பாகுபலியின் தந்தை ரிஷபதேவர், அகம்படி நந்தி தேவர் ஓர் ஒப்பீடு!

அகம்படி தொழிலுக்கு சம்பந்தபட்ட அகமுடையார்களுக்கு, நந்தி தேவரே முழுமுதற் குருவாகவும் விளங்குகிறார். சைவ சமயத்தில் சிவனுக்கு பிறகாக நந்திதேவரே முன்னிறுத்தப் படுகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

”மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியைக்
கைத்தாள் கொண்டு ஆரும் திறந்து அறிவார் இல்லை
பொய்த்தாள் இடும்பையைப் போய் அற நீவிட்டு அங்கு
ஐத்தாள் திறக்கில் அரும் பேறது ஆமே” -திருமந்திரம்.

ஆதி வழிபாட்டு முறையான சமணத்தில் ஆதிநாதனுக்கு அடுத்த முதல் தீர்த்தங்கரர் ரிஷபதேவர் ஆவார். ரிஷபதேவர் தொடங்கி மஹாவீரர் வரைக்குமாக ஆகமொத்தம் சமணத்தில் 24 தீர்த்தங்கரர்கள் உண்டு. ரிஷபதேவர் போடன்பூர் என்ற நாட்டின் மன்னராக இருந்தார். ரிஷப தேவருக்கும், நந்தி தேவருக்கும் ஓப்பீட்டளவில் பெரிய தொடர்புண்டு. ரிஷபம்-நந்தி என்ற இரண்டுமே காளையைத்தான் குறியீடாக நமக்கு உணர்த்துகிறது.

சைவ மதத்திற்குட்பட்ட சிவன் கோவில்களில் வணங்கப்படும் காலபைரவர், சூரியன், சந்திரன் அனைத்துமே சமணத்திலிருந்து பின்பற்றப்பட நீட்சியே. இன்றைய நாட்டார் வழிபாடாக கிராமங்களில் திகழும் ஐயனார் உள்பட சமணக்கடவுள்களே. எங்கள் குலதெய்வம் கூட, நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்பலம் அருகிலுள்ள கடிநெல்வயல் கிராமத்தில் வீற்றிருக்கும் வேம்படையார் என்கிற வேம்படி ஐயனார் தான். இது போன்ற பல வழிபாட்டு முறைகளுக்கு ஆதியாக சமணமே இருந்துள்ளது சமணத்தின் மீதான ஆரிய கலப்பே ஹிந்து மதமாக மறு உருவாக்கம் பெற்றது என்பது என் கணிப்பு.

சமணத்தின் முதல் தீர்த்தங்கரரான ரிஷபதேவருக்கு நூறு புதல்வர்கள் என்பதும், அவர்களில் முதல் மகனது பெயர் பரதன், இரண்டாவது மகனின் பெயர் பாகுபலி என்பதும் பலருக்கும் தெரிந்திருக்கும். நம் நாட்டுக்கு பாரத நாடு, பாரதம் என பெயர் வரக்கூட இந்த ரிஷபதேவர் தான் ஒருவகையில் காரணமாகிறார்.

பாகுபலிக்கு கோமதீஸ்வரர் என்ற பெயரும் உண்டு, இதே பெயரில் மூலவராக உள்ள பல சிவன் கோவில்களும் இங்குண்டு. வரலாறு படி, ரிஷபதேவருக்கு பிறகு முடிசூடும் போர்க்கள போட்டியில் மூத்த இளவரசன் பரதன் தோற்க, இளையவர் பாகுபலி வெற்றி பெறுகிறார். அந்த தோல்வியால் மனமுடைந்த தன் அண்ணன் பரதனுக்காக ஆட்சியை விட்டுக்கொடுத்து துறவறம் மேற்கொள்வார் பாகுபாலி. இதேபோன்றதொரு காட்சியை சிலப்பதிகாரத்திலும் இளங்கோவடிகள் மூலமாக நாம் காணமுடியும்.

சமீபத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பாகுபலி படத்தில், பரதனின் பெயராக பல்லாள தேவன் என்ற பெயரையும் அவரது அப்பாவாக பிஜ்ஜால தேவன் என்ற பெயரையும் மாற்றி, பாகுபலியை தம்பி மகனாக சித்தரித்து இருக்கின்றனர் என்றாலும் கூட, அப்படிப்பட்ட சமண,சைவ மதம் உள்பட பாரதத்திற்கும் தொடர்புடைய பாகுபலி பற்றிய படமெடுத்து அதன் மூலம் இந்தளவுக்கு கோடிகணக்கில் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் அடித்திருக்கும் இயக்குனர் ராஜமெளலிக்கு எம் வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment