சமூக ஊடகங்களால் நினைவூட்டப்படும், பிறந்தநாள் தேதி!

ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் இல்லையென்றால் என் போன்ற பலரின் பிறந்தநாளெல்லாம் குறிப்பிட்ட ஒருசிலரை தவிர எல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. முதலில் நம்மை இணைத்த இணையத்திற்கு நன்றி! ஒருமுறை இப்படித்தான் சகோ. சக்தி கணேஷின் பிறந்தநாள் தவறுதலான தேதி பதியப்பட்டிருந்ததால் அதையே அவரது பிறந்த தேதி என நம்பி, பலரும் வாழ்த்து சொல்லிக்கொண்டிருந்தனர். வேற வழியில்லாமல், இல்லாத பிறந்த நாளுக்காக நன்றியையும் சகோ.சக்தி சொன்னார். என் விசயத்தில், இந்த வருட பிறந்த நாளுக்காக 20ம் தேதியே, "போராளிக்கு வாழ்த்துகள்!" என அண்ணன் கடிநெல்வயல் செந்தில் அவர்கள் முதல் வாழ்த்தை முதல் நாளே தொடங்கி வைத்திருந்தார்.

தொடர்ச்சியாக மூன்று நாட்கள், பங்காளி, அண்ணா, தம்பி, தோழர், நண்பா, சார், மகனே, மச்சி, மாப்ள, சகோ, பங்கு, ப்ரோ, சகோதரா, போராளி, தங்கமே, தலைவா, ஜி, இமல், இமலா, பாலாஜி, இமலாதித்தன் என பல்வேறு உறவு முறைகளோடு வாழ்த்துகளை சொன்ன அனைவரது வார்த்தைகளாலும் மகிழ்ச்சியடைந்தேன். அண்ணன் நாச்சிக்குளம் சரவணன், சகோ சத்தியேந்திரன், பங்காளி உதயகுமார், தம்பி விமல் போன்றோரின் போட்டோஷாப் வாழ்த்துகளும், பங்காளிகள் சிவக்குமார் சேர்வை, மருது பரணி மற்றும் தம்பி சேகர் சேர்வை போன்றோர் அவர்களது முகப்பு படமாக என் படத்தை வைத்திருந்ததும், சகோ சக்தி கணேஷ் அவர்கள் 'அகமுடையார் ஒற்றுமை' தளத்தில் (21ம் தேதியை 20ம் தேதியாக முன்கூட்டியே) வாழ்த்துகள் சொல்லிருந்த விதமும் மகிழ்ச்சியாக இருந்தது.

தமிழர்களின் வாழ்வியல் கணக்கீட்டின் படி ஒரு நாளின் தொடக்கம் என்பது சூரிய உதயத்திற்கு பிறகுதான். தோராயமாக காலை 6 மணிக்கு தான் ஒரு நாள் தொடங்குகிறது. ஏசு பிறந்ததை மையமாக கொண்ட கிரிகோரியன் நாட்காட்டியை பயன்படுத்தி அரை ஆங்கிலேயனாக்கப்பட்ட நாமும், பண்டைய தமிழர் பகுத்த சிறுபொழுதான (10PM - 2AM) யாமம் என்ற பொழுதிற்குட்பட்ட 12 மணிக்கே ஒரு நாள் தொடங்கி விட்டதாக தவறான கணிப்பிலேயே காலத்தை கடத்தி கொண்டிருக்கிறோம். 20ம் தேதி இரவு 12 மணிக்கே தொடர்புகொண்டு வாழ்த்திய சகோ வாரப்பூர் கார்த்தி, தோழன் சோழன், நண்பன் சிவநேசன் உள்ளிட்ட பலருக்கும் நன்றியை மட்டுமே சொல்லிக்கொண்டேன். எல்லாருமே ஒரு சின்ன அங்கீகாரத்திற்கு தானே ஓடிக்கொண்டிருக்கின்றோம். நாம் வேண்டாமென்று சொன்னாலும், புகழ் என்ற மூன்றெழுத்து போதைக்கு அனைவருமே அடிமை தான் எனும்போது, நான் மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்? குடி பழக்கம் இல்லாத போதும், பலரது வாழ்த்துகளால் நானும் போதைக்கு உட்பட்டிருந்தேன் என்பது உண்மை தான்.

இந்த மாதிரியான வெறும் வாழ்த்துகளால் ஒன்றும் ஆகிட போவதில்லை என்பது தெரிந்த விசயம் தான். ஆனாலும் இதே முகநூலில் கடந்த ஏழு வருடங்களில் எத்தனையோ விமர்சனங்களாலும், அவதூறுகளாலும், வயது வித்தியாசமின்றி யாரென்றே தெரியாத என்னைவிட சின்னஞ்சிறு சிறுவர்களாலும் ஒருமையிலும் தூற்றப்பட்டிருக்கிறேன்; அப்போதும் கொஞ்சம் வருத்தப்பட்டிருக்கிறேன். ஆனாலும் என் செயல்பாட்டு பாதையை மாற்றிக்கொள்ளவில்லை. ஒரு பெரிய களோபரத்தின் போது அமைதியாக மெளனித்திருக்கும் போது, நரிக்குடியை சேர்ந்த தம்பி சுந்தரபாண்டியன் அவரது பதிவுகளால் என் மெளனத்தை கலைத்தார். இப்போதும் கூட நீண்ட பதிவில் சுந்தர பாண்டியன் எனக்கான வாழ்த்துகளை அவர் சொல்லிருந்தார். நானும் அவரை என் உடன்பிறவா தம்பியாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்பதில் கூட அவருக்கும் சந்தேகம் இருக்கிறது போல.

2008லிருந்து இந்த முகநூலில் பல அவமானங்களை சந்தித்திருக்கின்றேன். நான் சார்ந்த அகமுடையார் சமுதாயத்திற்காக எழுதிய வெறும் எழுத்துகளுக்காக, கள்ளர் மறவர் உள்ளிட்ட பல மாற்று சாதியினரால் பலமுறை விமர்சனத்திற்கு உட்பட்டிருக்கிறேன். இத்தனை வருடங்களில் பல குழுக்களோடு பயணித்திருக்கின்றேன்; ஒவ்வொரு குழுக்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கொஞ்ச நாட்களிலேயே செயல்பாட்டோடு இருந்த பலரும் காணாமல் போயிருக்கின்றனர். ஆனாலும் இன்னுமும் நான் மட்டும் அதே உயிர்ப்போடு இயங்கி கொண்டிருக்கிறேன் என்பது மட்டுமே ஒரே ஆறுதல் எனக்கு. பேராசிரியர் அசோக் அண்ணன் போன்ற நான் மதிக்கும் மூத்தோர் பலரும் என்னை பல வார்த்தைகளால் பேரன்போடு வாழ்த்திருந்தனர். அதிலும் குறிப்பாக 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்!' என்பது போல... முனைவர் திரு. அரப்பா சார் அவர்களின் வாழ்த்துகளாலும் அவர் என்மீது வைத்திருந்த நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளை கீழே கொடுத்திருக்கிறேன்.

/தம்பி இமலாதித்தன்...

நாகபட்டிணத்திலிருந்து புறப்பட்டிருக்கும்
சமுதாய ஆய்வாளன்..

எதையும் சிந்தித்து
சமூகநலனை முன்னிறுத்தி
முகநூலில் தன் பக்கப்பதிவினை
செப்பனிடுபவன்...

சந்திப்பின்போதெல்லாம்
சமுதாய ஆய்வுகுறித்தே அதிக
நேரத்தை ஒதுக்கச்செய்பவன்..

இவன் பதிவுகள் வரலாற்று ரீதியாக
ஆதாரப்பூர்வமானவை என்பதால்
பகிர்வுகள் அதிகம் இருக்கும்.

சொல்லும் பொருளை எளிதில்
புரிந்துகொண்டு துணிச்சலுடன்
எதிர்கொள்ளும் திறனுடன்
சமூகப்பதிவு செய்பவன்..

இவனைப்போன்ற தம்பிகள்
10பேர் இருந்தால்
எம் சமூக மாற்றத்தைச் செய்து முடிப்பேன்
என்று அண்ணா சொன்னது
இவனுக்குப்பொருந்தும் என்று
நினைப்பதுண்டு..

சமுதாயத்தைச்செப்பனிட
முடியாமல் போகும்போதெல்லாம்
இவன் முடிப்பான் என்ற தெம்பு வரும்..

இன்று இவன் பிறந்தநாள்..
வாழட்டும் பல்லாண்டு
நோயற்ற வாழ்வுபெற்று.../

இதற்கு மேல் வேற என்ன வேண்டும்? என்மீது அன்பு கொண்ட ஒரு சிலரோடாவது பயணிக்கிறேன் என்ற மன நிறைவை தந்த அனைவருக்கும் உறவுக்காரனாக நன்றி!

மகிழ்ச்சி.

- இரா.ச. இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment