14 டிசம்பர் 2017

சாதி மறுப்பு திருமணத்தின் மறுபக்கம்!

இந்த அரச கொலைக்கு எதிராக பதிவிட அவர்கள் குடும்பம் சார்ந்த குறிப்பிட்ட சாதியான கள்ளர் என்பது காரணமில்லை. பக்கத்து வீடு தீப்பற்றி கொண்டால் நம் வீடும் நாளை பற்றிக்கொள்ளும் என்ற அடிப்படையில் தான் பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றனர். இதில் அகமுடையார் மட்டுமல்ல; திருமணம் என்பதே குடும்ப கெளரவம் சார்ந்தது என்ற அடிப்படையில் வாழும் அனைத்து இனக்குழுக்களும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றனர். குடும்பமென்ற உயரிய அமைப்பின் கெளரவத்தை பாதிக்கும் பிரச்சனையாக பார்க்கும் பெற்றோர்களின் ஆதரவு இல்லாத சாதி மறுப்பு திருமணங்களை எதிர்க்கும் அனைவருமே இந்த நீதிமன்ற கொலையை எதிர்ப்பார்கள்; எதிர்க்கிறார்கள். இதில் முக்குலமும் இல்லை; அதில் அகமுடையாரும் இல்லை.
தானாடாவிட்டாலும் தன் சதை ஆடுமென்ற கணக்கீடெல்லாம் இதற்கு ஒத்து போகாது. அப்படி பார்த்தால், இதே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் வன்னியரும், நாடாரும் கூட இருக்கின்றனர். அவர்களுக்கும் கள்ளருக்கும் என்ன சதை உறவு இருக்கிறது? இதை குறிப்பிட்ட சாதியின் பிரச்சனையாகவோ, சில சாதி கூட்டமைப்புகளின் பிரச்சனையாகவோ பார்க்க வேண்டியதில்லை.
எல்லா சாதிகளிலும் பெரும்பான்மையானோர் சாதி மறுப்பு திருமணங்களை ஏற்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், தன்னுடைய சாதியை சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்வதற்கே இங்கு எதிர்ப்பு தான் அதிகமாக இருக்கிறது. இதில் சாதி மட்டும் பிரச்சனை இல்லை; சாதியோடு சேர்ந்த பொருளாதார நிலையும் தான் ஒவ்வொரு திருமணங்களையும் முடிவு செய்கின்றன. இந்த விசயத்தில் சாதிக்கும் சதைக்கும் சம்பந்தமே இருப்பதில்லை. ஏனெனில் ஒரே இரத்தமும் சதையுமாக பிணைந்துள்ள அதே சாதியில் காதலித்து திருமணம் செய்வதும் கூட இப்போதெல்லாம் எளிதல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக