முட்டாள்களாக்கப்படுவது வாக்காளர்கள் தான்!

சுவாதி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ராம்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் இதை சாப்பிட்டார்; அதை சாப்பிட்டார்; இரண்டு இட்லி சாப்பிட்டாரென ப்ளாஷ் நியூஷ்ல போட்டாய்ங்க. அதுல கூட ஒரு லாஜிக் இருந்துச்சு. ராம்குமார் சாப்பிட்ட அந்த எச்சில் தட்டை பார்த்தாவது குத்துமதிப்பா எதையாவது சொல்ல முடியும்.
ஆனால், மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா விசயத்தில், அவர் தங்கிருக்கு அந்த ப்ளாக் / வார்டு பக்கமே எட்டிப்பார்க்க முடியாது. குறைந்த பட்சம் அவர் சாப்பிட்ட எச்சில் தட்டை கூட பார்க்க முடியாத அடிமைகள் கூட்டம், 'ஜெயலலிதா இரண்டு இட்லி சாப்பிட்டார்!' என்று சொல்வதையெல்லாம் ஊடகங்கள் ப்ளாஷ் நியூஷில் போடும்போது தான், விஜயகாந்த் காரித்துப்பினது ஞாபகத்துக்கு வருகிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரின் தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டால், அந்த அரசின் நிர்வாகத்தை முதலமைச்சருக்கு மாற்றாக தலைமையேற்கும் இடத்தில் இருக்கும் மாநில மாண்புமிகு ஆளுநரே, வார்டு பக்கம் மட்டும் தான் போக முடிந்திருக்கிறது என்பதை கவனிக்கையில், 'அதிகாரம் மையம்' யார்? என்பதில் கூட குழப்பம் வருகிறது. ஒரு வார்டில் பல அறைகள் இருக்கும் என்பதால், குறிப்பிட்ட அந்த அறைக்கு போக முடிந்ததா? என்பதை பற்றி அந்த அறிக்கையில் சரியான விளக்கமும் ஒன்றுமில்லை என்பதாலும், இது முழுமையற்ற அறிக்கையாகவே தோன்றுகிறது.

பொன்.ராதாகிருஷ்ணன், திருநாவுக்கரசர் போன்ற தேசிய கட்சி தலைவர்களும், வைகோ, திருமாவளவன் போன்ற மாநில கட்சியின் தலைவர்களும், கம்யூனிஸ்ட்களும், இந்தளவுக்கு முட்டுகொடுப்பதை பார்க்கையில் குழப்பம் தான் வருகிறது. அதிமுகவை நேரடியாக எதிர்க்கும் திராணியுள்ள அரசியல் கட்சிகள் எதுவும் இப்போது இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. ஒருவழியாக, சசிகலா புஷ்பாவின் அதிரடியால் ஓ.பி.எஸ் மீண்டுமொரு நாகராஜசோழன் எம்.எல்.ஏ.வாக உருவெடுத்திருக்கிறார். இம்முறை நேரடியாகவே சசிகலா நடராஜனுக்கு கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதுதான் அவருக்குள்ள ஒரே சிக்கல். ஏனெனில் இனி நிழல் முதலமைச்சரே, சசிகலா நடராஜன் தான்.

நிர்வாக வசதிக்காக முதலமைச்சர் வகித்த அனைத்து துறை பொறுப்புகளையும் ஓ.பி.எஸ்.சிடம் கொடுத்திருப்பது தவறான முன்னுதாரணம். இந்த முடிவை எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் கூட வரவேற்றிருக்கிறார். நாளை ஆட்சிக்கட்டிலில் ஒருவேளை கருணாநிதி அமர்ந்தால் கூட, பெயருக்கு முதல்வராக அவருக்கு பதவியை கொடுத்துவிட்டு மற்ற பொறுப்புகளை ஸ்டாலினே கவனிக்கலாமென நினைத்திருக்க இதுவொரு முன்னோட்டமாக இருக்குமென நம்பியிருக்கலாம். அப்படியெனில், இனி முதலமைச்சர் என்ற பதவியே தேவையில்லையே? என்ற கேள்வி பாமரனுக்குள்ளும் எழத்தோன்றும்.

இலாகாக்கள் அற்ற முதலமைச்சர் ஆளும் மாநிலத்தை உருவாக்கியுள்ள பாஜகவின் ஆதரவுடன் கூடிய முயற்சியின் மூலம், சசிகலா நடராஜனிடம் இம்முறை சசிகலா புஷ்பா தோற்று போயிருக்கிறார் என்றே சொல்லலாம். ஆனாலும், இது தற்காலிக தோல்விதான். இனி தான் உண்மையான வெற்றி யாருக்கு என்பது புரியவரும். ஆனால், இத்தனை நாட்களாக முட்டாள்களாக்கப்படுவது என்னமோ அப்பாவி வாக்காளர்கள் தான்!

- இரா.ச. இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment