05 ஆகஸ்ட் 2017

நினைவுகளை மீட்டெடுக்கும் நட்பு பாலம்!






இது வடுகச்சேரிக்கும் இருக்கைக்கும் இடையிலான எல்லையிலிருக்கும் குதிரைசேவகனாற்று பாலம். நாகை மாவட்டத்திற்குட்பட்ட இரு சட்டமன்றத்தொகுதிகளின் எல்லை இது. ஒன்று கீழ்வேளூர், மற்றொன்று நாகப்பட்டினம். பள்ளி மற்றும் கல்லூரிக்காலங்களில் மனம் விட்டு பேசக்கூடிய நண்பர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. அந்த சிறு பட்டியலில் விஜயபாபுவும் ஒருவர். எங்களின் பள்ளிக்காலமான ஆறு முதல் பனிரெண்டு வரையும் மேலும் கல்லூரிக்காலங்களிலும் மாலை முதல் இரவு வரை இங்கேயே அமர்ந்திருந்து படத்துறங்கி பல கதைகள் பேசிருக்கிறோம். அரசியல் - சினிமா - விளையாட்டு - ஊர்க்கதை என பலவற்றை அலசிருக்கிறோம். மதிய நேரங்களிலெல்லாம் இப்போது வறண்டு கிடக்கும் இந்த ஆற்றில் அன்று துள்ளியோடும் நீரில் குளித்து கும்மாலமடித்திருக்கிறோம். நீச்சல் தெரிந்திருந்தும், ஒருமுறை ஆற்றுச்சுழலில் சிக்கி உயிர் பிழைத்திருக்கும் அச்சம்பவம் இன்னும் என் மனதினுள் உண்டு. எதிரிலேயே சுடுகாடு; கூடவே நம்மைப்போலவே கார்பன் டை ஆக்சடை அதிகம் வெளியேற்றும் ஆற்றோர தூங்குமூஞ்சி மரம் என சூழ்ந்திருக்கும் திறந்தவெளி விவாதமேடை இது.

பெரும்பாலான விடுமுறை நாட்களில் கிரிக்கெட்டும், சில சமயம் வாலிபாலும் விளையாடி விட்டு, எங்களின் இளைப்பாறும் இடம் இது. வேப்பங்குச்சியோடு, ஆற்றங்கரையோரம் காலைக்கடன் முடித்து விட்டு விடிகாலையிலும் சில நிமிடங்கள் அமர்ந்து போகுமிடம் இது. அதிகாலை நாளிதழ்களில் டீக்கடை பேப்பரென பெயர்பெற்ற தினத்தந்தி இருக்கை சுல்தானியா டீ கடைக்கு வரும் நேரம் மதியம் பனிரெண்டை தாண்டும். அப்போதும் கூட, ஒரு பக்கம் கூட விடாமல் பாரா பாராவாக புரட்டி எடுப்போம். கூடவே எதிரே இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வரும் தீக்கதிரையும் படித்து தீர்ப்போம். அங்கேயே சைக்கிள் கடை வைத்திருந்த போஸூன் தயவால் தேநீரும் படிப்பின் துணைக்கு வரும். மற்ற நேரமெல்லாம் பொழுது போகும் வரை, அரவணைத்த இந்த சேவகானாற்று பாலமும், தூங்கு மூஞ்சி மரமும் தான், எங்களைப்போன்ற பலருக்கும், எங்களை விட மூத்தோருக்கும் அன்றைய பிக்பாஸ் வீடு!

இன்று மதியம் ஆளில்லா அந்த இடத்தில் சில நிமிடங்கள் தனியே அமர்ந்துவிட்டு நினைவுக்கு சில படங்களையும் பிடித்து வந்தேன். ஆயிரம் இருந்தாலும் பள்ளி வாழ்க்கையின் போது கிடைத்த ஓய்வு நேரத்திற்கு இணையான ஓய்வு நாட்கள் இனி எப்போதும் கிடைக்க போவதில்லை. எப்போதுமே இருக்கும் போது, அதை சரிவர அனுபவிக்க தெரியறது இல்லை என்பதும் நம்மில் பலருக்கும் உள்ள குறைபாடு. ப்ச்...

- இரா.ச. இமலாதித்தன்

#Autograph #OldMemories

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக