ஐவராட்டம் - விமர்சனம்!சிவகங்கையும், ஐவர் ஆடும் கால்பந்தாட்டமும் தான் கதைக்களம். சீனியர் - ஜூனியர் விளையாட்டு வீரர்களுக்கிடையில் ஊருக்கு பொதுவான கால்பந்தாட்ட மைதானத்தை யார் பயன்படுத்துவது என்பதற்கான ஈகோவுடன் கூடிய போட்டி, இரு அணிகளுக்கு இடையே பந்தயமாகிறது. இரு அணிகளுக்கு இடையேயான பந்தயத்தில் தோற்பவர்கள் அந்த மைதானத்தை பயன்படுத்த கூடாது என்ற இலக்குடன் களமிறுங்கி, கடைசியில் ஜூனியர் அணி தோல்வியை தழுவுகிறது.

மாவட்ட அளவிலான பந்தயத்தில் கடந்த இரு வருடங்களாக கோப்பையை சீனியர் அணியே கைப்பற்றிய நிலையில், அந்த வெற்றிக்கு காரணமான பயிற்சாளர் ஜெயபிரகாஷின் இரண்டாவது தம்பி வேற்று சாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் வீட்டை விட்டு புறக்கணிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக வேறொரு பயிற்சியாளரை வைத்து களம் காண்கிறது ஜெயபிரகாஷுடைய முதல் தம்பியின் சீனியர் அணி. மற்றொரு அணியான ஜூனியர் அணிக்கு தானாக முன் வந்து பயிற்சி அளிக்கிறார் மாஜி பயிற்சியாளர். ஜூனியர் - சீனியர் என்ற அண்ணன் தம்பிகளுக்குள் நடக்கும் ஆட்டத்தில் வெற்றி யாருக்கு என்பது தான் படத்தின் க்ளைமேக்ஸ். படத்தில் காதலுக்கும் பஞ்சமில்லை. மெல்லிய இழை போல காதலும் ஐவராட்டத்தில் நம் மனதை ஆட்கொள்கிறது. ஹிரோயின் நித்யா ஷெட்டி அப்படியே பார்ப்பதற்கு, சுப்ரமணியபுரம் ஹிரோயின் சுவாதி போலவே இருக்கிறார். படத்தில் காதல் மட்டுமல்ல, நித்யாவும் அழகு தான்.

ஐவராட்டத்தில் ’பசங்க’ சிவக்குமாரின் இரு மகன்களாக, ஜெயப்ரகாஷின் உண்மையான இரு மகன்களும் (நிரஞ்சன், துஷ்யந்த்) நடித்துள்ளனர் என்பது சிறப்பம்சம். ஐவராட்டம் என்பது ஐவர் கால் பந்தாட்டம் மட்டுமின்றி, ஜெயப்ரகாஷ் மற்றும் அவரது இரு தம்பிகள் அடுத்து ஜெயப்ரகாஷின் நிஜ மகன்கள் இருவர் உள்ளிட்ட இந்த ஐவரின் ஆட்டம் தான் இந்த படமே. முதல்பாதி மிக விரைவாக முடிவடைவதை இடைவேளை வரும்போது தான் புரிந்து கொள்ள முடிகிறது. இரண்டாம் பாதி கால்பந்தாட்ட போட்டிகளுக்குள், சென்னை 600028 போல தீவிரமாக பயணித்து படமும் வேகமாக க்ளைமேக்ஸை நெருங்குகிறது. படத்தில் காமெடிக்கு பஞ்சமில்லை. சுசீந்தரனின் முதல் படமான 'வெண்ணிலா கபாடி குழு' மாதிரியாகவும், வெங்கட்பிரவுவின் முதல் படமான 'சென்னை 600028' மாதிரியும், மிதுன் மாணிக்கத்தின் முதல் படமான 'ஐவராட்டமும்' விளையாட்டை மையப்படுத்தி பட்டையை கிளப்புகிறது. விளையாட்டோடு குடும்பம், காதல், காமெடி, செண்டிமெண்ட், ஆக்சன், போட்டி, பொறாமை என்ற பல கூறுகளும் திரைக்கதையில் பக்காவாக பொருந்தியுள்ளது. சுசீந்திரன், வெங்கட்பிரபு வரிசையில் கண்டிப்பாக மிதுன்மாணிக்கதிற்கும் தமிழ் சினிமாவில் நிச்சயமொரு இடம் உண்டு என்பதை தியேட்டர் விட்டு வெளியேறும் போது மனதில் ஓடியது.

வீரமங்கை வேலுநாச்சியார் ஆண்ட மண்ணில் நடைபெறும் கால்பந்தாட்ட போட்டிக்கு வருகை தரும் ஆண்டியப்பன் சேர்வையை வரவேற்கும் வர்ணனையின் போது, ஆண்டியப்பன் சேர்வையாகவே ஜெயப்ரகாஷ் கணகச்சிதமாக பொருந்திருக்கிறார். ”சொல்றவன் இல்ல; செய்றவன் தான் சேர்வை!” என வசனங்களிலும், நடை உடை பாவனைகளிலும் ஊர் பெரியவராகவே மிடுக்காக வாழ்ந்திருக்கிறார் ஜே.பி. படத்தின் டைட்டில் போடுவதற்கு முன்பாக புறநானாறு பாடல் வரிகள் வரும், கூடவே இரு தடவை மாமன்னர் மருது பாண்டியர்களின் படமும் வரும். அடுத்து டைட்டில் பாடலில், ”சொன்ன சொல்ல வாழ வைக்கும் தேவரோட பூமி; முத்துராமலிங்கம் தான்டா எங்க குலசாமி!” என தெக்கத்தி கதைக்களம் தான் ஐவராட்டம் என்பதை ஆரம்பத்திலேயே சொல்லாமல் சொல்லிவிடுகிறார் அறிமுக இயக்கனர் மிதுன் மாணிக்கம்.

சாதி மாறி காதல் செய்வதால் குடும்பத்தை விட்டு புறக்கணிப்படுவதை உணர்த்தும் வசனம், அனைவரையும் புருவம் உயர்த்த வைக்கிறது. ”குழந்தைக்கிட்ட சாதிவெறியை காட்டாதீங்க. புடிச்சிருந்தது காதலிச்சேன். அவளும் மனுசிதான்!”ன்னு சொல்லிருக்கும் இயக்குனர் மிதுன் மாணிக்கத்தின் நேர்மையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. ஐவராட்டம் இரு வேறு குடும்பத்திலுள்ள அண்ணன் தம்பிகளுக்குள் நடக்கும் பாச போராட்டம். கண்டிப்பாக எந்தவித வன்முறை காட்சிகளும், துளி ஆபாசமும், சாதி துவேசமும் இல்லாத ஓர் நல்லப்படம் ’ஐவராட்டம்’. கண்டிப்பாக குழந்தைகளோடு, குடும்பத்தோடு, நண்பர்களோடு பார்க்கலாம். ஐவராட்டம் - தமிழ் சினிமாவின் ஆரவாரமில்லா ஆர்பாட்டம்!

- இரா.ச.இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment