03 ஜூன் 2017

தமிழக அரசியலில் வரலாற்றில் தவிர்க்க முடியா பக்கம்!


முள்ளி வாய்க்காலுக்கு முன்பும் சரி; பிறகும் சரி, ஆயிரம் விமர்சனங்களும் துரோகங்களும் இருந்தாலும், ஏறத்தாழ அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இன்று வரை தமிழக அரசியலில் கருணாநிதி என்ற பெயரை உச்சரிக்காமல் அரசியல் பேசாதவர் யாருமில்லை. கருணாநிதியே பேச முடியாமல் ஒதுங்கி இருக்கும் இன்றைக்கும் கூட அவரை விமர்சித்தாவது பதிவுகள் வந்து கொண்டே இருக்கின்றன. இதுபோன்ற எதிர்மறை விமர்சனங்களாலே அரசியலில் வளர்ந்தவர்கள் இங்கே ஏராளம். அந்த வரிசையில் கருணாநிதி என்ற பெயர் என்றைக்கும் தமிழக அரசியலில் இடம்பெற்றே தீரும். எங்களது நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்ற சிறிய கிராமத்திலிருந்து வெறும் மஞ்சள் பையோடு மட்டும் சென்று, உலகளாவிய புகழ் பெற்ற கருணாநிதியின் ஆற்றல் வியப்பிற்குரியது.

தன் பேச்சையும், எழுத்தையும் மட்டுமே முதலீடாக கொண்டு உலக பணக்கார வரிசையில் தன் குடும்பத்தை நிலைநிறுத்திய வல்லமை இனி வேறு யாருக்கும் வாய்க்க போவதில்லை. கடந்த ஐம்பது ஆண்டுகளில் எத்தனையோ பேர் திருட்டு ரயில் ஏறி தினம் தினம் சென்னைக்கு வந்திருக்கலாம். ஆனால் யாருமே மற்றொரு கருணாநிதியாக புகழ் வெளிச்சத்திற்கு வர முடியவில்லை என்பதே எதார்த்தம். நரேந்திர மோடி, பன்னீர்செல்வம், இளையராஜா, ரஜினிகாந்த் போல எளியவர்களும் மிகப்பெரிய உச்சத்தை தொட முடியுமென்ற நம்பிக்கையை அன்றைக்கே விதைத்த கருணாநிதியை புறக்கணித்து விட்டு, தமிழக அரசியலின் முழுமையான வரலாற்று பக்கங்களை ஒருபோதும் நிரப்ப முடியாது.

- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக