20 அக்டோபர் 2025

அன்றைய தீபாவளி போல் இன்றில்லை!


    தொன்னூறுகளில், பள்ளிக்கால பதின்மவயது கிராமப்புற சாமனியனுக்கு தீபாவளி என்பது சொர்க்கத்தை காணுமளவுக்கான ஒரு பெருவிழா. கிரைண்டரும், மிக்ஸியும் இல்லாமல் அம்மியும், குடக்கல்லும் ஆக்கிரமித்திருந்த வீடுகளில் எப்போவதாவது தான் மாவரைப்பதால் பண்டிகைகால பலகாரங்களுக்கு இணையாக அப்போதெல்லாம் இட்லியும் இருந்தது. தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து குளித்த பின்னாலும் கலையாத அரைகுறை தூக்கத்தோடு இலை முழுக்க பலங்காரங்களை பரப்பி இட்லி சாப்பிட்டதை இன்று நினைத்தாலும் நாவெங்கும் சுவையாக இருக்கிறது. விதவிதமாய் எதை சாப்பிட்டாலும் இப்போதெல்லாம் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன.

    ட்ரவுசர் கலச்சாரம் முட்டிக்கு மேல் போய்விட்ட இன்றைய நாட்களில் கைலிகளெலாம் வாஷ்டு லுங்கிகளாகி விட்டன. அப்போது இப்படியில்லை; புதிதாய் வாங்கிய கைலியில் மொடமொடப்பு குறையவே ஓரிரு வாரங்களாகும். புது கைலியை மூட்டுவதற்கும் டைலரின் தேவையிருந்தது. ரெடிமேட் ஜவுளிகள் பரவலாக்கப்படாத அன்றைய காலங்களில், மீட்டர் கணக்கில் எடுத்து கொடுத்து, முதல்நாள் நள்ளிரவு வரை தையற்கடை வாசலில் தவமாய் காத்திருக்க வேண்டிருக்கும். கால் கடுக்க நின்றாலும், அடித்து விரட்டாத குறையாக டைலர் கடையை விட்டு போக சொல்லி பார்ப்பார்கள். ஒருவழியாய் பட்டன் கட்டி, அயர்னிங் செய்த பின்னால், கெஞ்சி கூத்தாடி அரைகுறையாய் அவசரகதியில் தைத்த புதிய சட்டையை வாங்கி முகர்ந்து பார்க்கும் போது வரும் வாடைக்கு இணையாக எந்த போதையுமில்லை. மஞ்சள் வைத்த காலரோரத்தை தூக்கி விட்டு ஊசி வெடி, லெட்சுமி வெடியென சரம் சரமாய் வெடித்தாலும், வெறும் மத்தாப்பு துளிகள் பட்டு ஓட்டை விழுந்த புதுச்சட்டைக்காக முதுகில் விழுந்த அடிகள் இன்றைக்கும் நினைவில் இருக்கின்றன. அந்த அடியை விட சட்டை ஓட்டையானது தான் பெரும்வலியாக இருக்கும். இப்போதெல்லாம் ஆயிரக்கணக்கில் எடுத்த பிராண்டட் புதுச்சட்டையை உடனே போட பெரிதாய் எவ்வித ஆர்வமும் மனதிற்கில்லை, கைலியும் பனியனுமே போதுமானதாக இருக்கிறது.

    வெடிக்கடையில் ஐநூறு ரூபாய்க்கு வெடி வாங்கினாலே பெரிய விசயமாக இருந்தது. அதை சரி பங்காக ஆளாளுக்கு பிரித்து, காய வைத்து ஒவ்வொரு வெடியாய் ஒரு வாரம் முழுக்க வெடித்ததெல்லாம் இன்னமும் பசுமையாய் இருக்கிறது. ஒரு வாரமாக போட்டி போட்டு வெடித்த குப்பைகளை கூட அம்மாவை கூட்டி அள்ளவிடாமல், தீபாவளிக்கு அடுத்த நாளெங்கும் தெருத்தெருவாய் ஊர்சுற்றி வலம் வரும் போது எவ்வளவு வெடித்தாள்கள் நம் வீட்டு வாசலில் சிதறிக்கிடக்கின்றன என்பதை ஒப்பீட்டு சக தோழமைகளுடன் பெருமைப்பீற்றிக் கொண்ட காலமது. இப்போதெல்லாம் நேரடியாக சிவகாசியிலிருந்து ஆன்லைனில் ஆயிரக்கணக்கில் ஆர்டர் போட்ட வெடியில் ஒரு திரியை கூட பற்றவைக்க துளி கூட விருப்பம் இருப்பதில்லை.

    தமிழ்ராக்கர்ஸ், மூவீஸ்டா இல்லாத அன்றைய தீபாவளி நாட்களில் புதிதாய் வந்திருக்கும் திரைப்படத்தை காண தியேட்டரெங்கும் அலைமோதும் கூட்டங்கள் பெருமளவில் இப்போதில்லை. இன்னும் சொல்வதென்றால் ஊரே கொண்டாடிய தியேட்டர்களும் இப்போதில்லை. மூவி ரிவியூவர்ஸ்களின் எண்ணிக்கை அளவுக்கு கூட சிறுநகரங்களில் தியேட்டர்கள் இல்லை.

 அப்போதெல்லாம் திருப்பூர் சென்னையென வெளியூர் வேலைக்கு சென்றவரெல்லாம் அடையாளந் தெரியாதளவுக்கு ஆளே கொஞ்சம் மாறியிருப்பதால் பண்டிகை நாட்களில் ஊரெங்கும் கண்ணில் தென்படும் பலரை சட்டென எனக்கு தெரியாமல் போனது வியப்பாகத்தான் இருந்தது. பல வருடங்களாக அந்த ஊர் பக்கமே செல்லாததால் என்னை யாருக்கும் இப்போது தெரியாதென்பதில் கொஞ்சம் கூட எனக்கு வியப்பேதுமில்லை. ஓடி விளையாடிய பால்ய நினைவுகள் முழுவதும் நிரம்பியிருந்த அந்த மண்சுவரிலான வீட்டையும் விற்ற பிறகு, எங்கள் வீடிருந்த இடத்தில் புதியதொரு மாடி வீடு இருந்தால் அதை பார்த்து பூரித்து போகவா முடியும்? எங்களெக்கென வீடு இருந்ததை நினைத்து, வீடு இழந்ததை நினைத்து, இப்படியாக பலவற்றை நினைத்து பூரித்து போகவா முடியும் என்பது வேறு கதை.

  அன்றைய நாட்கள் போல கடைசி நொடியில் பணம் புரட்டி தீபாவளி விடிந்தும், கெளரவத்திற்காக மச்சான் வீட்டில் வரிசை வைத்து கொண்டிருக்கும் அண்ணன் தம்பிகளை இன்று காண முடியவில்லை. ஜி பே, ஃபோன் பே என பேமண்ட் ஆப்ஸ்களே தபால்காரர்களாக மாறிவிட்ட பின்னால் மிச்ச சொச்சமிருந்த மனி ஆர்டர் அனுப்பும் பழக்கமும் மலையேறி போய்விட்டன.

   இன்னும் சொல்வதென்றால், அத்திப்பட்டி போல பல கிராமங்களே காணாமல் போய்விட்டன; மிச்சமிருப்பவைகளும் பழைய கொண்டாட்டங்களின்றி, சொந்த பந்த உறவுகளின்றி சிறு சிறு நகரங்களாக சிதறிக்கிடக்கின்றன; பகை தான் மிச்சமென வைத்திருக்கும் புது பணக்காரர்களாக உருவெடுத்த பல குடும்பங்களில் உறவாடவும் நேரமில்லை. ஹாலிடே ட்ரிப் என ஊர்சுற்றவும் நேரமில்லை. ஆக, தீபாவளி என்பதும் ஒரு விடுமுறை நாளே ஒழிய, பெரிதாய் கொண்டாட யாருக்கும் ஏதுமில்லை. ஏனெனில், அன்றைய தீபாவளி போல் இன்றில்லை!

- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக