காவிரியும் தமிழனும்!

காவிரிக்காக, கன்னடமே தீப்பற்றி எரிகிறது; இங்கே, ஜெயலலிதா காலில் விழுந்து கிடப்பதை தவிர வேறவொன்றுமே சாதிக்காத, சாதி தலைவனெல்லாம் இப்போதே அக்டோபர் மாத அலப்பறைகளுக்காக அடி போட்டு கொண்டிருக்கின்றான். கல்லணையை கட்டிய கரிகாலன் பிறப்பெடுத்த இரும்புத்தலை மண்ணோ, இன்று துருபிடித்து கிடக்கிறது; பசும்பொன்னை தவிர வேறெந்த அரசியலும் தெரியாத செம்மறியாட்டு கூட்டத்தில், சாதி தலைவர்கள் ஊருக்கு ஒருத்தர் உண்டு; ஆனால், சாதிக்கத்தான் சங்கம் வளர்த்த இந்த தமிழ் நானிலத்தில் ஓர் ஆளில்லை.

கன்னட வெறியர்களிடம் அடிவாங்கியது அந்தவோர் அப்பாவி தமிழ் இளைஞன் மட்டுமல்ல; ஜெயலலிதா போன்ற தமிழரல்லாதவர்களை, வெறும் 200 ரூபாய்க்காக ஆட்சியில் அமர வைத்த ஒட்டுமொத்த தமிழ்நாட்டு காரனுக்குமான அடிதான் அது... இந்த மாதிரியான விசயத்துக்கெல்லாம் காந்திய வழியை விட, நேதாஜிய வழி தான் சரியாக இருக்கும். ஆனால், இங்கே நேதாஜியை ஆதரிக்கிற ஆட்கள் கூட, சீமானை எதிர்க்கிறார்கள்; அப்பறம் எப்படி மாற்றம் நிகழும்? யாராலும் விமர்சிக்கப்படாத ஓர் அரசியல்வாதி இதுவரையிலும் உண்டா? சீமானும் அரசியல்வாதிதான்; ஆனால் சீமான் கையிலெடுத்த அரசியல் தமிழனுக்கானது. அதை நாம் ஆதரிக்க வேண்டும்.

சீமானை குறை சொல்லும் எந்தவொரு யோக்கிய சிகாமணிகளும் தமிழ் தேசிய அரசியலை பேச மாட்டார்கள்; ஆனால், தமிழ் தேசிய ஆட்சிக்கு விதை போடும் சீமான் போன்றவர்களையும், 'விமர்சனம்' என்ற பெயரில், 'தமிழர்' என்ற பதத்தை 'டம்ளர்' என்று இழிவுபடுத்தி மல்லாக்க படுத்துக்கொண்டு மார்பில் துப்பில் கொள்வார்கள். இதுதான் தமிழர்களின் இன எழுச்சி அரசியல் தோல்விக்கான அடிப்படை. காவிரி, பெரியாறு, கிருஷ்ணா போன்ற நதிநீர் பிரச்சனைகளுக்கெல்லாம் நிரந்தர தீர்வு காண, தமிழ்நாட்டில் தமிழுணர்வுள்ள தமிழர் ஆட்சி நிறுவினால மட்டுமே சாத்தியம். இப்போது இருப்பது போல தமிழ்நாடு என்பது பெயரளவில் மட்டுமில்லாமல், தமிழர்களுக்காக தமிழர்களே ஆளும் நாடாக மாறும் போதுதான், இதுபோன்ற இனவாத பிரச்சனைகள் முற்றிலுமாக களையப்படும். அதுவரையிலும் 'பாரத் மாதாகி ஜே!' என சொல்லிக்கொண்டு இன உணர்வற்ற ஹிந்தியனாய் வாழ்வதென்பது, நம்மை நாமே ஏமாற்றி கொள்ளும் தற்கொலைக்கு சமமானது.

- இரா.ச. இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment