10 பிப்ரவரி 2014

என் பார்வையில் ஹிந்து மதம்!




இளையராஜாவின் மகனே இசுலாமுக்கு மாறிவிட்டாரே! என்பது போன்ற பெருமைவாத பேச்சுகளிலோ, இளையராஜாவின் மகன் இசுலாமுக்கு மாறலாமா? என்பது போன்ற சிறுமைபடுத்தும் பேச்சுகளிலோ எனக்கு உடன்பாடில்லை. இளையராஜாவோ - யுவன்சங்கர் ராஜாவோ, எந்தவொரு தனிமனிதனை நம்பியும் எந்த மதமும் இல்லை. குறிப்பாக உலகிலேயே அதிகமான மதமாற்றங்கள் நடைப்பெற்று இருக்கும் ஒரே மதம், ஹிந்து மதமாகத்தான் இருக்கக்கூடும்.

மதம் எனது இறைவனை வழிபட வேண்டிய ஒரு வழிமுறை அல்லது மார்க்கம். எல்லா மதங்களிலும், சாமனியனுக்கும் இறைவனை அடையாளப்படுத்துவதே முதற் நோக்கமாக இருக்கின்றது. அப்படிப்பட்ட உயரிய நோக்கத்தை அடைய, ஆசை வார்த்தை காட்டியோ - பயத்தை ஏற்படுத்தியோ மதமாற்றத்தால் செய்ய வேண்டிய அவசியம் உண்மையான ஆன்மீக சிந்தனை உள்ளவர்களுக்கு தேவையில்லை. ஆனால், இங்கே பெரும்பாலான மதமாற்றங்கள், இப்படிப்பட்ட தரம் தாழ்ந்த யுக்திகளை கையாண்டே நடைப்பெற்று கொண்டிருக்கின்றன என்பது வேதனையான விசயம்.

இங்கே, நடைப்பெற்று கொண்டிருக்கும் அநேக மதமாற்றங்கள் ஹிந்து மதத்தை குறிவைத்தே நடைபெறுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. அறிவியலும் - கலச்சாரமும் - பழமைவாதமும் - விஞ்ஞானமும் - மெய்ஞானமும் ஒருசேர கலந்திருப்பது ஹிந்து மார்க்கத்தில் மட்டும் என்பதுதான் குறிப்பிடதக்க விசயமாகும். மேலும், ஹிந்து மார்க்கத்தை குறை சொல்லும் பலர் வைக்கும் குற்றச்சாட்டு உருவ வழிபாடு என்பதைத்தான்.


ஹிந்து மார்க்கத்தில், இயற்கையை கடவுளாக வணங்கிய பாமரனுக்கும் உணர்த்தும் வகையில் தான், உருவ வழிபாட்டு முறை கொண்டு வரப்பட்டது. இலக்கு என்பதை நிர்ணயிக்கும் போதுதான் அதை அடைய முடியும். அதுபோலவே, இறைவன் என்ற ஆன்ம இலக்கை அடைய சிலை வழிபாடும் தேவைப்பட்டது. உதாரணமாக கல்வியை எடுத்து கொண்டால், இங்கே யாரும் எடுத்த உடனேயே பி.ஹச்.டி என்ற முனைவர் பட்டம் வாங்கிவிடுவதில்லை. பால்ய கல்வியில் தொடங்கி பள்ளி/ கல்லூரிக்கல்வியென பலதரப்பட்ட நிலையை கடந்த பின்னால்தான் முனைவர் ஆக முடிகிறது. இந்த ஏட்டு கல்விக்கே இத்தனை படிநிலைகள் தேவைப்படும் போது, இறைநிலை என்ற மாபெரும் உச்சத்தை அடைய, அதன் அறிவை பெற இலகுவான படிநிலை யுக்திகளும் தேவைப்படுகின்றன. அதனால் தான் இந்த உருவ வழிபாடும் உருவானது.

சனி கிரகம் கருமை நிறமாக இருக்கும்; செவ்வாய் கிரகம் சிவந்த நிறத்தில் இருக்கும்; வெள்ளி கிரகம் வெண்மை நிறத்தில் இருக்கும் என்பதெல்லாம் இப்போதுள்ள விஞ்ஞானம் சமீப காலங்களில் கண்டறிந்திருக்கலாம். ஆனால், அன்றைக்கே ஹிந்து மார்க்கம், நவகிரக சிலைவழிபாட்டை ஒவ்வொரு கோவில்களிலும் உருவாக்கி, அங்கே ஒவ்வொரு கிரகத்திற்கும் உரிய நிறத்தையே அந்த சிலைகளின் உடையலங்காரமாக்கி, எளியவனுக்கும் புரியும் வண்ணம் பரம்பொருள் அறிவையும் - பிரபஞ்ச அறிவையும் உணர வைத்தது என்பதை நினைக்கையில் பெருமிதமாக இருக்கிறது.


கோவில் கருவறையில் சிலையை வணங்கினாலும், சூடம் காண்பிக்கும் போதுதான் உச்சக்கட்ட வேண்டுதல் நடைபெறும். ஏனெனில், அப்போதுதான் மூலவர் சிலைக்கு தீபம் காண்பிக்கப்படும். அந்த சில நொடிகள் இருகரம் கூப்பி வணங்கும்போது, சிலை மட்டும் தெரிவதில்லை. அந்த சிலைக்கு முன்னால் காண்பிக்கப்படும் அந்த தீப ஒளியையும் சேர்த்துதான் வணங்குகிறோம். ந - ம - சி - வ - ய என்ற இந்த ஐந்தெழுத்து ரகசியத்தை, நிலம் - நீர் - நெருப்பு - காற்று - ஆகாயம் என்ற ஐம்பெரும் பூதங்களையும், கண் - காது - மூக்கு - வாய் - மெய் என்ற ஐந்துறுப்புகளையும் ஒருசேர இணைத்து அறிய முற்படும் போதுதான், உண்மையான உச்சக்கட்ட இறைநிலையை உணரமுடியும். ஏனெனில் அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும் என்று அன்றைக்கே ஒரே வரியில் எளிய முறையில் ஹிந்துமதம் விளக்கம் சொல்லிவிட்டது.

சிதம்பர நடராசனின் நடன தத்துவம்தான், புரோட்டான் - நியூட்ரான் - எலக்ட்ரான் என்ற அணுக்களின் அசைவு என்பதை, போஸான் என்ற விஞ்ஞான தத்துவமே ஒத்து கொண்டு விட்டது. மேலும், கோவில்களில் நடைபெறும் அபிஷேகம் என்பதில் கூட பலதரபட்ட அறிவியல் இருக்கிறது. பால், தயிர், எலும்பிச்சையென எல்லா முறையிலான அபிஷேகத்தின் மூலமும், லாக்டிக் - சிட்ரிக் என்று ஒரு வேதியியல் மாற்றமும் நடைபெறுகிறது. திருநீரை நெற்றியில் வைப்பதின் உள்நோக்கமே, புருவமத்தியில் சக்தி இருப்பதையும், அழியக்கூடிய இந்த பூதஉடல்தான் 'நான்' என்று நம்பிக்கொண்டு போலியான மாயையில் வாழ்வதையும் தான், நமக்கு மறைமுகமாக உணர்த்துகிறது. இந்த சீவன்தான் ஒருநாள் சிவனாகவும் மாறும் என்ற உயரிய தத்துவத்தை பலவித படிநிலைகளோடு எம் ஹிந்துமதம் சொல்லிக்கொண்டாலும், அதை புரியாத பலர் ஹிந்து என்பதை வெறும் மதமாக மட்டுமே பார்த்து கொண்டிருக்கின்றனர் வேதனையான ஒன்று. எனவே, இறைவனை உணர, ஹிந்துவாகவோ - இசுலாமாகவோ - கிருஸ்துவனாகவோ இருக்க வேண்டிய கட்டாயமில்லை. ஏனெனில், கடவுள் - மதத்திலோ, வெளியிலோ இல்லை. இந்த பிரபஞ்ச வெளியில் ஒட்டுமொத்தமாகவும் கடவுள் கலந்திருக்கிறார். அதை உணர, முதலில் நீ உன்னுள் கடந்து வா, (கட+வுள் கடவுள் இருக்கிறார் என்பதை அறிவாய்! என்பதுதான் ஹிந்துமதத்தின் எளிய கோட்பாடு.


திலீப்குமார், ஏ.ஆர்.ரஹ்மான ஆனார்; பெரியார்தாசன், அப்துல்லா ஆனார்; யுவன்சங்கர்ராஜா என்னவாக போகிறார் என்பது, எம்பெருமான் முருகனுக்கே வெளிச்சம்!
- இரா.ச.இமலாதித்தன்

2 கருத்துகள்:

  1. அருமையான பதிவு.
    சரியான புரிதலை நோக்கி பயணிக்க உதவும் கருத்துக்கள்.
    வணங்கிப் பணிகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. மதம் என்பது என்ன ? என்பதை பாமரனும் அறியும் வண்ணம் சொல்லியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.
    -Killergee

    பதிலளிநீக்கு