பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரை அகமுடையார்கள் ஏன் கொண்டாடுகிறார்கள்?

அகமுடையார் இனக்குழுவினர் அனைவரும் இந்த பதிவை கண்டிப்பாக படித்து, மற்றவர்களுக்கும் பகிரவும்.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரை அகமுடையார்கள் ஏன் கொண்டாடுகிறார்கள்? இந்த கேள்வியை பல இடங்களில் பலதரபட்டோர் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். எதற்காக இந்த கேள்வியை கேட்கிறார்கள் என்று பார்த்தால் பல விசயங்களின் மூலம் இந்த கேள்வி சரியேயென படும். பொதுவாக பசும்பொன் தேவர் தன்னை சாதிய அடையாளத்தோடு காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் கூட, ஒரேவொரு முறை அவர் சார்ந்த ஆப்பநாடு மறவர் சங்க மாநாட்டு கூட்டத்தில் பங்கேற்று பேசியிருக்கிறார். இது மட்டுமே அவர் கலந்து கொண்ட சுயசாதி கூட்டமாக இருக்கின்றது. மேலும் எந்த இடத்திலும் தன்னை மறவரென சொல்லிக்கொள்ளாமல் சாதி கடந்து தேசிய அரசியலில் ஈடுபட்டவர். அப்படிப்பட்டவரையே மறவர் என்று பெருமை பேசும் சம்பவங்களும் இங்கே அரங்கேறி கொண்டுதான் வருகின்றன.

முக்குலத்தோர் என அடையாளப்படும் கள்ளர் - மறவர் - அகமுடையாரில், மறவர் உரிமை கொண்டு பசும்பொன் தேவரை கொண்டாட பல காரணங்கள் இருக்கின்றன. அதுபோலவே கள்ளர்களும் பசும்பொன் தேவரை கொண்டாட காரணம் உண்டு. ஆங்கிலேயரின் அடக்குறையால் தமிழகத்தில் குற்றப்பரம்பரை சட்டத்தை நிறுவி திட்டமிட்டே கள்ளர் உட்பட பலதரப்பட்ட இனக்குழுக்குளை அடக்கி ஒடுக்கினர். அந்த கைரேகை சட்டத்தை பல்வேறு வடிவங்களில் ஒவ்வொரு காலக்கட்டங்களில் எதிர்த்து கொண்டிருந்த போது, பசும்பொன் தேவரும் தன் பங்களிப்பை கொடுத்து அதற்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்வை கொண்டு வர பாடுபட்டார். கடைசியாக அந்த சட்டம் கைவிட பட்டது. ஏதோவொரு வகையில் உதவியிருக்கிறார் என்ற காரணத்திற்காகவே கள்ளர்களும் பசும்பொன் தேவரை கொண்டாடுகிறார்கள்.

இந்த இரண்டு இனக்குழுக்குளும் பசும்பொன் தேவரை கொண்டாட அழுத்தமான காரணங்கள் உண்டு. ஆனால் அகமுடையார்களும் இன்று பசும்பொன் தேவரை கொண்டாட என்ன காரணம் இருக்க முடியுமென ஆராய்ந்தால் நிச்சயமாக ஒன்றுமே இல்லை என்பது தான் பதிலாக கிடைக்கிறது. அகமுடையார்களுக்கு சேர்வை, முதலியார், உடையார், பிள்ளை என்ற பட்டங்கள் போலவே தேவர் என்ற பட்டமும் பெரும்பான்மையாக வழங்கப்பட்டு வருகிறது. அகமுடையார்களுக்கு தஞ்சை - திருவாரூர் - நாகப்பட்டினம் உள்ளடக்கிய டெல்டா பகுதியெங்கும் இந்த தேவர் பட்டமே இருக்கின்றது. இதுபோல கோவை, மதுரை, திருச்சியென தமிழகத்தின் பிற பகுதிகளிலும் தேவர் பட்டம் அகமுடையாருக்கு இருக்கின்றன. இந்த தேவர் பட்டம் இருக்கும் அகமுடையாரில் பெரும்பாலானோருக்கு பசும்பொன் தேவரை மறவரென தெரியவே இல்லை, மாறாக, பசும்பொன் தேவரை அகமுடையார் எனவே நம்பிக்கொண்டிருக்கும் நபர்களும் பலருண்டு. இதை நான் என் கண் கூடாகவே பார்த்து, கேட்டு ஆச்சரியப்பட்டிருக்கின்றேன்.

என் பெரிய தாத்தாவான அ.பக்கிரிசாமித்தேவர் கூட நேதாஜி படையில் இருந்தவர் தான். எங்கேயோ உள்ள சுபாஷ்சந்திரபோஸுக்கும், திருக்குவளை அருகிலுள்ள பக்கிரிசாமித்தேவருக்கும் என்ன தொடர்பு?யென யோசித்தால், சட்டென பசும்பொன் தேவரே நினைவுக்கு வருவார். அந்த காலம் தொட்டே பசும்பொன் தேவரை, அகமுடையாரென நம்பியிருந்ததை நம்மால் அறிய முடிகிறது. எந்த வகையிலும் அகமுடையாருக்கு ஆதரவாக இல்லாத பசும்பொன் தேவரை, இன்றைக்கு தலையில் வைத்து கொண்டாடி வருவதும் அதே அகமுடையார் இனக்குழு தான். டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் அகமுடையார் வீட்டு திருமணவிழா பதாகைகளில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் படம் இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக பசும்பொன் தேவர் படம் இருக்கும். அந்த அளவுக்கு பைக், கார் என எல்லா இடங்களிலும் அகமுடையாரோடு பசும்பொன் தேவரும் இருக்கின்றார் என்றால் அது அகமுடையாரின் அன்பை தான் வெளிப்படுத்துகிறது.

அப்படிப்பட்ட அகமுடையாரை வரலாறு எழுதுகிறேன் என்ற பெயரில் மருதுபாண்டியரையும், அகமுடையாரையும் ஓரம்கட்டிவிட்டு முக்குலத்தோர் என அறியப்படும் கள்ளர்-மறவர்-அகமுடையாரில் இருகுலத்தோர் மட்டும் செயல்படுவது வேதனையான விசயமே. ஆனாலும், அகமுடையாரை புறக்கணித்து விட்டு எந்த வரலாறையும் எழுதவும் முடியாது. இனி எந்த புது வரலாற்றையும் படைக்கவும் முடியாது. இது தான் எதார்த்தம். அகமுடையாருக்கு முக்குலம் தேவையில்லாமல் கூட வருங்காலத்தில் போகலாம். ஆனால் முக்குலம் என்ற குடைக்கு அகமுடையார் கண்டிப்பாக தேவை. ஏற்கனவே முக்குலமென்ற குடைக்குள் பல ஓட்டைகள் விழுந்து கொண்டிருக்கின்றன. அதை சரி செய்ய வக்கில்லாமல், அகமுடையாரை ஒதுக்கினால் முக்குலம் என்ற குடை கிழிந்து தொங்குவதை யாராலும் தடுக்க முடியாது. இன்னும் கூட வெளிப்படையாகவே சொல்கிறேன், எழுத்து என்ற ஆயுதத்தை முக்குலத்தோரில் அகமுடையார் மட்டுமே மிக வீரியமாக பயன்படுத்த முடியும். மற்ற இருவரை விட வரலாற்றை எழுத அதிகம் தகுதி படைத்தவர்கள் அகமுடையார்களே. அதற்கு பல உதாரணங்கள் உண்டு, இன்றைக்கு பசும்பொன் தேவரை பற்றிய வரலாற்று நூலாக பெரிதும் மதிக்கப்படும், "முடிசூடா மன்னர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்" என்ற நூலை எழுதியதே ஏ.ஆர்.பெருமாள் என்ற அகமுடையார் தான்!

உண்மை வரலாற்றை அகமுடையாரும் எழுத தொடங்கினால் முக்குலம் என்ற பலூன் உடைய தொடங்கும். அகமுடையாரை அனுசரித்து போகவில்லையென்றால், இழப்பு அனைவருக்கும் தான். ஏற்கனவே அரசியலிலும் சரி, பதவியிலும் சரி முக்குலத்தோர் என்ற அடிப்படையில் அகமுடையாருக்கு இழப்பு தான். அதனால் இனி ஏற்படும் எந்த இழப்பும் அகமுடையாருக்கும் பெரிய விசயமே இல்லை என்பதையும் மற்ற இருகுலத்தோரும் புரிந்து கொண்டால் சரி.

- இரா.ச.இமலாதித்தன்

Comments

Popular posts from this blog

சமுதாய வளர்ச்சியில் பெண்கல்வி

கிருஷ்ணசாமி சொல்வது போல சண்டியரும், கொம்பனும் தேவர் சாதியின் அடையாளமா?

நான் முதலில் அகமுடையார்; அதன்பிறகு தேவர்!