29 டிசம்பர் 2017

சொர்க்க வாசல் (8+2=10)

No automatic alt text available.


எண்களின் தோற்றம் என்பது எண்ணங்களின் பரிணாமத்தில் தான் உருவாகிருக்கிறது. எண்களுக்கும் எண்ணங்களுக்குமான நீண்டவொரு தொடர்பு இருக்கின்றது; அத்தொடர்பை கண்கள் தான் தீர்மானிக்கின்றன. எண்களில் சுழியம் என்பது நம்முடைய கண்டுபிடிப்பென பெருமை பேசிக்கொள்கிறோம். சுழியம் மட்டுமல்ல மீதமுள்ள ஒன்பது எண்களின் வேர்களுமே நம்முடைய கண்டுபிடிப்புகள் தான். சுழியம் என்பதன் அர்த்தம் புரிந்து, அது எதனுளிருந்து உருபெற்றிருக்கும் என்பதை கவனித்தாலே அதன் உள்ளார்ந்த அர்த்தமும் விளங்கும். பொதுவாக ஒவ்வோர் எண்களுக்கும் பின்புலமாக நீண்ட விளக்கங்களும், மறைபொருள் அர்த்தங்களும் அதனுள் கலந்திருக்கின்றன. இப்படியான பல ரகசியங்களை உள்ளுக்குள் வைத்திருக்கும் எண்களில் ஒன்றான எட்டு என்பதை முடிவிலியின் அடையாளமாக எடுத்துக்கொண்டால், இரு சுழியங்களின் கலவையாக அது உருமாறக்கூடும். இவற்றிற்கும் வைகுந்த ஏகாதசிக்கும் என்ன தொடர்பென்று நினைக்க கூடும். இங்கே எதுவுமே தனித்தில்லை; ஒன்றுக்கொன்று தொடர்பிலேயே தான் இருக்கின்றன. அவ்வாறாக எண்களுக்கான தொடர்பை வைகுந்த ஏகாதசியிலும் பார்க்க முடியும்.
பொதுவாக, மார்கழி மாத வளர்பிறை பத்து நாட்களை 'பகல் பத்து' என்றும், அதன் அடுத்த நாள் 'வைகுந்த ஏகாதசி' என்றும், அதனை தொடர்ந்த தேய்பிறை பத்து நாட்களை 'இராப் பத்து' என்றும் வகைபடுத்தி வைத்திருக்கின்றனர். ஏகாதசி என்பதன் பொருள் பதினொன்றாம் நாள் என்பதாகும். ஏனெனில் இரு பத்துகளுக்கும் இடைப்பட்ட நாள் இது என்பதுதான் இங்கு சிறப்பாக போற்றப்படுகிறது. பத்து என்பதை எட்டும் இரண்டுமாக பிரித்து பார்க்க தொடங்கினால் சொர்க்க வாசலின் உண்மைப்பொருள் புரிந்து விடும். உயிரும் உடலுமாக இரண்டற கலந்து இருக்கின்ற தனக்குள்ளேயே மூடிக்கிடக்கும் பத்தாம் வாசலை திறக்க வக்கற்றவர்கள் தான், வைகுண்ட ஏகாதசியன்று பரமபத வாசலைத்தேடி கோவிலெங்கும் வரிசை கட்டி நிற்கின்றனர். இங்கே வைகுண்டம், வைகுந்தம் என இருவாறாக சொல்லப்பட்டாலும் 'வை' என்பதற்கான அர்த்தம் கூர்மை என்பதாகும்; அடுத்து இந்த சங்கு, சக்கரம், நாமம் என்பதெல்லாமும் கூட எண்களின் வெளிப்பாடே. அதை கண்டபடி திரித்து எழுதி குளிர்காய்வதெல்லாம் எண்ணங்களை சிதறடிக்க செய்யும் செயலாகவே பார்க்கிறேன். தேவையானவற்றை தவிர்த்து, எண்ணங்களை கூர்மையாக்கி உங்களின் பார்வையை விரிவிடைய செய்யுங்கள்; எண்ணற்ற உண்மைகள் உங்களுக்குள்ளாகவே புலப்படும்.
சொர்க்க வாசல் திறக்கும் திருநாளாக கொண்டாடப்படும் இந்நாளுக்கு இடைபட்ட இந்த இரு பத்து நாட்களும், 'திருமொழித் திருநாள் - திருவாய்மொழித் திருநாள்' என உயிரெழுத்தும் - மெய்யெழுத்தும் கலந்துருவான எம்மொழி தமிழை கொண்டாடும் விதமாகவும் இணைத்து வழிபாட்டு முறை அமைக்கப்பட்டிருப்பதை அறிந்தவர்கள் வெகுசிலராகத்தான் இருக்கக்கூடும். வழிபடும் விதம் வேறுபட்டாலும் பரம்பொருள் ஒன்றாகவே இருக்கின்றன என்ற உண்மையை உணர்ந்து, பெரியத்திருவடிகள் துணையிருக்க, பத்தாம் வாசலின் புதுவெளிச்சம் எல்லாருக்கும் கிடைக்க பிரபஞ்சம் பேரருள் புரியட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக