02 டிசம்பர் 2017

மதமென்பது...

ஆதித்தமிழனுக்கும் ஹிந்து மதத்துக்கும் சம்பந்தமில்லை. ஆதிசங்கரர் தான் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து ஒன்றாக்கினார். சக்தி வழிபாட்டை சாக்தம் என்றும், முருக வழிபாட்டை கெளமாரம் என்றும், கணபதி வழிபாட்டை கணபத்யம் என்றும், சூரிய வழிபாட்டை செளரம் என்றும், பெருமாள் வழிபாட்டை வைஷ்ணம் என்றும், சிவ வழிபாட்டை சைவம் என்றும் ஆறு வழிபாட்டு குழுக்களை ஒரே வட்டத்திற்குள் அடைத்தார். அதற்கு முன் வரை எல்லாம் வேறு வேறு தான். ஐவகை நில தெய்வங்களான குறிஞ்சி -
(சேயோன்) முருகன் , முல்லை - (மாயோன்) திருமால், மருதம் - இந்திரன், நெய்தல் - வருணன், பாலை - கொற்றவை வழிபாட்டை தான், சமகிருதத்திற்கு முன்னோடியான தமிழ் இலக்கியங்கள் சொல்கின்றன.
ஆதித்தமிழனுக்கு இயற்கை வழிபாடு தான் ஆரம்பத்தில் இருந்தது. பிறகு நெருப்பு, பிறகு ஐம்பெரும்பூத வழிபாடு, முன்னோர் வழிபாடு, குலதெய்வ வழிபாடு, நடுகல் வழிபாடு என்ற நாட்டார் வழிபாடு தான் இருந்தது; இருக்கிறது. இதில் எங்கேயும் ஹிந்து மதம் வராது. பிற்காலங்களில் சமண-பெளத்த ஆதிக்கத்திலிருந்து, காரைக்கால் அம்மையார் மற்றும் சைவ குரவர்கள் நால்வராலும், நாயன்மார்களாலும் தான், இன்றைய சைவ வழிபாடு கூட மீளெடுக்கப்பட்டது. ஆழ்வார்களால் வைணவம் என்ற மாயோன் வழிபாடு கூட மீட்கப்பட்டது. சுடலை மாடன் என்ற நீத்தார் வழிபாடும், கருப்பசாமி என்ற திருமால் வழிபாடும், முனீஸ்வரன் என்ற சிவ வழிபாடும் தான் தமிழர்களுக்கு இருந்தது. இன்னும் சொல்லப்போனால், சிவன் என்பதே ஒரு மன்னன் தான். தென் பாண்டியநாட்டை ஆண்டவன். அதனால் தான் தென்னாடுடைய சிவனானான் அவன். மற்றபடி ஹிந்து என்பது பல மொழி பேசிய, பல இனங்களை கொண்ட பல நூறு சிற்றரசு நாடுகளை ஒன்றிணைத்து ஹிந்தியா என்ற ஒற்றை நாடாக்கிய வல்லபாய் படேலின் யுக்திகளை உள்ளடக்கிய ஒருங்கிணைப்பின் வெளிப்பாடே இது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக