச. இமலாதித்தன்

பி.கு: இந்த பதிவுக்கு கீழே நிறைய படங்களை இணைத்திருக்கிறேன். இந்த பதிவுக்கு பின்புல தொடர்பான செய்திகளை இந்த படங்களின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

#ஜைனம் #தீபாவளி #மகாவீரர் #நாட்காட்டி #அசைவம்


 



























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக