ஆதியோகியின் சிவராத்திரி!

நரேந்திர மோடி இந்த ஹிந்திய கூட்டாட்சி நாட்டின் பிரதமர். ஹிந்துத்துவ சார்புள்ள கட்சியிலிருந்து வந்தவரான மோடி, கோவையிலுள்ள ஜக்கி வாசுதேவ் ஆசிரமத்திற்கு வருவது அவரது கொள்கை சார்ந்த விசயம். அவரை இங்கே வர வேண்டாமென சொல்வது வீண்வேலை.

ஜக்கி வாசுதேவ் ஒன்றும் கடவுளில்லை. ஆனால், அவரை குருவாக எத்தனையோ பேர் இன்று ஏற்றுக்கொண்டு அவரது மார்க்கத்தை பின்பற்றுகிறார்கள். பிறப்பால் கன்னடரான ஜக்கி வாசுதேவ் அவர்களுடைய தாய்மொழி கன்னடமென்றாலும், சமகிருதத்தை தன் மார்க்க மொழியாக்கி கொண்டார். எனவே, அவருக்கு தமிழ் அந்நிய மொழியாக தெரியலாம். அதனாலேயே சிவனுக்கு தமிழ் தெரியாதென அவர் சொல்லிருக்கலாம்.

இங்கே எது சிவன்? என்ற கேள்விக்கு பலதரப்பட்ட பதில்கள் அனைவரிடமும் உண்டு. தமிழ் சங்கங்களில் முதற் சங்கத்தின் தலைவரே சிவன் தானென இலக்கிய தரவுகள் குறிப்பிடுகின்றன. தென்னாடுடைய சிவனே போற்றி என்பதில் கூட ஓர் ஆய்வு செய்திருக்கிறார்கள். கயிலாயம் என்பது இமயமலையே இல்லை; ஆதியில் கயிலாயம் என்பதே குமரிப்பகுதி தானென. கயல்+ஆயம்=கயிலாயம். இப்படியாக பிரித்து கயிலாயம் என்பதே தென்தமிழ்நாட்டின் அருகே தான் இருந்ததென சொல்பவர்களும் இங்குண்டு. அகரம் + உகரம் + மகரம் என்ற மூன்றின் வெளிப்பாடே ஓம்காரம் என்பதின் அடித்தளமாகிறது. இதுவே ஆதிமொழி, தமிழ் என்பதற்கான இயல்பான எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.

"உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்" என்ற பெரியபுராணத்தின் முதற் பாடலை சேக்கிழார் பெருமானுக்கு சிவபெருமானே அடியெடுத்துக் கொடுத்தார் என்பது இலக்கிய சான்றாக அமைகிறது.

திருவாசகத்துக்கு உருகார்; ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது முதுமொழி. சிவனே தன்னுடைய திருக்கரத்தினால் எழுதி, அந்நூலின் திருக்கடைக்காப்புப்பகுதியில், "இவை எழுதியது, அழகிய திருச்சிற்றம்பலமுடையான் எழுத்து" என்று கையெழுத்திட்டு அருளிய நூல் தான் திருவாசகம். இப்படி நிறையவே தமிழ் மொழிக்கும், ஆன்மீகத்திற்குமான நீண்ட தொடர்புண்டு. வள்ளலார், பாம்பன் சுவாமிகள் உள்ளிட்ட பல மகான்கள் தமிழ் மொழியே இறைமொழி என பல இடங்களில் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த அடிப்படை உண்மைகளையெல்லாம் உணராமல், ஆதித்தமிழர்களால் சமைக்கப்பட்ட மொழியான சமகிருதத்தை தலையில் வைத்து கொண்டாடும் அதே வேளையில், செம்மொழியான தமிழை காலில் போட்டு மிதிக்க வேண்டாம்.

"வயநமசி ஹரசிவ
நமயவசி வாசி வாசி
சிவயநம ஓம்!"

இது பாம்பாட்டி சித்தரின் மூலமந்திரம். சிவன் வேறு, சித்தன் வேறல்ல; சிவன் வேறு, சீவன் வேறல்ல.

"உள்ளம் பெருங்கோயில்;
ஊனுடம்பு ஆலயம்;
வள்ளற் பிரானார்க்கு, வாய்க் கோபுர வாசல்;
தெள்ளத் தெளிந்தார்க்கு,
சீவனே சிவலிங்கம்;
கள்ளப் புலன்ஐந்தும்,
காளா மணிவிளக்கே" - திருமந்திரம்.

அருட்பெருஞ்சோதியாக நம்முள் வீற்றிருக்கும் சிவனுக்கு நம்மை தவிர வேற யாராலும் ஓர் உருவத்தை தந்துவிட முடியாது. ஆதியோகியென சிவனை சொல்வது, சிறுமை படுத்தவா? பெருமை படுத்தவாயென தெரியவில்லை. யோகம் என்பதே, பதஞ்சலி சித்தராலேயே எட்டு நிலைகளாக பகுக்கப்பட்டது. அப்படியெனில் ஆதியோகி என்பவர் பதஞ்சலியாகத்தானே இருக்க வேண்டும்.

பொதுவாகவே ஆன்மீகத்தில், சரியை - கிரியை - யோகம் - ஞானம் என நான்கு வித முறைகள் உண்டு. இந்த நான்கு வழிகளில் ஒவ்வொன்றையும் பின்பற்றி இறைவனோடும் சீவனோடும் சிவனாகி போனவர்களே, திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்ற நால்வர்கள்.

சரியை என்ற முதல்நிலையில், தன் உடல் உழைப்பினால் செய்யப்படும் பூசை போன்ற செயல்களாகும். இதற்கு அடுத்துள்ள கிரியை என்பது, குரு உபதேசம் பெற்று மந்திரங்களால் இறைவன தொழுவது. மூன்றாவதாக உள்ள யோகம் என்பது அட்டமான சித்துகளை யோகக்கலையின் மூலமாக வசியப்படுத்தும் வாசி தத்துவம் ஆகும். இந்த வாசி பற்றி சொல்லவே நிறையவே இருக்கிறது. வாசி - சிவா என்ற சொல்லொற்றுமையே அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும். இறுதியாக உள்ள ஞானம் என்ற நிலையே இறைவனை அடையும் இறுதியான உறுதியான நிலை. ஆனால் அந்நிலையை அடைவது தான் அனைவருக்கும் கடினமாக இருக்கிறது. உருவம், அருவம், அருவுருவம் என்ற மூன்று நிலைகளிலுள்ள சிவனை கடந்து தன்னை உணர்தல் தான் ஞானம். இந்த மூன்று நிலைகளுக்கும் சீர்காழி சிவன் கோவில் ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு. இங்கே தான் திருமுலைப்பால் என்ற ஞானம் திருஞானசம்பந்தருக்கு இறைவியால் ஊட்டப்பட்டது.

ஹீலர் பாஸ்கர் அடிக்கடி சொல்லும் அவரது குருவில் ஒருவரான பகவத் ஐயா மட்டுமே இந்த ஞானம் அடைவது எத்தனை எளிய விசயமென விளக்கி இருக்கிறார். ஆனால் அந்த ஞானமென்ற நான்காம் நிலையை அடையக்கூட இரண்டாம் நிலையிலுள்ள கிரியை என்ற குருபதேசம் தேவைப்படும்.

சிவம் என்பது ஐம்பூதங்களில் ஆகாயம்; அந்த வெட்டவெளிக்கு உருவமெல்லாம் ஏதுமில்லை. எனவே நம் புருவ மத்தியில் பூட்டி வைத்திருக்கும் இந்த இறைவனை உணர, ஆதியோகி என்ற சிலையோ, தாடி வைத்த, மொட்டை அடித்த, காவியோ - பச்சையோ - வெள்ளையோ அணிந்த எந்த இடைத்தரகர்களும் தேவையில்லை. இதையேத்தான் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் அன்றைக்கே வள்ளுவர், "மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்" என சொல்லிவிட்டார். ஆனால் அப்படி சொன்ன ஞானிக்கே தாடியை கொடுத்த சமூகம் இது.

ஒருவகையில் பாம்பாட்டி சித்தர் கூட அந்த ஆதி சிவனின் அடையாளம் தான். இவரிடம் வெட்டவெளி தத்துவமும் உண்டு; சிவனின் கழுத்திலுள்ள பாம்பும் இவரிடம் உண்டு. வாசி என்ற யோக நிலையும் இவரிடம் உண்டு. இவரும் என் பார்வையில் ஆதி யோகி தான். அனைத்து சித்தர்களையும் பற்றி விரிவாக பதிவாக்கிய போகர் கூட, "சொல்வதென்றால் பாம்பாட்டி மர்மம் தானே" என அரைகுறையாக முடிக்கிறார். அப்படிப்பட்ட பாம்பாட்டி சித்தர், துவாரகை - மருதமலை - சங்கன் கோவில் - விருத்தாச்சலம் என பல இடங்களில் சமாதியாகி கடைசியாக ஆதிசிவனாக ஐக்கியமானது நாகை மாவட்டத்திலுள்ள (காசியை விட வீசம் அதிகமென சிறப்புப்பெற்ற) ஆதி திருக்கடவூர் திருமயானத்தில் தான். வாய்ப்புள்ளவர்கள் திருக்கடையூரிலிருந்து ஒரு மைல் தொலைவிலுள்ள ஆதியோகியை வணங்கி செல்லுங்கள்.

(பாம்பாட்டி சித்தர் பீடம் - திருக்கடவூர் மயானம், நாகை)

மகா சிவராத்திரி வாழ்த்துகள்!

- இரா.ச. இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment