நிலம் கையக்கபடுத்துதல் மசோதா!

நிலம் கையகப்படுத்துதல் சட்ட மசோதா மக்களவையில் ஒருவழியாக நிறைவேறியுள்ளது. பா.ஜ.க.வோடு மத்தியிலும் மாநிலத்திலும் கூட்டணியிலுள்ள சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் எதிர்க்கும் வேளையில் ”மோடியா? லேடியா?” என பிரதமர் வேட்பாளராக களமிறங்கிய ஜெயலலிதாவின் அ.இ.அ.தி.மு.க. கட்சியானது, இந்த மசோதாவிற்கு முழு மனதாக ஏன் ஆதரவு தெரிவித்துள்ளது? மேலும், காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், தெலங்கானா ராஷ்டிர சமிதி என பல கட்சிகள் இந்த மசோதவிற்கு எதிராக செயல்படும் போது, காங்கிரஸ் - பா.ஜ.க. அல்லாத மூன்றாவது அணியை அமைப்போம் என்று சொல்லிக்கொண்ட அ.இ.அ.தி.மு.க., விவசாய நிலங்களை கேட்பாரற்று கைப்பற்றும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள நிலம் கையகப்படுத்துதல் சட்ட மசோதாவிற்கு ஏன் ஆதரவளிக்கிறது? 

அடிப்படை அறிவே இல்லாமல் தலைமை எது செய்தாலும் அதை ஆதரித்து துதி பாடும் அரசியலடிமைகளுக்கும் இதை பற்றி கவலையே இல்லை. கேட்டால், காவிரித்தாயேன்னு காலில் விழுவார்கள். காவிரியோ, பெரியாரோ, கிருஷ்ணாவோ எந்த நதி நீர் வந்தாலும், அதை வைத்து விவசாயம் செய்ய கொஞ்சம் நிலமும் வேண்டும் விவசாயிக்கு. அதை இங்கு யாரும் புரிந்து கொண்ட மாதிரியே தெரியவில்லை. ஏற்கனவே ”டவுனுக்கு மிக மிக அருகில்” என விவசாய விளைநிலங்களையெல்லாம் விலை வைத்து விலைநிலங்களாக மாற்றி விற்றுக்கொண்டிருக்கும் ரியல் எஸ்டேட் காரர்களை தட்டிக்கேட்கவும் ஆளில்லை. இதுபோக, பூமியின் சொத்தான குடிக்கிற தண்ணீரையே பாட்டில்களில் விலைக்கு வாங்கி பழக்கப்பட்ட சமூகத்திற்கு இதைப்பற்றியெல்லாம் அக்கறையோ - கவலையோ வரப்போவதில்லை.

- இரா.ச.இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment