11 ஜூன் 2017

216 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்புத்தீவு பிரகடன நிகழ்வு!





மாமன்னர் மருதுபாண்டியர்கள் பிறப்பெடுத்தது அகமுடையார் இனக்குழு என்பதால் அவரை அகமுடையார் இனக்குழுவை சேர்ந்தவர் மட்டுமே உரிமை கொண்டாட வேண்டிய கட்டாயமில்லை. எடுத்துக்காட்டாக, அம்பேத்கர், ஈ.வெ.ரா., வ.உ.சிதம்பரம் பிள்ளை, முத்துராமலிங்கத்தேவர், காமராஜர் போன்றவர்களை தேசிய கட்சிகளும், திராவிட கட்சிகளும், ஹிந்துத்துவ அமைப்புகளும், இன்னபிற புரட்சிகர அமைப்புகளும் பயன்படுத்துகின்றனர்; இப்படி இவர்களை பலரும் பயன்படுத்துவதால் எவ்வித குழப்பமும் யாருக்கும் வந்ததில்லை. எத்தனை பேர் இவர்களின் படங்களையும், பெயர்களையும் பயன்படுத்தினாலும் கூட அவர்களது தனித்த அடையாளம் ஒருபோதும் மாறப்போவதே இல்லை.


தாய் மண்ணில் கோலோச்சிய அந்நியர்களின் அடக்குமுறைக்கு எதிராக, அனைத்து இனக்குழுக்களையும் இணைத்து தான் 'வீரசங்கம்' என்ற அரசியல் கூட்டமைப்பையே மருதுபாண்டியர்கள் உருவாக்கினர். பொது ஆண்டு 1801 ஜுன் மாதம் 12ம் தேதி, ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகிலேயே முதன் முதலாக 'ஜம்புத்தீவு' போர் பிரகடனத்தை 'வீரசங்கம்' என்ற கூட்டமைப்பின் சார்பாக திருச்சி-திருவரங்கத்தில் சின்ன மருதுபாண்டியர் வெளியிட்டார்.

வரலாற்று சிறப்புமிக்க ஜம்புத்தீவு பிரகடனத்தை வெளியிட்டு 216 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை யாரும் கண்டு கொள்ளவே இல்லை என்ற ஏக்கத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைத்திருக்கிறது. ஒரு தலைமுறை என்பது சராசரியாக 33 ஆண்டுகள்; அந்த வகையில் கணக்கிட்டால், ஏறத்தாழ ஏழு தலைமுறைகள் கடந்து, இந்த 2017ம் ஆண்டில் தமிழ்தேசியவீரச்சங்கம் சார்பாக திருச்சி திருவரங்கத்தில் மாபெரும் வரலாற்று மீட்பு நிகழ்வு ஜூன் 12ம் தேதி நடக்கவுள்ளது. மாமன்னர் மருது பாண்டியர்கள் 216 ஆண்டுகளுக்கு முன்பாக, எந்தவொரு குறிப்பிட்ட இனக்குழுவின் அடையாளமுமின்றி 'வீரசங்கம்' என்ற எப்படியான கூட்டமைப்பை உருவாக்கி 'ஜம்புத்தீவு' பிரகடனத்தை வெளியிட்டனரோ, அதே போன்ற நிகழ்வை தமிழ் தேசிய வீரச்சங்கம்அமைப்பினர் மீண்டும் நம் சமகாலத்தில் அந்தவொரு களத்தை உருவாக்கி தந்திருக்கிறார்கள்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக, தமிழ் தேசிய அடையாளத்தோடு அரசியலில் பயணிக்கும் பழ.நெடுமாறன், சீமான், வேல்முருகன், தனியரசு உள்ளிட்ட அனைத்து தமிழ் இனக்குழுவை சேர்ந்த தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். இப்படியான மாபெரும் வரலாற்று மீட்பு நிகழ்வை ஒருங்கிணைக்கும் சகோ. மருதுபாலா உள்ளிட்ட அனைத்து உறவினர்களுக்கு நன்றியும், விழா சிறக்க வாழ்த்துகளும்!

தமிழ் தேசிய அரசியல் மீது நம்பிக்கையுள்ளவர்களும், மாமன்னர் மருதுபாண்டியர்கள் மீது உணர்வுள்ளவர்களும், ஜூன் 12ம் தேதி காலை 8 மணிக்கு திருச்சி திருவரங்கத்தில் ஒன்று கூடுங்கள்; சந்திப்போம்.

- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக