கண்ணதாசன் என்றும் நிரந்தரமானவன்!

"எப்படியெல்லாம் வாழக் கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன், ஆகவே, இப்படித்தான் வாழ வேண்டும் என்று புத்தி சொல்லக் கூடிய யோக்கியதை எனக்கு உண்டு" என்று வெளிப்படையாகவே தன்னைப்பற்றி விமர்சனம் செய்து கொண்ட கவியரசர் கண்ணதாசனுக்கு நிகர் அவர் மட்டுமே. தான் எழுதிய சினிமா பாடல்களில், அரசியல், காதல், தத்துவம், ஆன்மிகம், ஜோதிடம், இலக்கியம், அனுபவம் என அனைத்தையுமே விரிவாக வரிகளாக்கிய பெருமை கவியரசரை மட்டுமே சேரும்.

தன்னை கவிஞராக மட்டுமின்றி, நடிகராகவும், இதழாசிரியராகவும் பன்முகத்தன்மையை வெளிக்காட்டியவர். அதிலும் முக்கியமாக சிவகங்கையில் நகரத்தார் பின்புலத்தில் பிறந்து வளர்ந்ததால், சிவகங்கை சீமையை 1780 முதல் 1801 வரை ஆண்ட மாமன்னர் மருதுபாண்டியர்களின் வாழ்க்கை வரலாற்றை பெரும்பொருட்செலவில் 'சிவகங்கை சீமை' என்ற பெயரில் திரைக்காவியத்தையும் தயாரித்து தன் ஊருக்கு பெருமை சேர்த்தவர். மேலும், கவியரசர் எப்போது வெளிநாடு போவதாக இருந்தாலும் அகமுடையார் குலத்தோன்றலான சாண்டோ சின்னப்பா தேவர் வீட்டுக்குப் போய், அவர் பூஜை அறையில் இருக்கும் முருகனை வணங்கிவிட்டுத்தான் செல்வார் என்பதும் குறிப்பிடதக்க விசயம்.

"பாமர ஜாதியில் தனி மனிதன்
நான் படைப்பதனால் என் பேர் இறைவன்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!"

இப்படியாக ஐயாயிரத்துகும் மேற்பட்ட திரைப்பட பாடல்கள் மூலம், தமிழால் தமிழர்கள் மத்தியில் இன்று வரைக்கும் மரணமில்லா பெருவாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும் செட்டிநாட்டு முத்தையாவான கவியரசர் கண்ணதாசனின் இடத்தை நிரப்ப இன்னும் ஒரு கவிஞர் இதுவரை இங்கில்லை.

தான் அனுபவித்த வாழ்க்கையையே ஆய்வு செய்து எழுத்துகளாக்கி, எட்டாவது வரை படித்திருந்தாலும், யாரும் எட்டாத உயரத்தை அடைந்த கவியரசர் கண்ணதாசன் என்ற கவிதை பொக்கிஷம் அவதரித்த 90ம் அகவை நாள் இன்று!

புகழ் வணக்கம்!

- இரா.ச. இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment