07 நவம்பர் 2015

இமலாதித்தவியல் (ஆக - நவ 2015)

சூழ்நிலையை மட்டும் காரணம் சொல்லி தப்பித்து கொள்வதை விட, இதுநாள் வரை நமக்கு இந்த வாழ்க்கை கற்று கொடுத்த அனுபவங்களை கொண்டு நமக்கான ஒரு சூழ்நிலையை உருவாக்கி கொள்வதே வெற்றி பெற எளிதான ஒரே வழி!


ரத்த சொந்தங்களையெல்லாம் எதிரிகளாக்கி விட்டு உறவினர்களின் திருமண வீட்டிலோ, நெருங்கியவர்களின் துக்க வீட்டிலோ பார்த்தும் பார்க்காதது போல் கடந்து செல்லும் காலம் இது. பெத்தெடுத்த தாய் தகப்பனை கூட சம்பாரிக்க ஆரம்பித்த பிறகு தனக்கெல்லாம் தெரியுமென கடுஞ்சொல்லால் காயப்படுத்தி விட்டு, பொதுவெளியில் வேடம் தரித்து உலவும் உலகம் இது. இந்த போலிகள் சூழ் வாழ்வில் உண்மையை எளிதாக உணரவே முடியாது. பொய்யாக வாழ்வது தான் எளிது.

தனித்து இருப்பதற்கும், தனிமையாய் இருப்பதற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில், தனித்திருத்தல் நம்மை உலகறிய வைக்கும்;தனிமை நம்மையே உணர வைக்கும்!

இருக்கும் வரையிலும் அதன் அருமை புரியாமல், இழந்த பின்னால் வருந்த வைக்கும் எல்லா விசயங்களுக்கு பின்னாலும் ஈகோ மட்டுமே ஒளிந்திருக்கிறது!

தான் அடைந்த அவமதிப்புகளையும், புறக்கணிப்புகளையும் மறக்காமல் மனதினுள் சேமித்து வைத்தவர்களுக்கு, வாழ்க்கையின் மிகப்பெரிய உச்சத்தை தொட்ட பின்னாலும் தலைக்கணமும், புகழ்போதையும் வருவதேயில்லை!

எண்ணங்களுக்கு தான் எத்தனை வலிமை? எதையும் தன் வசப்படுத்த முதலில் உங்கள் எண்ணங்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்து, அதை தீவிரமாக நம்புங்கள். இந்த உலகமே உங்கள் வசமாகும்!

மிகப்பெரிய அளவிலான தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு பதில் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. ஒருவேளை பதில் கொடுக்க தோன்றினால், 'அமைதி' தான் ஆகச்சிறந்த பதில். கூடவே, அன்றாட வேலையை தொடர்ச்சியாக செய்து இயல்பாகவே இருப்பதும் தான்.

வெளிப்படை தன்மையில்லாத உண்மைகளும், தனக்கான முன்னுரிமை கொடுக்காத புறக்கணிப்புகளும், இருவர் பயணிக்கும் அன்பின் பாதையை ஒருநாள் பழுதாக்க கூடும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக