கச்சா எண்ணெய்யும், கழிசடை அரசியலும்!


மூன்று பக்கம் கடலாலும், ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்ட பகுதியை 'தீபகற்பம்' என்கிறார்கள். இதே போல் மூன்று பக்கமும் கடல் எல்லைகளையே பெரும்பான்மையாக கொண்டிருக்கும் ஹிந்தியா என்ற கூட்டாட்சி நாடும் தீபகற்பமே. ஆனால், அந்த தீபகற்ப நாட்டிற்குட்பட்ட கடலில் கலந்த கச்சா எண்ணெய்யை சுத்திகரிக்க வழி தெரியாமல் கக்கூஸ் வாளியில் கசடுகளை அள்ளி கொண்டிருக்கின்றது வல்லரசாக போகும் ஹிந்திய அரசு.

ஜென் கதை ஒன்றில், கடவுளை கண்டுகொண்டேன் என்ற இறுமாப்போடு சென்ற சீடன் ஒருவன், கடற்கரை ஓரத்தில் ஒரு சிறுவன் தன் கைகளால் கடல் நீரை அள்ளிக்கொண்டு வந்து கரையோர குழியில் நிரப்பிக்கொண்டிருப்பதை பார்ப்பான். அப்போது அச்சிறுவனை இடைமறித்து என்ன செய்கிறாய்? என கேட்கும் போது, நான் கடல்நீரை இரைக்க போகிறேனென சொல்லுவான். அதெப்படி முடியும்? என ஏளனமாக கேட்கும் சீடனை பார்த்து, அந்த சிறுவன் சொல்லுவான்; நீங்கள் மட்டும் கடவுளை கண்டுவிட்டதாக சொல்வது மட்டும் முடிகின்ற காரியமா? என சொல்லி அச்சீடனுக்கு ஆன்மீக உண்மையை புரிய வைப்பான்.

அதுபோலத்தான் ஹிந்திய அரசும், கடல்நீரை குடிநீராக்குவோம்; ஹிந்திய பெருங்கடலை சுற்றியுள்ள நாடுகளை நமக்கு சாதகமாக்குவோம்; கொழும்பு போன்ற அண்டை நாடுகளின் துறைமுகங்களுக்கு கப்பல் விடுவோம்; என சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் செய்ததாக சொல்லி, ஹிந்திய பொருளாதாரத்தை ஐசியூ வார்டில் வைத்து சர்ஜரி செய்து நடைபிணமாக்கி விட்டிருக்கிறார்கள். அதானிகளும், அம்பானிகளும், மல்லையாக்களும் மன்னராக வாழும் இந்த மக்களாட்சி நாட்டில் தான், மதத்தின் பெயரால் பெரும்பான்மை மக்கள் அடிமையாக்கவும் படுகிறார்கள்.

சந்திராயன், ஆதித்யா என செவ்வாய், சூரியன், சந்திரன் என பிரபஞ்சத்திலுள்ள மற்ற கிரகங்களுக்கெல்லாம் செயற்கைகோள்களை செலுத்தி ஆய்வு செய்கின்ற அதே நேரத்தில், நாம் வாழும் பூமி என்ற இந்த கோளில் மூன்றில் இருமடங்கு சூழ்ந்துள்ள கடற்பரப்பை ஆய்வு செய்யவும், மேலும் அந்த கடற்பரப்பில் ஏற்படும் சேதங்களை சரி செய்யவும், கடல்களால் ஏற்படும் பேரழிவை தடுக்கவும், முன்முயற்சி எடுப்பதுதான் ஒரு நல்லரசுக்கான அடையாளம் என்பதை ஹிந்திய ஆட்சியாளர்களுக்கு அந்த பாரத மாதா எப்போது புரிய வைக்க போகிறாளோ தெரியவில்லை.

பாரத் மாதாகி ஜே!

- இரா.ச. இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment