11 ஜூன் 2015

திருப்பதி திருமலை திருமுருகா!

புரட்டாசி சனிக்கிழமை பிறந்ததால், ’பாலாஜி’ன்னு தான் எனக்கு பேரு வச்சாங்க. நான் பிறந்த அன்னைக்கு் என் தாய்மாமன் திருப்பதி போய்ட்டு வந்தாரம். அதுனாலேயே வீட்லயும் சரி, சொந்தகாராய்ங்களுக்கும் சரி ’பாலாஜி’ன்னு சொன்னாதான் என்னை தெரியும். ஆனால் எங்கப்பா தான் கேட்டை நட்சத்திரத்துக்கு ’இ’ ல ஆரம்பிக்கிற பேரு தான் வைக்கணும்ன்னு சொல்லிட்டாங்க. அதுலயும் தமிழ் வரலாற்றை சேர்ந்த மன்னர் பெயராத்தான் வைக்கணும்ன்னு ’இளஞ்செழியன், இளமாறன், இளந்திரையன்’ன்னு இப்படி என்னன்னமோ யோசிச்சு கடைசியா, ராஜராஜசோழனின் ஒரே பெண்ணான குந்தவையை கட்டிக்கொடுத்த விமலாதித்தனின் பெயரின் முதலெழுத்தை மட்டும் மாற்றி, ’இமலாதித்தன்’ன்னு வச்சிட்டாங்க.
எதுக்கு இந்த பெயர் பற்றிய சுய புராணம்ன்னு கேட்குறீங்களா? பாலாஜின்னு பேரு வச்சதுல இருந்து இதுவரைக்கும் நான் அந்த பாலாஜியை திருப்பதில போய் பார்த்தது இல்ல. 20,30 தடவைக்கு மேல பல தடவை முயற்சித்து நேற்றைய முந்தையநாள் தான் திருப்பதி போயிட்டு வந்தேன். அடிவாரத்துல இருந்து திருமலைக்கு நடந்தே பயணம். நல்ல தரிசனம்! என்னா அழகு?! அந்த அழகுக்கே கோடி ரூபாய் கொட்டி கொடுக்கலாம். நான் 50 ரூபாய் தான் உண்டியல்ல போட்டேன்.

ஊரே கோவிந்தா கோவிந்தான்னு கத்திக்கிட்டு கடந்துச்சு. அநேகமாக நான் மட்டும் தான் முருகா முருகான்னு முனுகிருப்பேன்னு நினைக்கிறேன். வேங்கடமுடையார் என்ற அழகு தமிழ் பெயர் கல்வெட்டுகளில் பல இடங்களில் சுவரெங்கும் காண முடிந்தது. திருப்பதியை தான் தெலுங்கரிடம் இழந்தோம், எம்பெருமான் முருகனான சேயோனின் திருத்தலத்தையும் மாயோனான பெருமாளிடம் இழந்துவிட்டோம் என்ற வருத்தம் மட்டுமே திரும்பி வருகையில் மிச்சம் இருந்தது; கூடவே பத்து லட்டும்!

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக